புதன், 18 ஜூலை, 2018

முதுமைக் காதல்

மெருகூட்டும் உன் கன்னங்கள்
மருவற்ற முகத்திற்கு
அழகு சேர்க்க!!
 
மொழிபேசும் உன் இதழை
மெய்மறந்து நான் பார்த்திருக்க
வளையோசை கேட்டுக்கொண்டே
மடிமீது தலை சாய்க்க!!
 
அசைந்தாடும் கூந்தல்; அதில்
அலைபாயும் காற்று
இசையாவும் உந்தன் கால்கொலுசில்
விளையாடும் அழகே!!
 
கதைபேசும் கவிதையே
கைகோர்க்கும் தாரகையே
விலைபேசும் உன் கண்ணோடு
உரையாடல் நான் தொடங்க!
 
வார்த்தைகள் தடுமாறி
குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின!
எதைச் சொல்லி மறைப்பேன் – நான்
உன் சிரிப்பொலியில் வீழ்ந்ததை!
 
வயதானது கூட தெரியவில்லை
வருடங்கள நாட்களாய்ப் போனதடி!
தடுமாறி நான் எழுகையில்
கைத்தடியாய் உன் கரங்களடி!!

யூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)  இலுமினாட்டி

ப்ரொடோகால்ஸ் (The Protocols of the Elders of Zion)

ரஷ்ய மொழியில் 1905லும் ஆங்கிலத்தில் 1920களிலும் வெளிவந்த இப்புத்தகம் தமிழில் நூறாண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரீமேஸன்கள் எனப்படும் இரகசிய சமூகத்தைப் பற்றி தமிழில் அரிதாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், யூதர்கள் "பிறப்பின் அடிப்படையில் உலகை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளது" எனும் மமதையால் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த போதிலும் உலகை வெல்ல அவர்கள் தொலை நோக்கோடு போட்ட நீண்ட கால திட்டங்களை இப்புத்தகம் விவரிக்கிறது.

யூத சியோனிஸ்டுகளின் இரகசிய அறிக்கை எனும் இப்புத்தகத்தை ரஷ்ய மொழியில் வெளியிட்ட பாதிரியார் செர்கி நிலஸ்ஸும் ஆங்கிலத்தில் வெளியிட்ட விக்டரும் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டதும் பின் அக்கைதின் போது ஏற்பட்ட சித்ரவதைகளின் காரணத்தாலேயே இறப்புற்றதும் இப்புத்தகம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதும் இப்புத்தகம் அணு குண்டைவிட வீரியமான விஷயங்களைத் தன்னகத்தே வைத்துள்ளது என்பதற்குச் சான்றுகள்.

இப்புத்தகம் முழுக்க இலுமினாட்டிகளின் இரகசிய கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானங்களின் சாரமாக இருப்பதால் புரிவது சற்று கடினமாக இருந்தாலும் இதை மொழி பெயர்த்துள்ள ஆளூர் சலீம் தன்னால் முடிந்தவரை எளிமைப்படுத்தி தந்துள்ளார். இப்புத்தகத்தின் தொடக்கமே இலுமினாட்டிகள் உலகை யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள் என இரண்டாக பிரித்து பார்க்கும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறது.

தாங்கள் கனவு காணும் யூத அரசை உடனே நிறைவேற்றும் மனித வளம் இல்லாததால் அவ்விலக்கை நோக்கிய பயணத்தில் அவர்கள் தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. குறிப்பாக "கட்டற்ற சுதந்திரம்" எனும் பெயரில் மக்களைக் கட்டுப்பாடற்றவர்களாக உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி குறித்து பேசுகிறது. பொருளாதார நோக்கங்களுக்காகத்தான் போர்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கப்படும் இப்புத்தகத்தில் உறுதியான அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தும் கம்யூனிசத்தை ஆதரிக்க வேண்டியது குறித்து பேசும் போது, "தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் கம்யூனிஸம்" என்று இதுகாறும் நினைத்திருந்தது பொய்யோ என்ற எண்ணம் எழுந்து அதிர வைக்கிறது.

மேலும் தற்போதுள்ள ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து சித்தாந்தங்களையும் உருவாக்கியதன் பின்னணியில் இலுமினாட்டிகள் இருப்பதைச் சுட்டிக் காட்டும் இப்புத்தகம், இவை உடைந்து நொறுங்கும்போது பலவீனப்படும் உள்ளங்களைச் சர்வதிகார ஆட்சிக்குத் தயார்படுத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் சதித்திட்டம் விவரிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை கல்வி அமைப்பையும் ஊடகத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருதல் என்று கூறும் இப்புத்தகம், பிஞ்சு உள்ளங்களின் மனத்தில் வன்மத்தையும் சேர்த்து மனனம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டுமே குழந்தைகளை உருவாக்கி, புதிய தலைமுறையின் சிந்தனை திறனை மழுங்கடிக்கும் நவீன கல்வி திட்டத்தின் அவலத்தைக் கண்களில் விவரித்து காட்டுகிறது.

தங்களுடைய அரசை அமைக்க வசதியாக தமக்கு எதிரான நாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்துதல், பொம்மை அரசுகளை ஏற்படுத்துதல், அறிவியலின் பெயரால் மதத்தின்மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துதல், ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்தல், வளர்ச்சியின் பெயரால் நாட்டைச் சுரண்டுதல், தீவிரவாத பிரமையின் மூலமாக மக்களைப் பீதிக்குள்ளாக்குதல் என்று நாம் தற்சமயம் எதிர்கொள்ளும் விசயங்கள் அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியான இப்புத்தகத்தில் அட்சரம் பிசகாமல் வெளிவந்துள்ளது உலகை ஆட்கொள்ள மறைமுகமாக இயங்கிவரும் இலுமினாட்டிகளின் சக்தி எத்தகையது என்ற பீதியை அடிவயிற்றில் கிளப்புகிறது.

மேலும் இப்புத்தகம் இறுதியாக, யூதர்களின் சாம்ராஜ்யத்தை அமைத்தபின் மக்களை அடக்கியாள்வது குறித்தும் யூத அரசர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் குறித்தும் அவர் எத்தகையவராக இருக்க வேண்டும் என்று அவருக்காக வரையறுக்கப்படும் தகுதிகளும் ஒப்பீட்டளவில்  கொண்டுவருகிறது.
தற்போது தமிழில் வெளிவந்துள்ள இப்புத்தகத்தை மொழிபெயர்த்த ஆளூர் சலீம் மற்றும் வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தார் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இது தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல, இதில் சொல்லப்பட்டுள்ள சூழச்சிகளை முறியடிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியத்தையும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை.

செவ்வாய், 17 ஜூலை, 2018

"கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச்சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தியாவார். அதுமட்டுமா? இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மதக் கலவரங்களின் தீவிரத்தை நாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கலாமே தவிர பார்த்ததில்லை அல்லவா? “அலை ஓசை” எனும் நாவலைப் படித்தால் நாம் அதை அப்படியே உணரலாம். அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, இன்ன பிற நூல்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய சாகா வரம் பெற்ற அமர காவியங்களாகும். இவற்றையெல்லாம் படைத்த இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இவரது அந்த முகத்தைச் சற்று இங்கே பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899இல் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கச் சென்றார். 1920இல் நடந்த நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும், கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை விட்டு வெளியேறினார். இவருக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் ஆதர்ச தலைவர்களாக விளங்கினர். 1922இல் முதன்முதல் ராஜத்துவேஷப் பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். வயதில் குறைந்தவர் என்பதற்காக இவரை எச்சரித்து விட்டுவிட நினைத்த நீதிபதியிடமே, இவர் தான் தெரிந்தே ராஜ துவேஷப் பேச்சு பேசுவதாக இவர் தெரிவித்ததும், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.
திருச்சியில் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைமையகம் இருந்தது, விடுதலையானதும் கிருஷ்ணமூர்த்தி அங்கு வேலையில் சேர்ந்தார். 1921இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது இவர் டாக்டர் ராஜனுடன் சேர்ந்து வரவேற்பு, கூட்டம் ஆகிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு, மகாத்மாவால் ‘அச்சா தேஷ் சேவக்” என்று பாராட்டப் பெற்றார். கரூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்தபோது மதுரையைச் சேர்ந்த இளைஞர் சதாசிவம் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தது. “கல்கி” பத்திரிகை தோன்றவும் காரணமாக இருந்தது. இவரது முதல் நாவல் வ.ரா. ஆசிரியராக இருந்த நடத்திய “சுதந்திரன்” எனும் பத்திரிகையில் வெளிவந்தது.
பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களிலேயே ராஜாஜியைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி கொண்டார். திருச்சி காங்கிரஸ் அலுவலக வேலையைத் தொடர்ந்து, இவர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். டாக்டர் ராஜனின் வேண்டுகோளின்படி இவர் திரு வி.க.வைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த “நவசக்தி” இதழில் வேலை செய்தார். மகாத்மா காந்தி “யங் இந்தியா”வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து “நவசக்தி”யில் வெளியிட்டார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான “விமோசனம்” எனும் மதுவிலக்குப் பிரச்சார இதழிலும் எழுதி வந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவரது ஆரோக்கியம் கருதியும், ஏற்கனவே ஓராண்டு சிறையில் தவமிருந்ததாலும் ராஜாஜி இவரைத் தன் படையில் சேர்ந்துக் கொள்ளவில்லை. உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் கலந்து கொண்டு சிறை செல்லவில்லையாயினும், இவரது எழுத்துக்கள் ஆயிரமாயிரம் தொண்டர்களை உசுப்பி இந்தப் போரில் கலந்து கொள்ளத் தூண்டுதலாயிருந்தது என்பது உண்மை. இவர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுக்காக இவருக்கு மறுபடியும் ஒரு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.
விடுதலையான பிறகு “ஆனந்த விகடனில்” தொடர்ந்து எழுதிவரலானார். அதில் இவர் எழுதிய “தியாக பூமி” நாவல் தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஓர் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டியது. அந்த காலகட்டத்தில் அந்த நாவலில் வந்த ‘சரோஜா’ எனும் குழந்தையின் பெயரைப் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் வைத்தனர் என்பது ஒரு சுவையான செய்தி. “ஆனந்த விகடனில்” ஒன்பது ஆண்டுகள் வேலை பார்த்த பின் “கல்கி” எனும் பெயரில், இவரும் சதாசிவமும் இணைந்து ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டனர். அதில் வெளியான இவரது வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், இசை விமரிசனங்கள், தலையங்கங்கள் ஆகியவை வரலாற்றுப் புகழ் மிக்கன. அவையெல்லாம் மீண்டும் நூல் வடிவம் பெற்று இப்போது விற்பனையாகின்றன. இப்போதும்கூட அவை படிப்பதர்கு சுவையும், சூடும் நிறைந்திருப்பதைக் காண முடியும்.
மகாகவி பாரதியாரின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதர்கு முன்முயற்சி எடுத்து, கட்டி முடித்து அதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜியினால் திறந்து வைத்த சேவையைத் தமிழகம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும். இவருக்கு நாட்டு நன்மை என்பதுதான் தாரக மந்திரம் இதை அவர் பாணியில் கூறுவதென்றால், அவருக்கு இருந்த மூன்று நோக்கங்கள் முதலாவது தேச நன்மை, இரண்டாவது தேச நன்மை, மூன்றாவது தேச நன்மை.
இந்த வரலாற்று ஆசிரியர், சுவாரசியமான எழுத்தாளர், இசை ரசிகர், பாரதி அன்பர், தேச பக்தர், தமிழ் நாவல்களைப் படிக்கத் தூண்டிய அபூர்வமான கதாசிரியர் 1954ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார். தமிழ் நாட்டில் ஓர் சகாப்தம் நிறைவடைந்தது. வாழ்க கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்!

முதல் முறையாக டிரம்ப் - புதின் நேருக்கு நேர் சந்திப்பு: பின்லாந்து நாட்டில் நடந்தது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்து பேசினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடந்தது.

Donald Trump meets Vladimir Putin: The key moments from the summit

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச விரும்புவதாக கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதின் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதை டிரம்பும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்புடன், புதின் பின்லாந்தில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நேற்று சந்தித்தனர். இரு தலைவர்களும் முதன் முதலாக தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

மாஸ்கோ நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நீண்ட நெடிய பயணமாக புதின் நேற்று காலை தனி விமானம் மூலம் ஹெல்சிங்கி நகர் சென்றடைந்தார்.

இதைத் தொடர்ந்து டிரம்பும், புதினும் பின்லாந்து அதிபர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும், உலககோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக புதினை டிரம்ப் பாராட்டினார். இரு பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் இந்த சந்திப்பை உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தன. தலைவர்களின் இந்த சந்திப்பு 2 அமர்வுகளாக பல மணி நேரம் நீடித்தது.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது பேச்சுவார்த்தை நிச்சயம் செறிவு மிகுந்ததாகவும், இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த உறவை ஏற்படுத்துவதாகவும் அமையும். எங்களது பேச்சு வர்த்தகம் முதல் ராணுவம் வரையிலும் ஏவுகணை முதல் அணு ஆயுத விவகாரம் வரை இருக்கும். சீனா குறித்தும் விவாதிப்போம்.

வெளிப்படையாகச் சொல்லப்போனால் அமெரிக்காவும், ரஷியாவும் இணைந்து செயல்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக இந்த சந்திப்பு உருவாகி இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் போனது. நான் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் இன்னும் 2 ஆண்டுகள்தான் மீதி உள்ளது. என்றபோதிலும் இரு நாடுகளும் மிகச்சிறப்பான உறவை பேண முடியும் என்று நம்புகிறேன்.

எங்கள் இரு நாடுகளையும் இந்த உலகம் ஒன்று சேர்ந்து பார்க்கவே விரும்புகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் இரு பெரும் அணுசக்தி நாடுகள். உலக அணு ஆயுதங்களில் 90 சதவீதம் எங்களிடம்தான் உள்ளன. இது நல்லதுக்கு அல்ல. இது மோசமான ஒன்றாகும். இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உலகம் எங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இப்பிரச்சினையை நாங்கள் முன்னெடுத்து விவாதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதின் கூறுகையில், “எங்கள் இரு நாடுகளின் உறவு மற்றும் உலகப் பிரச்சினைகள் குறித்து விரிவான முறையில் பேசுவதற்கு சரியான நேரம் அமைந்திருக்கிறது” என்றார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தையின்போது, 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா(புதின் அரசு) தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக ரஷியாவுடன், அமெரிக்காவின் உறவு பல காலம் சரியாக அமையாததற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் மோசமான அணுகுமுறையே காரணம் என்று டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்திருந்தது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 நாட்களாக ரேடியேட்டர் நீரை குடித்து உயிர் பிழைத்த இளம்பெண்

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 நாட்களாக காரின் ரேடியேட்டர் நீரை குடித்து இளம்பெண் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. #California

கலிபோர்னியா மலைமுகட்டில் இருந்து 250 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் 7 நாட்களாக உயிருக்கு போராடிய சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

கலிபோர்னியாவில் பிக் சர் பகுதியில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற 23 வயது பெண் போலந்தில் இருந்து தனது சகோதரி வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே வனவிலங்கு வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க முயற்சிக்கும்போது கார் பள்ளத்தில் விழுந்தது. அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு தனது சகோதரியின் வீட்டுக்கு செல்லாததால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த ஒரு ஜோடி, ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் காயங்களுடன் விபத்தில் சிக்கியிருப்பதை கண்டனர். உடனடியாக அவரை மீட்ட அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறும்போது, ஏஞ்செலாவை மீட்கும்போது அவர் விலா எலும்புகளில் காயங்களுடனும், மூளை இரத்த அழுத்ததினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினர். மேலும் அவர் உயிர் பிழைத்தது ஆச்சர்யம் அளிப்பதாகவும், அந்த சூழ்நிலையில் வேறு யாரும் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என தெரிவித்தனர்.

7 நாட்களாக உடலில் காயத்துடன் தனிமையில் உயிர்தப்பிய ஏஞ்செலா, 7 நாட்களாக உணவு இன்றி தனது காரின் ரேடியேட்டரில் இருந்த நீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார். ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மரங்களின் பயன் பற்றிய கல்வியை சேர்க்க வேண்டும்

எனது கோரிக்கை என்னவென்றால் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில், மரங்களின் பயன் பற்றிய கல்வி சேர்க்கப்பட்டால், அவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம் புரியவரும். மரங்களை நட்டு பராமரிக்கும் மாணவர்களுக்கு அரசே நற்சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

அப்படி சேர்த்தால் மரங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு, சிறு வயதிலேயே உருவாகிவிடும். இதுதான் எனது கோரிக்கை. ஒவ்வொரு மாணவரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். அதை அவர்கள் பராமரிப்பதை கண்காணித்து, அரசு சார்பில் நற்சான்றிதழ் வழங்க வேண்டும். இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

சனி, 30 ஜூன், 2018

இன்று சமூக வலைத்தள தினம் - June30

உலகம் முழுக்க இன்று சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. சமூக வலைத்தள வாசிகள் பலருக்கும் தெரிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #SocialMediaDay

தொழில்நுட்ப யுகத்தின் அகன்ற கண்டுபிடிப்புகளில் நமக்கு அதிகம் பயன்தரும் சிலவற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.


இணைய வசதி மட்டும் இருந்தால் உலகில் உயிருடன் வாழும் எவருடனும் நட்பு கொள்ள வைக்கும் வலைத்தளங்களாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கம்ப்யூட்டரில் அமர்ந்து வலைத்தளங்களில் உலவி, சில மணி நேரங்களில் புதிய நட்பு வட்டாரத்தை டிஜிட்டல் உலகில் உருவாக்கக்கூடிய நிலை இருந்து வந்தது. 

ஆனால் ஸ்மார்ட்போன் வரவுக்கு பின், சமூக வலைத்தளங்கள் நம் உள்ளங்கையில் வந்துவிட்டது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் நட்புகளை கடல் கடந்தும் காதல் செய்ய இவை பாலமாக இருக்கின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை நீளும் தருவாயில் உலக மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 30% பேர் இவற்றில் நீந்துகின்றனர்.


மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கினால் கொண்டாட்டம் என்ற வகையில், இன்று உலகம் முழுக்க சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் சமூக வலைத்தளம் குறித்து பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.


உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என கண்டறியப்பட்டு இருக்கிறது.


உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 300 கோடி ஆகும்.


உலகின் பிரபல பிராண்டுகள் குறைந்தபட்சம் இரண்டுக்கும் அதிகமான சமூக வலைத்தள சேனல்களை பயன்படுத்துகின்றன.


வியாபாரம் செய்வோரில் 81% பேர் ஏதேனும் வகையில் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். 


2017-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2017 மூன்றாவது காலாண்டு வரை மட்டும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 12.1 கோடியாக அதிகரித்தது. அந்த வகையில் ஒவ்வொரு 15 நொடியிலும் ஒருவர் சமூக வலைத்தளத்தில் சேர்கின்றனர்.


ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் தினமும் 6000 கோடி குறுந்தகவல்கள் தினசரி அடிப்படையில் பரிமாறப்படுகின்றன.


சமூக வலைத்தள விளம்பரங்களில் மட்டும் 2017-ம் ஆண்டு சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்பட்டிருக்கிறது.


உலகின் 38 சதவிகித நிறுவனங்கள் 2015-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தள செலவினங்களை சுமார் 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கின்றன, இது முந்தைய ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகம் ஆகும்.


ட்விட்டரில் குறிப்பிட்ட பிரான்டு மீது புகார் தெரிவிப்போர் அந்நிறுவனத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பதில் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


ஃபேஸ்புக்கில் இருக்கும் வீடியோக்கள் தினமும் சராசரியாக 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன.


ஸ்னாப்சாட் தளத்திலும் வீடியோக்கள் தினமும் சுமார் 800 கோடி முறை  பார்க்கப்படுகின்றன.


2018ம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவிகிதம் வீடியோவாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


உலகில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் இத்துறை சார்ந்த வளர்ச்சி பல்வேறு பரிணாமங்களை கடந்து வருகிறது. உலக அரசியல் வரை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்கினாலும், இவற்றால் நமக்கு ஏற்படும் அபாயங்களும் அதிகமாவதை அனைவரும் உணர வேண்டிய காலக்கட்டம் இது. #SocialMediaDay 

www.amalathaselroy.blogspot.com