சனி, 23 நவம்பர், 2019

சிதைந்து கொண்டிருக்கும் ஹாங்காங்!

போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல் ஓயாததால், வன்முறைக் களமாக மாறியிருக்கிறது ஹாங்காங். எனினும், போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், என எச்சரித்துள்ளனர் போலீசார்.

ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில், மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய மசோதா திரும்ப பெறப்பட்டது. ஆனாலும் மக்களின் போராட்டம் 6 மாதங்களை கடந்து இன்றளவும் ஓய்ந்தபாடில்லை.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு, முழு சுதந்திரம் வழங்க கோரி, போராட்டம் நீடிக்கிறது. ஹாங்காங்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு, போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து, அப்புறப்படுத்த முயன்ற போலீசார் மீது, போராட்டக்காரர்களை பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும், போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால், வன்முறை களமாக மாறியிருக்கிறது ஹாங்காங்.போராட்டத்தை கைவிட மறுத்ததால், பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை, விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டம் உலகளவில் எதிரொலித்துள்ள நிலையில், அதை தீவிரமாக கண்காணித்து வருவதாக, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில், மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மேரீஸ் பெய்ன் கேட்டுக் கொண்டுள்ளார். ஜனநாயகத்தை வலியுறுத்தி, 6 மாதங்களாக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தை, கட்டுப்படுத்த முடியாமல், ஹாங்காங் அரசு திணறி வருகிறது.

திங்கள், 18 நவம்பர், 2019

அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை: – சுமந்திரன்

எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது. இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.