சனி, 10 மார்ச், 2018

தமிழக காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் தமிழக வனத்துறை நடவடிக்கை

அழிந்து வரும் அரிதான இனங்களை பாதுகாக்க தமிழக காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் அமைக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அழிந்து வரும் அரிதான இனங்களை பாதுகாக்க தமிழக காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் அமைக்க தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து தமிழக வனத்துறை தலைமை வனபாதுகாவலர் உதயன் கூறியதாவது:-

தமிழக காடுகளில் உள்ள வளங்களை மேலாண்மை செய்வதற்காக ‘பல்லுயிர் வாரியம்’ அமைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார மர வளங்களை கண்டறிந்து அவற்றின் வள ஆதாரங்களை மேம்படுத்துவதே மாநில வனவியல் திட்டத்தின் நோக்கமாகும்.

இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்காக, அரிதான மற்றும் அழியும் நிலையில் உள்ள இனங்களை பேணி பாதுகாத்தல், வனத்தின் மறுசீரமைப்பு மற்றும் தர மேம்பாடு ஆகியவை மாநில வனத்தின் பல்லுயிரினை செறிவூட்டுதலுக்கு நோக்கங்களாக அமைந்துள்ளன.

தமிழகத்தில் 30.92 சதவீதம் வனப்பரப்பாகும். அதாவது சுமார் 7 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியின் கீழ் வருகிறது. களக்காடு, முண்டந்துறை, ஆணைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய விலங்குகள் காப்பகங்கள் தவிர, 5 தேசிய பூங்காக்கள், 15 வன உயிரின சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 2 பாதுகாக்கப்பட்ட ஒதுக்கு பகுதிகள் ஆகியவை இதில் அடங்கி உள்ளன.

நீலகிரி, மன்னார் வளைகுடா, அகஸ்தியர்மலை ஆகிய 3 உயிர்கோள் காப்பகங்கள் சர்வதேச அளவில் உயிர்ப்பன்மை செழுமைக்கு பெயர் பெற்றுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உலகின் 25 முக்கியமான உயிர்ப்பன்மை தலங்களில் ஒன்றாகும்.

இந்த வனஉயிரின செல்வங்களை மேம்படுத்துவதற்காக உயிரினங்களின் சுற்றுச்சூழல் தேவைகள் மற்றும் நிலப்பரப்பு சார்ந்த சீர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வனஉயிரினங்களும், வனப்பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள காடுகளில் அழிந்து வரும் அரிதான இனங்களை பாதுகாக்க காடுகளை மரபியல் ரீதியாக மாற்ற 385 குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 7 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்வு செய்து கலெக்டருக்கு பரிந்துரை செய்வார். இறுதி தேர்வு பட்டியலை கலெக்டர் வெளியிடுவார். இந்த குழுக்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது வனப்பகுதி மேம்படுவதுடன், வனத்தை சுற்றி வசிப்பவர்களின் வாழ்க்கை தரமும் உயரும். ‘அணுகுதல் மற்றும் பயன்களை சமபங்கிடுதல் கூட்டுத்திட்டம்’ என்ற தமிழக வனம் தொடர்பான திட்டம் ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.