சனி, 10 மார்ச், 2018

ஏலியன் நம் கடவுள்!

ஏலியன்களுடைய பறக்கும் தட்டுக்கு கண்களை விரித்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால், ஏலியன்களுடைய கிரகத்துக்கே போய், அவங்களோட தங்கி, சாப்பிட்டு, பொரணிப் பேசிவிட்டு வந்த ஒருத்தர் இருக்கிறார். அவர் பெயர், கிளாட் வொரிலன். ஊர், பிரான்ஸ் நாட்டின் விச்சி நகரம். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக, ஏலியன்களைப் பற்றி விதவிதமான கதைகளைச் சொல்லும் இவர், ஏலியன்களை நம்பும் ‘ரெய்லிஸம்’ என்ற மதத்தின் நிறுவனர். ஏலியன்களைச் சந்தித்தது பற்றியும், ரெய்லிஸம் மதத்தைப் பற்றியும் ஏராளமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். சாருக்கு இருக்கும் இன்னொரு பெயர், ‘ரெய்ல்’. சரி, கதையைக் கேட்போமா?

பிரான்ஸ் நாட்டில் வாகனங்களைப் பற்றிய ‘ஆட்டோ-பாப்’ இதழில் டெஸ்ட் டிரைவிங் செய்து கட்டுரை எழுதும் பத்திரிகையாளராக இருந்த கிளாட்டுக்கு, கார் ரேஸிங் மீது சிறுவதில் இருந்தே பிரியம். 1973-ல் ஒருநாள், பிரான்ஸின் எரிமலைப் பகுதி ஒன்றில் காரை பார்க்கிங் செய்துவிட்டு, ஜாக்கிங் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென கூம்பு வடிவ பறக்கும் தட்டு ஒன்று இவரை நோக்கி வந்ததாம். ‘அட, சத்தமே இல்லாத ஒரு வாகனமா?’ என ஆச்சரியத்தோடு அருகே சென்றவருக்கு, மற்றொரு ஆச்சரியம். உள்ளிருந்து இறங்கியது ஒரு ஏலியன். கருப்பு முடி, பச்சை வண்ண உடையோடு வந்த அந்த உருவத்தைப் பார்த்து தலைதெறிக்க ஓடாமல், நின்று நிதானமாகப் பேசியிருக்கிறார் கிளாட். ‘எங்கே இருந்துப்பா வர்ற?’, ‘நான் பேசுறது உனக்கு எப்படிப் புரியுது?’ என கேஷூவலாகப் பேசிக்கொண்டு இருந்தார்களாம். அப்போ, ஏலியன் சொன்ன கதை என்ன தெரியுமா?

‘‘நான் பூமிக்கு வெகுதொலைவுல இருக்கிற கிரகத்துல இருந்து வர்றேன். அங்கே, ஏழு பில்லியன் ஏலியன்கள் வசிக்கிறாங்க. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி சில விஞ்ஞானப் பரிசோதனை செய்றதுக்காக பூமிக்கு வந்தோம். அப்போதான், செடி, கொடிகளோட சேர்த்து மனிதர்களையும் உருவாக்கினோம். அப்போ மனிதர்கள் சிலர் எங்களோட தொழில்நுட்பத்தைத் தெரிஞ்சுக்க முயற்சிக்கவே, சில ஏலியன்கள் அவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களையெல்லாம் விட்டுட்டு, நாங்க எங்க கிரகத்துக்கு வந்துட்டோம். ஆனா, என்னைக்காவது மனிதர்கள் எங்களை அழிக்க வந்துட்டா என்ன பண்றதுனு எங்க கிரகத்துல இருக்கிற ‘அரசாங்கம்’ பயந்துச்சு. சரி, ஒட்டுமொத்தமா பூமியையே அழிச்சுடலாம்னு அழிச்சுட்டோம். ஆனா, சில மனிதர்கள் எங்களுக்குத் தெரியாம, எல்லா உயிரினங்களிலும் ஒவ்வொரு ஜோடியை எங்கேயோ ஒளிச்சி வெச்சிருந்தாங்க. தவிர, ஒரு விண்கலத்தையும் தயாரிச்சு வெச்சிருந்தாங்க. ஏன்னா, ‘ஏலியன்களைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்பட்டது தப்புதான்’னு மன்னிப்பு கேட்க!’’ என்று சிரித்திருக்கிறது அந்த ஏலியன். தவிர, ‘‘நீ ஒரு இயக்கம் ஆரம்பிக்கணும். நாங்கள்தான் உங்களைப் படைச்ச கடவுள்னு உலகத்துல இருக்கிற எல்லா மக்களுக்கும் சொல்லணும். அப்போதான், உலகத்துல எந்தச் சண்டையும் நடக்காம இருக்கும்!’’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பியது. புல்லரித்த உணர்வோடு, ‘ரெய்ல்’ என்ற பெயரில் உடனடியாக, ஏலியன் புகழ்களைப் பரப்ப ஆரம்பித்தார் கிளாட். சில வருடங்கள் கழித்து, இவரது பரப்புரைகளில் திருப்தியடைந்த ஏலியன்கள் மீண்டும் ஒருமுறை பூமிக்கு வந்து, ரெய்லை அவர்களுடைய கிரகத்திற்கு அழைத்துச்சென்று விருந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த அனுபவத்தை ‘இன்டலிஜென்ட் டிசைன் (Intelligent Design)’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு, ‘நான் ஏலியன் கிரகத்துக்குப் போனேனே!’ என டான்ஸைப் போடாமல், ‘ரெய்லிஸம்’ என்ற புது மதத்தை உருவாக்கி, ஏலியன்களைக் கும்பிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார். கூடவே, ‘அந்தக் கிரகத்துல இயேசுவைப் பார்த்தேன். முகமது நபியைப் பார்த்தேன். புத்தரைப் பார்த்தேன்’ எனத் திண்ணையில் உட்கார்ந்து பேச, கூட்டமும் கூடியது. 1974-ல் ஏலியன்கள் மட்டும்தான் கடவுள் என்று சொல்லும் ரெய்ல், அதற்காக ஒரு மதம், கோட்பாடு, விதிமுறை என பக்கா செட்டப்போடு நிதி திரட்ட ஆரம்பித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இவரது சிஷ்யகோடிகளும் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்க, சகல வசதிகளும் கொண்ட பெரிய மாளிகையைக் கட்டி, பால் காய்ச்சினார். ‘ஏலியன்கள் பூமிக்கு வரும்போது, இங்கதான் தங்கிட்டுப் போவாங்க!’ என்பது இந்த மாளிகைக்கு ரெய்ல் சொல்லும் காரணம். 

பிறகென்ன? ‘ஏலியன்களின் அருள்பெற அணுகுவீர்’ என்ற போர்டு மாட்டாத குறையாக, அடிக்கடி ஏலியன்களைச் சந்திப்பதாக, ஏலியன்களைப் பார்த்துவிட்டு வருவதாக, ஏலியன்கள் நலம் விசாரித்ததாக... பக்தர்களிடம் சொல்லி பரவசப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருடைய ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், மனிதர்களை ‘குளோனிங்’ முறையில் உருவாக்கிவிட்டதாகச் சொல்லி அரசாங்கத்தைப் பதறவைத்துக்கொண்டும் இருக்கிறார். 

இதுமட்டுமா? ஏலியன்களுக்காக ‘கெஸ்ட் ஹவுஸ்’ கட்டியிருக்கிறார். ஏலியன்கள் செய்யும் தியானம் என்று, தியான வகுப்புகளை நடத்துகிறார். பிரபாகரனைச் சந்தித்த சாகசப் பயணத்தை சீமான் விளக்கும் விதமாக, ஏலியன்களைச் சந்தித்த விதத்தை அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். 69 வயதான ரெய்லுக்கு, 107 நாடுகளில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். 2035-க்குள் ஏலியன்களுக்காவே பிரமாண்டமான ஒரு ‘தூதரகம்’ கட்ட வேண்டும் என்ற இலக்கோடு, பூமி பூஜை போட்டிருக்கிறார்!