திங்கள், 19 மார்ச், 2018

தொடர்ந்து 2-வது முறையாக சீன அதிபராக ஜின்பிங் பதவி ஏற்றார் : வாழ்நாள் முழுவதும் பதவி வகிக்க வாய்ப்பு

தொடர்ந்து 2-வது முறையாக சீன அதிபராக ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றார். அவர் வாழ்நாள் முழுவதும் பதவி வகிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

பீஜிங்,

மா சேதுங் - ஜின்பிங்

சீன நாட்டை உருவாக்கிய மா சேதுங், அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தார். 1949-ம் ஆண்டில் இருந்து 1976-ம் ஆண்டு அவர் மரணம் அடைகிறவரையில் சீனாவில் ஆட்சி செய்தார்.

அவருக்கு பின்னர் இப்போது ஜின்பிங் (வயது 64), அவரைப் போன்றதொரு வலிமை வாய்ந்த தலைவராக உருவாகி வருகிறார்.

2-வது முறையாக...

5 ஆண்டு அதிபர் பதவிக்காலம் முடிந்த நிலையில், தொடர்ந்து 2-வது முறையாக சீன நாடாளுமன்றத்தால் அவர் அதிபர் பதவிக்கு நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், சீன ராணுவ கமிஷனின் தலைவராகவும் அவர் நேற்று தேர்வு ஆனார்.

ஏற்கனவே ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கட்சி மாநாட்டில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

ஆக, இப்போது அவர் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர், 20 லட்சம் பேரை கொண்ட சீன ராணுவ கமிஷனின் தலைவர், நாட்டின் அதிபர் என முப்பதவிகளை அலங்கரிக்கிறார். அவர் இன்றி சீனாவில் அணுவும் அசையாது என்ற நிலையை உருவாக்கி விட்டார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு, அதாவது, 2023-ம் ஆண்டு வரை அவர் பதவி வகிப்பார்.

வாழ்நாள் பதவி

அத்துடனும் அவர் பதவிக்காலம் நிறைவுக்கு வராது.

அங்கு 2 முறை மட்டுமே ஒருவர் அதிபர் பதவி வகிக்க முடியும் என்று இருந்த அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவி வகிக்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்தம், கடந்த 11-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனவே அவர் மா சேதுங் போலவே வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவி வகிக்க வாய்ப்பு உள்ளது.

ஓட்டெடுப்பு

2-வது முறையாக ஜின்பிங் அதிபர் பதவி ஏற்க வகை செய்வதற்கு நேற்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் அவருக்கு ஆதரவாக 2,969 ஓட்டுகள் விழுந்தன. எதிராக ஒரே ஒரு ஓட்டு மட்டுமே விழுந்தது. சீன அரசியல் அமைப்பு, பன்முகத்தன்மை கொண்டது என்பதை காட்டுவதற்காகத்தான் ஒரு எதிர்ப்பு ஓட்டு அனுமதிக்கப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஜின் பிங்குடன் அவரது தீவிர ஆதரவாளரான வாங் கிஷான் (69) துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து சீன அதிபராக ஜின் பிங், திருத்தி அமைக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் பேரால், நேற்று பதவி ஏற்றார். வாங் கிஷானும் துணை அதிபராக பதவி ஏற்றார்.

ஜின் பிங்கின் மற்றொரு ஆதரவாளரான லி ஜான்சு, நாடாளுமன்றத்தின் தலைவர் ஆனார்.

துணை அதிபராக பதவி ஏற்ற வாங் கிஷான், கடந்த 5 ஆண்டுகளாக ஜின்பிங் அறிமுகப்படுத்திய ஊழலற்ற நிர்வாகம் என்ற கொள்கையை தாரக மந்திரமாக பின்பற்றி, ஊழல்வாதிகளை ஒடுக்கினார். 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளும், 100-க்கும் மேற்பட்ட மந்திரிகளும், ராணுவ உயர் அதிகாரிகளும் இவரால் நடவடிக்கைக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.