வியாழன், 8 மார்ச், 2018

இன்று மகளிர் தினம்- பெண்மையை போற்றுவோம்

பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், தாயாக, வழிபடும் தெய்வமாக, வழிகாட்டும் கருவியாக வலம் வரும் பெண்மையை போற்றுவோம். #WomensDay

“உயிரை காக்கும் உயிரினை சேர்த்திடும் 
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும்
இந்த பெண்மை இனிதடா”

பெண் என்பவள் வியப்புக்குரியவள். இறைவன் படைப்பிலே மனஉறுதி கொண்ட உயர்வான சிற்பம். விண்ணுலகின் கவிதை மலர்கள் விண்மீன்கள் என்றால், மண்ணுலகின் கவிதை மலர்கள் பெண்கள். பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே இம்மண்ணுலகம் அறிவு பெறுகிறது.

ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான படைப்பாகவும் தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதி அற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகிறாள் என்று ஹெர்மிஸ் என்ற உலக அறிஞன் ஒத்துக் கொள்கிறான்.

மனிதகுலத்தின் வாழ்விற்கும் அந்த வாழ்வை தகுதி உள்ளதாக மாற்றி காட்டியதற்கும், படைத்த இறைவனுக்கே நிகர் இவள். பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்களும் கூட.

பெண்கள் சிரித்தால் செண்பகமரம் பூக்கும். அவள் காலடி பட்டால் அசோகமரம் பூக்கும். பேசினால் பூக்கும் நமேரு மரங்கள், பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரங்கள், அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால் பூக்கும் திலக மரங்கள் என்று பறைசாற்றுகிறது பழமையான சமஸ்கிருத பாடல்.

வாய்பேசத் தெரியாத விருட்சங்கள் கூட பெண்ணின் அன்பையும், அரவணைப்பையும் உள் வாங்குகிறது என்று சொன்னால் மீதமுள்ள உயிர்கள் இப்பெருமைகளை எண்ணிப் பார்ப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அதனால்தான் பெண்ணின் கருணை, அடியாள் போல் செய்யும் தொண்டு, பூமாதேவி போல் காட்டும் பொறுமை, குடும்ப நிர்வாகத்தில் செயல்படும் மந்திரி, என்று நீதி வெண்பா “அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப் பொன்னின் அழகும் புவிப் பொறையும் வன்னமுலை வேசி துயிலும், விறல் மந்திரி மதியும் பேசில் இவையுடையாள் பெண்”, என்றது. இத்தனைச் சிறப்புகளையும் அசை போடுவதற்கு காரணம் உலக மகளிர்தின கொண்டாட்டம்.

1789-ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி நடந்த போது சமத்துவம், வாக்குரிமை, வேலைக்கு ஏற்ற ஊதியம் வேண்டி பெண்கள் போராட்ட களத்தில் இறங்கினர். அதன் விளைவு மன்னர் லூயிஸ் பிலிப் தன் பதவியைத் துறந்தான். ஐரோப்பா முழுவதும் அமெரிக்காவிலும் போராட்டம் பரவியது. இதையடுத்து பிரான்சின் 2-ம் குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் 1848 மார்ச் 8-ல் பெண்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.

1910-ம் ஆண்டு ஓப்பன் ஹேகலில் வீரப் பெண்மணி கிளாராஜெட்கின் தலைமையில் அனைத்துலக பெண்கள் மாநாடு நடந்தது. பின்னர் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. 1920-ம் ஆண்டு சோவியத் ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸண்டிரா ஹெலன்ரா ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பது பெண் இனத்தின் பெருமைகளை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் காட்டுகிறது.

ஒரு காலத்தில் ஆணாதிக்க சமூகத்தில் இருந்து, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கப் போராடினார்கள். ஆனால் இன்று சமுத்துவம், சுதந்திரம், உரிமைகளைப் பெற்று சாதனைப் படைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் ஒவ்வொரு பெண்களும் மார்ச் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்திய ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரா ஜெட்கினியையும் அதனை பிரகடனம் செய்த ரஷியாவின் பெண்மணி அலெக்ஸண்டிரா ஹெலன்ராவையும் மாதர்கள் கைகூப்பி தொழ வேண்டும்.

மேற்கூறியவர்களை நினைவு கூர்கின்ற அதே வேளையில் இந்தியாவின் குறிப்பாக தமிழ் மண்ணின் சாரத்தை, அதில் உயிர்ப்போடு நடமாடும் பெண்மையை, அபாரசக்தி பெற்றிருந்தும் அடிமைபட்டு கிடந்த பெண்குலத்தின் அறிவு கண்களைத் திறந்து அவர்களுக்கு உத்வேகம் கிடைக்கும்படியாக ஓட்டுமொத்த பெண் குலத்தின் எண்ணப்புரட்சிகளை எட்டயபுரத்து கவிஞன் மகாகவி பாரதி, அவனின் தாசன் பாவேந்தன் எழுத்துக்களால் செய்த புரட்சி, அப்புரட்சி சிந்தனைகளுக்கு, உரமளித்து உயிர் பெறும்படி செய்த நம் முன்னோடிகள் என்றுமே இப்பெண்ணினத்தின் ஜீவநாடிகள்.

உலக அரங்கில் பெண்கள், தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார்கள். ஆனால் தமிழ் மண்ணின் சிறப்பு, பல ஆண்கள் பெண்களின் பெருமையை உணர்ந்து பெண்களுக்காக குரல் கொடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் தான்

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம் புரிவாள் எங்கள் தாய்- அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்த கூத்திடுவாள் பெண்”

என்று பாடினான் பாரதி.

பெண்கள் தங்கள் சாதனைப் பயணத்தை தொடங்குகின்ற களம் இல்லறம். இல்லறமாவது கற்பெனும் திண்மையுடைய இல்லாளோடு மாறுபாடின்றி, கருத்தொருமித்து கூடித் தர்மத்தை புரிவதாம். தான் கற்பதோடு தன்னைச் சார்ந்தவர்களை கற்கும்படி தூண்டுபவள் பெண். ஆண், பெண் குழந்தைகள் இரு சாரருக்கும் இளமையில் இருந்து கற்பொழுக்கத்தைப் போதித்து இந்நாட்டின் வீரர்களை, சிறந்த பக்திமான்களை, அடையாளம் காட்டி நீங்களும் இப்படி உலகம் போற்றும் உத்தமர்களாக விளங்க வேண்டும் என்று உபதேசித்து அவர்களைப் பண்படுத்த வேண்டிய பொறுப்பு பெண்கள் வசம் என்பதை உணர்ந்து

“வேதம் படைக்கவும், நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி
சாதம் படைக்கவும் செய்திடுவோம் - தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்”

என்று உரக்கப் பாடினான் பாரதி.

அதே நேரம் உரிமையைப் பாடிய கவிஞன், அவள் கடமை என்ன என்பதையும் வலியுறுத்தினான்.

“காதல் ஒருவனை கைப்பிடித்தே, அவன் 
காரியம் யாவினும் கைகொடுத்து 
மாதரறங்கள், பழமையைக் காட்டிலும் 
மாட்சி பெறச்செய்து வாழ்வோமடி”

என்றான்.

பாண்டிய நாட்டிலே ஒரு பழமொழி உண்டு.

“தாயைப் பார்த்து பெண் எடு” என்பார்கள். எல்லாவற்றிக்கும் அடித்தளம், அவள்தான். பெண்ணாய் பிறந்தால் அவலம், அவஸ்தை, பரிதவிப்பு என்ற நிலைமாறி, கள்ளி பாலுக்கு இரையாகிய காலம் பறந்தோடி அவள் வாய்மொழிக்கு முக்கியத்துவம் கிடைக்கும் காலம் கனிய தொடங்கியுள்ள இந்த வேளையில், சில கசப்பான உண்மைகளையும் நாம் ஆழமாக உணர்வதில் தவறில்லை. நம் குணத்திற்கு பின் ஒரு மனம் உண்டு. குணத்திலும் மேலான குணம் பெண் பெண்ணாக இருப்பது. இதை மிக நுணுக்கமாக நாம் உள்வாங்க வேண்டும்.

பெண் உரிமை என்று பேசுகின்ற பெண்கள் மூன்று வடிவங்களாக காட்சி தருகிறார்கள்.

“கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமையற்ற
பெண்களின் கூட்டமடி கிளியே”

என்று மகாகவி பாடியதைப் போல இன்றும் இத்தனை உரிமைகள் தரப்பட்டும், சட்டங்கள் பெறப்பட்டும் கண்ணிருந்தும் குருடர்களாய் ஒருசாரார் இப்புவியில் வலம் வரும் அவலநிலை ஒருபுறம்.

இன்னொரு புறம் கிடைத்த உரிமைகளை, வரங்களை, வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாமல், “கண்டதே காட்சி, கொண்டதே கோலம்” என்று பெண் விடுதலையை தவறாகப் புரிந்து கொண்டு ஆண் வர்க்கத்தை அடிமைப்படுத்துவதுதான் உண்மையான பெண்ணின் உரிமை என்று அறியாமையினால் மிகத் தவறுதலாக புரிந்து கொள்ளும் கண்ணோட்டமும் பெண்களிடையே நிலவுகிறது.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்”

என்று பாரதி பாடியதன் அர்த்தத்தை பெண்ணினம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

“எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் 
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

என்றானே!

ஒரு காலத்தில் ஆண்கள் பெண்களை அடிமைபடுத்தினார்களே, அதேபோல இன்று ஆண்களை அடிமைப்படுத்த பெண்கள் ஒருசிலர் நினைப்பது துரதிஷ்டம். நிகர், இளைப்பில்லை என்று பாடியதன் ஆழத்தை செவி மடுத்து நமக்கு பெறப்பட்ட உரிமைகளை சரியாகப் பயன்படுத்துவது சாலச்சிறந்தது. அதை விடுத்து ஒரு காலத்தில் ஆண்கள் இப்பெண் சமூகத்திற்கு இளைத்த அதே கொடுமைகளை நாம் ஏவுகணைகளாக பிரயோகம் செய்தால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்துவிடல்”

என்ற வள்ளுவனின் உலக பொது மறையை நினைவில் கொள்வோம்.

“தாய்க்கு மேல் இங்கே ஓர் தெய்வம் உண்டோ
காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள் நிலை அவளாலே எய்தல் வேண்டும்”

என்பதை பெரும்பாலான பெண்கள் நிதர்சன உண்மையாக்கி வாழ்ந்து காட்டுவது பாராட்டுக்குரியது.

நமக்காக போராடி நம் உரிமைக்காக குரல் கொடுத்த நம் முன்னோடிகளின் கனவை நனவாக்க முயல்வோம். பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் என்பதை உலகறியச் செய்வோம். அந்த ஞானத்திற்கு உதாரணமாக விளங்கிய பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலெட்சுமி, முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி, ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி கொண்ட முதல் பெண் அரசி ராணி வேலு நாச்சியார், சாதிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடிய குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாவித்திரிபாய் போன்றோரை, மேலும் பல சாதனைகளைப் படைத்த பெண்களைப் பின்பற்றி சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமூகத்தை உருவாக்க முயல்வோம்.

தண்ணீரைக் கண்டால் பயிர்கள் எப்படி பசுமையாக நிமிர்ந்து நிற்குமோ, அதைப்போல பெண்கள் தங்கள் குணங்களால் தலைநிமிர்ந்து வாழ முடியும், நல்லொழுக்கத்தை படைக்க முடியும் என்பதையும், உலகிற்கு உணர்த்த வேண்டும்.

விஞ்ஞான உலகை அசைத்து பார்க்கக் கூடிய வீரமங்கையாக, இல்லறத்திலும், சமூகத்திலும், நாடு போற்றக்கூடிய வகையில் திட்டங்களை வகுத்து திறமையாக செயல்படும் மந்திரியாக அதற்கேற்றாற்போல் மதிநுட்பத்தை மகுடமாக சூடியவளாக பெண் வலம் வந்தால் இவ்வுலகம் உள்ளளவும் வாழும்.

“நற்குணமுடைய வேந்தை
நயந்து சேவித்தலொன்று 
பொற்புடை மகளிரோடு 
பொருந்தியே வாழ்தலொன்று 
பற்பல ரோடு நன்னூல்
பகர்ந்து வாசித்த லொன்று 
சொற்பெரும் இவைகள் மூன்றும் 
இம்மையில் சொர்க்கம் தானே”

என்ற விவேக சிந்தாமணியில் எது சொர்க்கம் என்பதில், நடுநாயகமாக, உச்சி திலகமாக, புனிதவதியாக, மென்மையானவளாக, மலர்ந்த முகமுடையவளாக, இன் சொல்லரசியாக, புன்சிரிப்பின் பெட்டகமாக, சுதந்திரச்சிந்தனை படைப்பாளியாக, உரிமைகளைக் கட்டிக்காத்து தக்க வைக்கும் தாயாக, வழிபடும் தெய்வமாக, வழிகாட்டும் கருவியாக வலம் வரும் பெண்மையைப் போற்றுவோம்.

பெண் என்பவள் மகளாக, மனைவியாக, தாயாக, தன்னலம் கருதா தொண்டுள்ளம் கொண்ட சேவகியாக, உதவுவதன் மூலம் உயிர்களை வாழ்விக்க முடியும் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் ஜீவனாகிய, பெண்ணின் சிறப்புகளை, உயர்வினை போற்றுவோம்! வாழ்த்துவோம்! வணங்குவோம்!

வாழ்க பெண்மை, வளர்க அவள் நல்லறம்.

ஆன்மீக சொற்பொழிவாளர் 
எல்.வாசுகி மனோகரன்.