சனி, 10 மார்ச், 2018

ஏன் இத்தனை சமயங்கள்?

உலகில் இத்தனை சமயங்கள் தோன்ற காரணமென்ன

உலகத்தில் சமயங்கள் என பார்க்கும் போது முக்கியமானவையாக ஏழு சமயங்கள் உண்டு. அதாவது:

* ஹிந்து
* பார்ஸி
* பௌத்த
* யூத
* கிருஸ்துவ
* இஸ்லாமிய
* பஹாய்

சமயங்கள். இவை தவிர மனிதன் வாழ்ந்த காலம் முழுவதும் சமயங்கள் தோன்றி மறைந்த வண்ணமாகவே இருந்த வந்துள்ளன. இது வரை 27,000 அவதாரங்கள் தோன்றியுள்ளனர் என கூறப்படுகின்றது.

முதலாவதாக, சமயங்கள் என கூறும் போது அவற்றுக்கும் சமய அடிப்படையிலான இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். சமயங்கள் கீழ்காணும் அம்சங்களை பெற்றிருக்கவேண்டும்:

* அவதாரம்
* புனித நூல்
* நம்பிக்கையாளர்கள்

அவதாரம் – ஆங்கிலத்தில் தீர்க்கதரிசி எனவும் கூறப்படும் இவர்கள் சாதாரன மனிதர்களும் அல்ல, அதே சமயம் கடவுளுக்குச் சமமானவர்களும் அல்ல. இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இவர்களுடைய அறிவு பள்ளி சென்று கற்றுக்கொண்ட அறிவு அல்ல.

சமய அடிப்படையிலான இயக்கங்கள் இத்தகைய கூறுகளை பெற்றிருப்பதில்லை. அவை குறிப்பிட்ட சமயம் ஏதாவது ஒன்றின் நிழலில் அல்லது சமூக இயக்கங்களாக அமைக்கப்படுகின்றன.

சமயங்கள் தோன்ற காரணமென்ன?

இதற்கு பல விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும், இறைவன் மனிதனுக்காக காலத்துக்கு காலம் வழங்கும் வழிகாட்டலே சமயமாகும். நிச்சயமாகவே சமயம் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒன்றல்ல. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் சமயங்களை சற்று ஆராய்ந்து பார்ப்போம். இன்று பெரும்பாலும் சமயம் அல்லது மதம் என உச்சரித்தாலே நெற்றியை சுருக்கிப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. சமயத்தின் பெயரால் இன்று நடக்கும் அராஜகங்களே இதற்கு காரணமெனலாம். மனிதனின் கல்விக்காக தோன்றும் சமயங்களே இன்று அவனுடைய பேரழிவிற்கும் ஒரளவு காரணமாகியுள்ளன. ஏன்? இதற்கு பதிலை காண்பதற்கு பதிலாக, சமயங்கள் சம்பந்தமான வேறு சில விஷயங்களை முதலில் ஆராய்ந்து பார்ப்போம்.

வரலாறு என கூறும்போது போர்களும் சம்பவங்களும் நமக்கு ஞாபக்த்துக்கு வரும். ஆனால், மனிதனின் கொந்தளிப்பான வலராற்றினூடே முக்கியமான ஒரு விஷயம், மனுக்குலத்தின் ஆன்மீக பரினாம வளர்ச்சி அந்த வரலாற்றினுள் மறைந்து கிடக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த வளர்ச்சிக்குக் காரணமாக விளங்குவது, இன்றைய உலகில் பல கொந்தளிப்புகளுக்குக் காரணமாக விளங்கும் சமயங்கள்தான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மனிதனில் உண்மையான வளர்ச்சி சமயங்களின் மூலமாகவே ஏற்பட்டு வந்துள்ளது. வரலாற்றை சற்று ஆழமாக ஆய்வு செய்தால் இந்த உண்மை கண்டிப்பாக புலப்படும். விஞ்ஞான, தொழில்நுட்ப வளச்சிகளுக்குக் காரணம் சமயமே காரணமாக இருந்துள்ளது.

சமயங்கள் திடீரெனவோ, காரணமில்லாமலோ தோன்றுவதில்லை. அவை ஒவ்வொன்றும் மனிதனின் கல்விக்காவே தோன்றுகின்றன. சம்பந்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கேற்ப அவற்றின் போதனைகளும் இருக்கும். அதே வேளை எந்த சமயமுமே எல்லா காலங்களுக்கும் போதுமான போதனைகளை கொண்டுவருவதில்லை. இதற்கு உதாரணமாக, ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் ஒரு குழந்தை தாயின் முழு நேர கண்கானிப்பில் இருக்கின்றது, இருக்கவும் வேண்டும். சிறிது வளர்ச்சியடைந்த பின்னர் தாயைத் தவிர மற்றவர்களோடு பழக ஆரம்பிக்கின்றது. அதன் உலகம் விரிவடைகின்றது. பின்னர் பள்ளிப் பருவம் வரும் போது பள்ளிக்குச் செல்கின்றது. பள்ளிப் படிப்பும் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை, பல்கலைக் கழகம் என படிப்படியாக உயர்ந்து கொண்டே போகின்றது. அறிவாற்றல் பெருகப் பெருக மனிதனுக்கு அந்த அந்த பருவத்திற்கு ஏற்ற கல்வி தேவைப்படுகின்றது. சமயங்களும் அப்படித்தான் செயல்படுகின்றன. காலத்திற்குக் காலம் மனிதனின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனுக்கு சமய போதனைகள் அளிக்கப்படுகின்றன. படிப்படியாக மனிதனுக்கு கல்வியளிக்கவே சமயங்கள் தோன்றி வந்துள்ளன. மனுக்குலத்திற்கு தேவையான போதனைகளை சமயம் ஒரேயடியாக கொடுப்பதில்லை, கொடுக்கவும் முடியாது. இதன் காரணமாகவே சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு ரூபங்களில் தோன்றியுள்ளது.

“ சில அன்பர்கள், கடவுள் ஏன் இத்தனை மதங்களைப் படைக்க வேண்டும், ஒரு மதத்தை மட்டும் எல்லார் மத்தியிலும் வெளிப்படுத்தியிருந்தால் என்ன?” என வினவுவதுண்டு. இதற்கு பதில் மேற்குறிப்பிட்ட விளக்கமே. அப்படியே கடவுள் ஒரே மதத்தை எல்லார் மத்தியிலும் வெளிப்படுத்துவதாக இருந்தாலும், அதை எந்த மொழியில் வெளிப்படுத்துவது, மற்றும் கலாச்சாரம், பிரதேசம் ஆகிய வேற்றுமைகளையும் அது கருத்தில் கொண்டிருக்க வேண்டும். அப்படியே அது பலவித மொழி, கலாச்சாரம், இனம் மற்றும் நாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் அந்த ஒரே மதத்தினை பின்பற்றி, ஆனால் வெவ்வேறு நாடுகளில் வாழும் மனிதர்கள் ஏதேச்சையாக சந்திக்கும் போது மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்டிருக்கும் அவர்கள் தாங்கள் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் என எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? உட்கருத்து ஒன்றாக இருந்தாலும், மொழி வேறு, கலாச்சார முறைகள் வேறாக அல்லவா இருக்கும். அந்த வேறுபாடுகளைத் தாண்டி சிறிது சிரமப்பட்டால் சமயங்களுக்கிடையில் உள்ள அடிப்படையான ஒற்றுமையை புரிந்துகொள்ளலாம்.

கடந்த காலங்களில் மனிதர்கள் இன்று வாழ்வதைப் போல் வாழவில்லை. இன்று இருப்பதைப் போல் அன்று விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகள் அறவே கிடையாது. மொழியால் அவர்கள் வேறுபட்டிருந்தனர், கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தனர், முக்கியமாக ஒரு பிரதேசத்தில் வசிப்பவர்கள் வேறொரு பிரதேசத்தில் தங்களைப் போன்றே வேறு மனிதர்கள் வாழ்கின்றார்கள் என அறியாமலேயே வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக இறைவனின் அவதாரங்கள் வெவ்வேறு நிலைகளில் தோன்றினர். இதன் காரணமாக பல மதங்களும் உலகில் தோன்றின.

இப்போது மேற்குறிப்பிட்ட கேள்வியைப் பற்றி மறுபடியும் சிந்தித்துப் பார்ப்போம். கடவுள் ஏன் ஒரே மதத்தை எல்லார் மத்தியிலும் வெளிப்படுத்தக்கூடாது, எனும் கேள்வி. பஹாய் சமய ஸ்தாபகரான பஹாவுல்லா, பின்வருமாறு கூறியுள்ளார்:

அவர்கள் (இறைவனின் அவதாரங்கள்) அனைவரும் ஒரே ஆலயத்தில் வீற்றிருப்பதையும், ஒரே சுவர்க்கத்தில் உயரப்பறப்பதையும், ஒரே அரியாசனத்தில் அமர்ந்திருப்பதையும், ஒன்றையே உச்சரிப்பதையும், ஒரே சமயத்தை பிரகடனம் செய்வதையும் காண்பீர்கள்.

மேற்குறிப்பிட்ட வாசகத்திலிருந்து கடவுள் தமது அவதாரங்கள் மூலமாக உண்மையில் ஒரே சமயத்தைத்தான் பிரகடனப்படுத்தி வந்திருக்கின்றார் என நாம் அறிகின்றோம். அது அந்தந்த காலத்திற்கும், மக்களுக்கும் ஏற்றவாறு வெளிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்றோ நிலைமை வேறு. மக்கள் சரித்திர காலங்களில் வாழ்ந்தது போல் இன்று பிரிந்து வாழவில்லை. உலகமே சுருங்கிப் போய் நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லவோ, தொடர்புகொள்ளவோ முடியும். பிரிந்து கிடந்த உலகம் இன்று ஒன்றாக இருக்கின்றது. மனிதர்களின் மனங்கள் அவ்வாறு இல்லை. பிரிவினைகளால் அவை வேறுபட்டு கிடக்கின்றன.

சமயங்களுக்கிடையில் உண்மையில் வேறுபாடுகள் கிடையாது. ஒரே விஷயம் பல்வேறு காலங்களில், பல்வேறு ரூபங்களில், பல்வேறு மொழிகளில், பல்வேறு வளர்ச்சி நிலைகளில் தோன்றியதால் ஒவ்வொன்றும் வேறு வேறாக தோற்றமளிக்கின்றன. காலையில் தோன்றும் சூரியனானாலும், மதியம் தோன்றும் சூரியனானாலும், மாலையில் மறையும் சூரியனானாலும், ஒளியின் தீவிரமே வேறுபாட்டுக்குக் காரதணமே ஒழிய சூரியன் ஒரே சூரியன்தான். சமயமும் அந்த சூரியனைப் போன்றது. காலத்துக்குக் காலம் அதன் ஒளி கூடவும் குறையவும் செய்யும்.