வெள்ளி, 16 மார்ச், 2018

பாட்டிலில் அடைக்கப்படும் குடிநீரில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் - புலனாய்வில் கண்டுபிடிப்பு

பாட்டிலில் அடைக்கப்படும் குடிநீரில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. #BottledWater #MicroPlastic

வாஷிங்டன்னை தலைமையகமாக கொண்டு செயல்படும் ‘Orb Media’ செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஒரு பாட்டில் தண்ணீரில் டஜன் கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைக்ரோஸ்கோபிக் பிளாஸ்டிக் துகள்கள் கூட இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அளவில் மக்களிடம் பிரபலமாக உள்ள நிறுவனங்களின் 250 குடிநீர் பாட்டில்கள் இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. குடிநீர் பாட்டில்கள் அமெரிக்காவின் பெர்டோனியாவில் உள்ள நியூயார்க் பல்கலைகழகத்தில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீர் மிகவும் தூய்மையானது என்பது சாராம்சமாக கொண்டு சந்தைப்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்துவரும் மார்க்கெட்டாகவும் காணப்படுகிறது, குடிநீர் சந்தைப்படுத்தல் உலகில் வருடத்திற்கு 147 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்குரியதாக இருந்து வருகிறது. பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் மிகவும் தூய்மையானது என்ற எண்ணம் உள்ள நிலையில், ‘Orb Media’ செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் மாறாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது  ஒரு பாட்டில் குடிநீரில் டஜன் கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைக்ரோஸ்கோபிக் பிளாஸ்டிக் துகள்கள் கூட இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

பிளாஸ்டிக் துகள்கள் உள்பட பாலிப்ரொப்பிலீன், நைலான் மற்றும் பாலிதிலினெ தெரபத்தலேட் (PET) உள்ளிட்டவை இருந்து உள்ளது. ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகிய நிலையில் இருநிறுவனங்களை செய்தியாளர்கள் அணுகிய போது குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதை ஒப்புக்கொண்டன, ஆனால் நிறுவனங்கள் தரப்பில் ஆர்பின் ஆய்வில் கணிசமான அளவு அவை மிகைப்படுத்தி காட்டப்படுகிறது என கூறிஉள்ளனர். உலகம் முழுவதும் எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவித மாதிரிகளில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கான இயக்குநர் எரிக் சொல்கிம் பேசுகையில், “இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது,” என கூறிஉள்ளார். இண்டியானாவில் எப்போதும் பாட்டில் குடிநீர் மட்டும் குடிக்கும் பெக்கி அப்தார் பேசுகையில், “உலகம் எங்கு சென்றுக்கொண்டிருக்கிறது? நம்மால் சுத்தமான குடிநீரை கூட பெற முடியாதா? என ஆதங்கத்துடன் கேள்வியை எழுப்பி உள்ளார். ஆய்வு தொடர்பான செய்தியானது உலகம் முழுவதும் பாட்டில் குடிநீர் குடிக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்து உள்ளது.

உலகம் முழுவதும் நல்ல குடிநீர் கிடைக்காத 2.1 பில்லியன் மக்களுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரே வரமாக அமைகிறது. ஐ.நா.வின் தகவல்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் குழந்தைகள் குடிநீர் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். நல்ல குடிநீர் கிடைக்காத அதிகமானோர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குடிநீரையே பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பாட்டில் குடிநீர் தூய்மையானது, வசதியானது அல்லது ருசியானது என்ற நிலையில் குடித்து வருகிறார்கள். இவ்வாறு பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் அளவு வருடத்தில் 300 மில்லியன் லிட்டராக விரைவில் உயரும். 

இப்போது குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ள நிலையில் விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்கங்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். இப்போது வெளியாகி உள்ள ஆய்வு தகவல் தொடர்பாக உலக சுகாதார மையம் ஆய்வை தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், ‘Orb Media’ செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வு, சுமார் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கூறுகிறது, கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் மனித முடியின் அகலத்தை விட பெரியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிபிசியிடம் பேசிய ஆய்வாளர்கள், ஒவ்வொரு குடிநீர் பாட்டில்களிலும், நிறுவனங்களின் பாட்டில்களிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். இது குறிப்பிட்ட நிறுவனங்களை சுட்டிக் காட்டுவதற்காக குறிப்பிடப்படவில்லை. 

உண்மையாக இது எல்லா இடத்திலும் உள்ளது என்பதை காட்டுகிறது. நமது சமூகத்தில் பிளாஸ்டிக் ஒரு பரவலான பொருளாக மாறி உள்ளது'' என்று கூறி உள்ளனர். குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் என்பது விஞ்ஞான ரீதியாக அதன் அக்கறைக்குரியது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் பாட்டில் நிறுவனங்கள் மிகவும் பாதுகாப்பான நிலையை பின்பற்றுவதாக கூறிஉள்ளனர் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுபோன்ற பிளாஸ்டிக் அளவானது மனித உடலுக்கு தீங்கிழைக்குமா? என்பது தொடர்பாக அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர் என செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.