ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்

சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்,'  (ஜூன் 12) உலக நாடுகள் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம் ஆண்டுதோறும் ஜுன் 12ம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.. அதாவது சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இது விடயமாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், காப்பீடுகள், சிறுவர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்துவதும் இத்தகைய விழிப்புணர்வுகளின் ஊடாக சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும் இத்தினத்தின் அடிப்படை நோக்கமாகும். பொதுப்படையாக நோக்குமிடத்து எத்தனை சட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் எத்தகைய விளக்கங்கள் முன்வைக்கப்பட்டாலும் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாளுக்குநாள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் வறுமை, பஞ்சம் போன்ற நிலைமைகள் இத்தகைய காரணியை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன. 2008ம் ஆண்டு உலகத் தொழிலாளர் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்; உலகில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர் பணியாளர்களாகச் சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் 165 மில்லியன் சிறுவர் தொழிலாளர்கள் உலகளாவிய ரீதியில் பணியாளர்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1956ம் ஆண்டின் சிறுவர் பணியாளர்களின் சட்டப்படி 14 வயதுக்குட்பட்டவர்கள் பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை பாரிய குற்றமாகும். இந்த வயதெல்லை நாட்டுக்கு நாடு வேறுபடலாம். உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவர். இலங்கை சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி 1995ல் 27.7 சதவீதம் சிறுவராவர். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்கக் கீழ்ப்பட்டவராவர். 1939இன் சிறுவர், இளைஞர் கட்டளைச்சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும், இளைஞர் 14-16 என்றும் வரையறுத்துள்ளது.

1989ன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். எவ்வாறாயினும் தேசியச் சட்டங்கள் பராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்டவர்கள் யாவரும் சிறுவர் ஆவார்கள். எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் பெறுமதிமிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல் பாட்டாளர்கள். சிறுவர்களுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நமது பெரியவர்கள் சிலர் அறிவதில்லை. இத்தகைய காரணத்தினாலேயே சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் பணி எமது சமூகங்களில் தொடர்கின்றன. சிறுவர் துஸ்பிரயோகத்தில் சிறுவர் உழைப்பு ஒரு பகுதி என்றால் சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பனவும் மூன்றாம் உலக நாடுகளின் சிறுவர் உழைப்புடன் இணைந்த வகையில் தனித்துவமான பிரச்சினைகளாக மாறியுள்ளன எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல. இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. இதற்காகவே அனைத்து நாடுகள் மட்டத்திலும் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய ஆய்வு பொதுமைப்படுத்தப்பட்டதாக உள்ளன.யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை.. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.சிறுவர் உரிமையில் சில அம்சங்களை கீழ்வருமாறு சுருக்கி நோக்கலாம். இங்கு வாழும் உரிமை என்பது இயற்கையாக அமைந்துள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமையை வழங்க வேண்டிய நிலையில் உள்ளது. உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு பாதுகாப்பு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம். கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை போன்றவற்றையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 1989 நவம்பர் 20 - இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.2007ல் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெப் (UNICEF) அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள "சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்" (Eliminating Violence against Children) என்ற கைநூலில் சிறுவர்கள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளிஉலகிற்குத் தெரியவருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,2004ல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.2000ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.2002ல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; சுமார் 75% ஆனோர் ஆண்கள்80 முதல் 98 சதவீதப் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்ட ரீதியான தண்டனையாக உள்ளது.உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல் ரீதியான தண்டனைகளிலிருந்து சட்ட ரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.

வளர்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல் ரீதியாகவோ சொல் ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண் பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர். [unicef.org]இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் 2009ம் ஆண்டு முதலரைப் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மட்டும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 57 ஆயிரத்து 293 சிறுவர்கள் இருப்பதாக இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஆயிரத்து 34 சிறுவர்கள் பெற்றோரை இழந்தவர்கள் எனவும் அவர் கூறியிருந்தார். கடந்த முப்பதாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டிருந்த யுத்தநிலை காரணத்தினால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது பொதுப்படையான விடயம். மறுபுறமாக விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற

அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன. 'குழந்தைத் தொழிலாளர் அவலம்' குறித்துப் பேசப்பட்டு, அறியப்பட்டு அதை எதிர்த்துச் சட்டமும் இயற்றப்பட்டு ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. 'குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அதிக அளவில் சட்டமியற்றிய நாடு இந்தியா என்று கூறப்படுகின்றது. ஆனால், அண்மைக்காலத்து ஆய்வின் பிரகாரம் இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் மில்லியக் கணக்கில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். 1986ல் இந்திய அரசாங்கம் 14 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வேலை செய்வதைத் தடை செய்தது. 1997ல் 'abolision act' என்ற பெயரில் சட்டமியற்றியது. தீப்பெட்டித் தொழிற்சாலை, நூற்பாலைகள், செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழிற்சாலைகள், கண்ணாடி மற்றும் செம்புத் தயாரிப்பு, தரைவிரிப்பு பின்னும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள் முறை அதிகம் ஊக்குவிக்கப்படுவதாகவும் இச்சட்டம் கண்டனம் தெரிவித்துள்ள. இச்சட்டம் குறிப்பிடாத மற்றொரு தொழில் 'விவசாயம்'. அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவது விவசாயத்தில்தான் என்பது இத்துறையை அறிந்த அனைவருக்கும் தெரியும். சட்டங்கள் ஏன் நடைமுறையில் செயல்படுவதில்லைஎடுத்துக்காட்டாய், ஒரு 'குழந்தைத் தொழிலாளி' பற்றிய புகாரை சமர்ப்பித்தால், அந்தத் தொழிலாளி 14 வயதுக்குட்பட்டவர் தானா எனப் பரிசோதித்துச் சான்றிதழ் வழங்க ஒரு மருத்துவர் வர வேண்டும். மருத்துவர் கணிக்கும் வயதைக் காட்டிலும் இரண்டு வயது கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம் என சட்டம் சொல்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் பத்து வயதைக் கடந்தவர்களே. அதனால் இந்த சட்ட நுணுக்கத்தினால் பல புகார்கள் செயலிழந்து போகின்றன. அப்படியும் உயிரோடு மீண்டு வரும் புகார்கள், குழந்தைத் தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தாரின் ஒத்துழையாமையால் பலனிழந்து போகின்றன. பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் பல உறுப்பினர்களைக் கொண்ட ஏழைக் குடும்பங்களிலிருந்து வருபவர்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள் என்ற பரவலான ஒரு எண்ணமும் உண்டு. இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் சிறுவர் வேலையாட்கள் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்துவிட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இச்சிறுவர்களைப் பொறுத்தமட்டில் படிப்பதற்கு ஆர்வமில்லை என்பதை விட குடும்பப் பொருளாதாரமே மேலோங்கி நிற்பதை அவதானிக்கலாம். இலங்கையிலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். அதிலும் பெருந்தோட்டத்துறையில் உள்ள சிறுவர்களே அதிகமாக இந்த நிலைக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களில் போதிய வருமானமின்மை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, வளர்முக நாடுகளில் சிறுவர் பணிக்கமர்த்துவதை கட்டுப்படுத்தல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருளாக இருப்பதையும் இதனுடன் இணைந்த வகையில் குடும்பப் பொருளாதாரப் பின்னணி பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவதானத்தில் கொள்ளுதல் வேண்டும்.

"உலகின் பல நாடுகளிலும் சிறுவர்களுக்கு இணையான பலுவான வேலைகளில் சிறுமிகளும் அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக, வீட்டு வேலைகளில் மிக நீண்ட நேரம் சிறுமிகள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதில், கடுமையான உடலுழைப்பை அவர்கள் தர வேண்டியுள்ளது," என்கிறார் யுனிசெஃப்-பின் சிறார் பாதுகாப்புக்கான தலைவர் சூசன் பிஸேல்.


மேலும், "வீட்டு வேலைகள் செய்யும் சிறுமிகள் எவ்வகையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது மற்றவர்களுக்குத் தெரிவதில்லை," என்கிறார் அவர்.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், குழந்தைகள் கடத்தப்படுவது, படைகளில் சேர்க்கப்படுதல், பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்படுதல், செக்ஸ் படங்களுக்கு பயன்படுத்துதல், குண்டர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படுதல், போதைப்பொருள் கடத்தலுக்கு ஈடுபடுத்துதல் போன்ற பல்வேறு இழி செயல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதே கவலைக்குரியது என சர்வதேச தொழிலாளர் அலுவலக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்டஹ் 2004ம்- ஆண்டின் மதிப்பிடப்பட்டதன்படி, உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 21 கோடியே 80 லட்சம். இந்தப் பிஞ்சுகளில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வேலைகளில் ஈடுபடுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 60 லட்சம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் அடிப்படைக் கல்வியும் மறுக்கப்படுவதும் சமூகத்தின் குறைபாடே என்பது ஆர்வலர்களின் கருத்து.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கப்படுவதற்கு முக்கிய காரணமே, ஒரு குடும்பத்தின் வறுமை நிலைதான். அதில் இருந்து மீட்கப்படவும், ஊரகப் பகுதிகளில் அனைத்து சிறுவர், சிறுமியருக்கும் தரமான கல்வி வழங்குவதை எல்லா நாடுகளின் அரசும் உறுதி செய்ய வேண்டும் என்று யுனிசெஃப் கெட்டுக் கொண்டுள்ளது.