ஞாயிறு, 19 மே, 2019

மிக நீளமான கவிதை...

தனி ஒருவரால் இயற்றப்பட்ட மிக நீளமான கவிதை, கி.பி. 999-ல் பாரசீகக் கவிஞர் அப்துல் காசிம் மன்சூர் படைத்த, ‘ஷா- நாமா’. பிர் தவுசி என்ற புனைபெயர் கொண்ட கவிஞர் மன்சூரின் இந்தக் கவிதை நூலுக்கு ‘ஷா மன்னர்களின் நூல்’ என்று பொருள்.

இந்த நூலை எழுதும்படி பிர்தவுசியிடம் வேண்டுகோள் விடுத்த, கஸ்னியின் சுல்தான் மெக்மூத், பிர்தவுசியின் ஒவ்வொரு இரட்டை வரிக்கும் தலா ஒரு தங்க தினார் நாணயம் பரிசு வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

ஆனால் பிர்தவுசி இந்தக் கவிதை நூலை முடித்து சுல்தானிடம் வழங்கியபோது, அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒவ்வொரு இரட்டை வரிக்கும் தங்க நாணயத்துக்குப் பதிலாக வெள்ளி நாணயத்தைக் கொடுத்தார், சுல்தான்.

அதனால் வெறுத்துப்போன பிர்தவுசி, அந்த நாணயங்களில் பாதியை ஒரு பான விற்பனையாளருக்கும், மீதியை ஒரு குளியல் தொட்டி உதவியாளருக்கும் வழங்கிவிட்டார். அதேநேரம், இதனால் சுல்தானின் கோபத்துக்கு ஆளாகக்கூடுமோ என்று அஞ்சி, நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்.

பல ஆண்டுகள் கழித்து, சுல்தான் மெக்மூத்துக்கு மனம் மாறியது. அவர், 60 ஆயிரம் தங்க நாணயங்கள் மதிப்புள்ள கருநீல மையை கவிஞர் பிர்தவுசிக்கு அனுப்பிவைத்தார்.

அந்த விலைமதிப்பு மிக்க மையைச் சுமந்த வண்டி, பிர்தவுசியின் கிராமத்தை அடைந்தபோது, ஒரு சவ ஊர்வலத்தை எதிர்கொண்டது. அந்தோ பரிதாபம், அது கவிஞர் பிர்தவுசியின் இறுதி ஊர்வலம்.

கவிஞரின் வாரிசாய் கிராமத்தில் இருந்த அவரது மகளும் சுல்தானின் பரிசை ஏற்க மறுத்து விட்டார். கடைசியில், அந்த மையின் விற்பனையின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு கிராமத்தில் இருந்த பொதுச் சத்திரம் சீரமைக்கப்பட்டது.

உலகிலேயே மிகப் பெரிய வெண்கலச் சிலை

ஜப்பானின் நாரா பகுதியின் டோடாய்-ஜி கோவிலில் உள்ள வெண்கலப் புத்தர் சிலைதான், உலகிலேயே பெரிய வெண்கலச் சிலை எனக் கருதப்படுகிறது. ஆனால் இச்சிலை, அதே ஜப்பானின் காமக்கூராவில் உள்ள வெண்கலப் புத்தர் சிலையின் அழகுக்கு இணையாகாது என்கிறார்கள், கலை விமர்சகர்கள். காமக்கூரா சிலை, கி.பி. 1252-ல் வடிக்கப்பட்டதாகும். வெள்ளியாலான நெற்றியும், தங்கத்தாலான கண்களும் இச்சிலையின் தனிச்சிறப்பு. காமக்கூரா புத்தர் சிலையின் அடித்தள சுற்றளவு 29 மீட்டர்கள். 15 மீட்டர் உயரம் கொண்ட இச்சிலையின் மொத்த எடை, 450 டன்கள்!