ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள்!
"ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்”
ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்?
வெல்லட்டும் தூத்துக்குடி மக்கள் போராட்டம்.
Even after knowing the dangerous outcomes how can we allow this. #SterliteProtest #SterlitePlant
தூத்துக்குடியில் கடந்த 16 ஆண்டுகளாக நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் உடல் நலத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் குற்றங்களுக்கெல்லாம் கண்துடைப்பு தண்டனையாக ரூ 100 கோடி அபராதம் கட்டும்படி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
2010-ல் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஏ கே பட்னாயக், எச் எல் கோகலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மேற்கண்டபடி தீர்ப்பளித்தது.
‘உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்குவதற்காக ஸ்டெர்லைட் பொய்யான தகவல்களை தந்ததும், தகவல்களை மறைத்ததும் உண்மைதான். ஆனாலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கா விட்டால் அது தொழிற்சாலையை மூடுவதில் முடிந்திருக்கும்’ என்று குறிப்பிட்டு ஸ்டெர்லைட்டின் அந்த குற்றத்தை மன்னித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.
‘1997 முதல் 2012 வரை ஸ்டெர்லைட் இழைத்த சேதங்களுக்கு நிவாரணமாகவும், உரிய அனுமதிகள் பெறாமல் தொழிற்சாலையை நீண்ட காலம் நடத்தியதற்கு அபராதமாகவும் ரூ 100 கோடி கட்ட வேண்டும். 2010-11ல் கம்பெனியின் லாபமான ரூ 1,043 கோடி முந்தைய நிதி ஆண்டில் கிடைத்த ரூ 744 கோடியை விட 40 சதவீதம் அதிகம். அதனால் ரூ 100 கோடி ரூபாய் அபராதம் என்ற கடும் தண்டனையை விதிக்க வேண்டியிருக்கிறது’ என்று சவடாலாக உறுமியிருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.
‘ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கும் வேலை வாய்ப்புகள், அரசுக்கு செலுத்தும் வரித் தொகைகள், அது உற்பத்தி செய்து நாட்டுக்கு அளிக்கும் தாமிரத்தின் முக்கியத்துவம் இவற்றைக் கருத்தில் கொண்டு அபராதத்தைக் கட்டி விட்டு அது தனது நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கிறோம்’ என்று ‘பாலியல் வல்லுறவு செய்த மைனர் அபராதம் செலுத்தி விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்’ என்ற ஆலமரத்து சொம்பு நாட்டாமையைப் போல தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே. ஸ்டெர்லைட்டின் மொத்த விற்பனை வருமானத்தில் 0.48% பெற்றுத் தரும் வேலை வாய்ப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களின் உடல் நலத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொள்ளலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்.
சென்ற நிதியாண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய ரூ 960 கோடி கலால் வரியையும், சுமார் ரூ 550 கோடி வருமான வரியையும் முழுவதுமாக செலவிட்டால் கூட நிலங்களுக்கும், கடல் வளங்களுக்கும், மக்களின் உடல் நலத்துக்கும் இந்த ஆலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் செய்வது சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்.
சமூகத்துக்கு மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி ஸ்டெர்லைட் நிறுவனம் சென்ற ஆண்டு ஈட்டிய நிகர லாபம் ரூ 1,657 கோடி (விற்பனை மதிப்பில்ல் 8.6%). இந்த லாபத்தில் 56.64% (ரூ 939 கோடி) டுவின் ஸ்டார் என்ற லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்துக்கும், 12.45% (ரூ 206 கோடி) சிட்டிபேங்க் நியூயார்க்குக்கும் போகிறது. ஒரு ஆண்டில் ரூ 939 கோடி ரூபாய் லாபம் பெறும் வேதாந்தா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் செய்த பங்கு முதலீடு வெறும் 336 கோடி மட்டும். அதாவது 16 ஆண்டுகளில் தனது முதலீட்டுப் பணத்தை பல மடங்கு திருப்பி எடுத்த பிறகு சென்ற ஆண்டு முதலீட்டின் மீது சுமார் 300% லாபம் ஈட்டியிருக்கிறது.
மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டது.
அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஸ்டெர்லைட்டை இரு கரம் நீட்டி வரவேற்று 30.10.1994 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆரம்பம் முதலே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களும், உழைக்கும் மக்களும், சில கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் ‘சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் மக்களின் எதிர்ப்புகளை மீறி 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.
21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது. “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”
மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகில் உள்ள குருசடி தீவில் பவளப் பாறைகள். (படம் உதவி : பிரண்ட்லைன்
“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
“மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.
உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் கொடுத்த பொய்யான தகவல்களையும், உண்மை நிலவரங்களை திரித்து கூறியதையும் அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து ஆலை தொடர்ந்து இயங்க வழி வகுத்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இழுத்தடித்த வாதங்களுக்குப் பிறகு 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆலையை மூடும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்தியாவின் தாமிர தேவைக்காக ஸ்டெர்லைட் தொண்டு செய்கிறது என்பது ஆதாரமற்ற வாதம். 1992-ல் இந்திய தாமிர உற்பத்தித் துறை தனியார் முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டது. 1996-ல் 62,000 டன்னாக இருந்த தாமிர உற்பத்தி 2007-ல் 9.97 லட்சம் டன்னாக உயர்ந்தது. இப்போது இந்தியாவின் தாமிர தேவை ஆண்டுக்கு 4 லட்சம் டன் மட்டுமே. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் தாமிரமும் தாமிரப் பொருட்களும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது உற்பத்தி செய்யும் சுமார் 4 லட்சம் டன் தாமிரம் நின்று போனாலும் நாட்டுக்குத் தேவையான தாமிரத்தின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.
தாமிர உற்பத்திக்கான தொழிற்சாலைகள் ஏன் இந்தியாவில் இடம் பெயர்ந்தன? வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின் விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.
சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.
மாசு உருவாவதையும், வெளியாவதையும் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கோ, உருவான மாசை தூய்மைப் படுத்துவதற்கோ பணம் செலவழிக்காமல் மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் முதலாளிகளும், வாங்கி பயன்படுத்தும் பன்னாட்டு முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். சுற்றுச் சூழல் மாசுபடுவதை கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளி, நீர், நில மாசுகளை தொடர்ந்து வெளியேற்றி தமது சுரண்டலையும் கொள்ளை லாபம் ஈட்டலையும் தொடர்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஏற்பட்ட கந்தக டை ஆக்ஸைடு கசிவினால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் தீவிரமடைந்த எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை ரத்து செய்யக் கோரும் ஸ்டெர்லைட்டின் மேல் முறையீட்டை பசுமை வாரியம் விசாரித்து வருகிறது.
திருப்பூரில் சாயப் பட்டறைகள் அழித்தொழித்த நொய்யல் ஆற்றையும் அவற்றால் பாழாக்கப்பட்ட சார்ந்த விளைநிலங்களையும் வேலூர் மாவட்டத்தில் தோல் பட்டறைகளால் பாழடிக்கப்பட்ட விளைநிலங்களையும் நீர் ஆதாரங்களையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புள்ளி விபரங்கள் காட்டுவதில்லை.
உலகளாவிய உற்பத்திச் சங்கிலிகளை இணைத்து இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு குறைந்த செலவிலும் மக்களுக்கு அதிக பாதிப்பிலும் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்த பொருட்களை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உயர் விலைக்கு விற்று லாபம் ஈட்டி கொழுக்கின்றனர். நிலத்தையும், நீரையும், காற்றையும் அதன் மூலம் மக்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டு பாயைச் சுருட்டிக் கொண்டு அவர்கள் இன்னொரு நாட்டுக்குத் தமது கொள்ளையைத் தொடர நகர்ந்த பிறகு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அழிவுகளின் விளைவுகளை மக்கள் சுமக்கின்றனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் அமைச்சகம், உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ம.தி.மு.க.வின் வழக்குகள் போன்ற நீதித்துறை நடவடிக்கைகளை அத்தகைய தொழில் செய்யும் முறையின் சைட் ஷோக்களாகவே கருதி தமது சுரண்டலை தொடர்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் நடந்து வரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகள் மக்களை மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளத்தையும் அழிக்கின்றன என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை ஒரு துலக்கமான சான்று.