வியாழன், 8 மார்ச், 2018

சீனாவுடனான உறவு மீது கவனம் செலுத்தும் இந்தியா, டெல்லியில் திபெத்தியர்கள் பேரணிக்கு தடை விதிப்பு

சீனாவுடனான உறவில் கவனம் செலுத்தும் இந்தியா, டெல்லியில் திபெத்தியர்கள் பேரணிக்கு தடை விதித்து உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது. #China #TibetansRally

புதுடெல்லி,

டோக்லாமில் சீன ராணுவம் அத்துமீறியதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது, இதனால் அங்கு மோதல் போக்கு நேரிட்டது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்திய தலைவர்கள், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்வதற்கு தொடர்ச்சியாக சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கும் சீனா எதிர்ப்பை தெரிவித்தது. சீனாவிற்கு பதிலளித்து உள்ள இந்தியா, எங்களுடைய தலைவர்கள், மக்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல உரிமை உள்ளது என்றது.

இந்நிலையில் சீனாவுடனான உறவில் கவனம் செலுத்தும் இந்தியா, டெல்லியில் திபெத்தியர்கள் பேரணிக்கு தடை விதித்து உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

டெல்லியில் திபெத்தியர்கள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படாது என வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை தகவல்கள் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

 எல்லைத் தாண்டிய திபெத்திய அரசு தரமசலாவில் நடக்கிறது. அவர்கள் அங்கு பேரணியை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பேசுகையில், “திபெத்தியர்கள் புதுடெல்லியில் சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் விரும்பவில்லை, இது இருதரப்பு இடையே பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இப்போது இந்தியா மற்றும் சீனா உறவில் மிகவும் பதட்டமான காலம் நீடிக்கிறது, நாங்கள் பதட்டத்தை தணிக்கவே விரும்புகிறோம்,” என கூறினார் என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

திபெத்திய தலைவர் தலாய்லாமாவை பின்பற்றுபவர்கள் தரமசாலாவில் மட்டுமே நிகழ்ச்சியை நடத்த முடியும், போராட்டம் நடத்த முடியும் என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரி மீடியாவிடம் பேசுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர் கிடையாது என தன்னுடைய அடையாளத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தர்மசாலாவில் உள்ள திபெத்திய சமூகத்தினரின் பிரதிநிதி டோர்ஜி கயால்சென், புதுடெல்லியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அரங்கமானது மாற்றப்படும் என உறுதிசெய்து உள்ளார் எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.