வெள்ளி, 17 மே, 2019

கடலின் அடிமட்டம் வரை சென்றுள்ள ப்ளாஸ்டிக்...!

உலகில், ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் குப்பைகள் நிறைந்துள்ளது. 

சில வாரங்களுக்கு முன்னர், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 3000 கிலோ ப்ளாஸ்டிக் அகற்றப்பட்டது என தகவல் வெளியான நிலையில், கடலின் அடி மட்டத்திலும் ப்ளாஸ்டிக் குப்பைகள் இருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விக்டர் வெஸ்கோவோ என்ற ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி, உலகின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரென்ச் (Mariana Trench) என்ற இடத்திற்கு நீர்மூழ்கி கப்பல் மூலம் சென்றார். அங்கு அவர் எடுத்த புகைப்படத்தின்மூலம், கடலின் ஆழத்திலும் ப்ளாஸ்டிக் குப்பை இருப்பது தெரியவந்துள்ளது. 

அந்த புகைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான வழி குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களின் தீங்கினை உணர்ந்து அதற்கான தடைகளை பிறப்பித்தபோதிலும், ப்ளாஸ்டிக் பயன்பாடு இன்னும் முற்றிலுமாக ஒழியவில்லை. 

ப்ளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு கடல்வாழ் உயிரினங்கள் பல அழிந்துவரும் சூழலில் ப்ளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெருக வேண்டியது அவசியமாகிறது.