வெள்ளி, 17 மே, 2019

கமலின் சர்ச்சை கருத்து... பற்றி எரியும் வடஇந்தியா

டெல்லி:

அரவக்குறிச்சியில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் கோட்சே தீவிரவாதி என்றும் பேசி கமல் ஹாசன் பற்ற வைத்த நெருப்பு, வடக்கே பற்றி எரிகிறது. இதற்கு இந்து தீவிரவாதி என கமல் சொன்ன வார்த்தையே காரணம். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் காந்தி சிலை முன்பு பேசிய போது, காந்தியின் கொள்ளு பேரனாக அவரது சாவுக்கு நீதி கேட்கிறேன் என்று சொல்லியதோடு, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று சொன்னார். அந்த இந்து தீவிரவாதியின் பெயர் கோட்சே என்றும் கூறினார். இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சிவசேனா கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக கமலுக்கு எதிராக போராட்டங்களை தமிழகத்தில் பாஜக முன்னெடுத்து வருகிறது.

கமல்ஹாசன் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்க... டெல்லி நீதிமன்றம் உத்தரவு

மோடி மறுப்பு - அதேநேரம் நேற்று கமலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, என் அறிவுக்கு எட்டிய வரையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. தீவிரவாதியாக இருந்தால் இந்துவாக இருக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.


தமிழிசை கண்டனம் நேற்று பாஜக மாநில தலைவர் தமிழிசை பேசுகையில், முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக முஸ்லீம் தீவிரவாதிகள் என்று எப்படி பேசக்கூடாதோ, அதுபோல் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக இந்து தீவிரவாதி என்று கூறக்கூடாது. கோட்சே செய்த செயலுக்காக இந்து தீவிரவாதம் என்று சொல்வதை ஏற்க முடியாது என்றார்.


பிரக்யா சிங் பதிலடி இதனிடையே பாஜகவின் போபால் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், நாதுராம் கோட்சே தீவிரவாதி அல்ல அவர் ஒரு தேசபக்தியாளர் என்றும் தீவிரவாதி என்று சொன்னவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் ஒரு படிமேல சொல்லியிருக்கிறார்.

இந்து சித்தாந்தம் இதுதவிர கமலின் இந்த பேச்சுக்கா டெல்லியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் அவரக்கு சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. இதேபோல் தமிழகம் மட்டுமின்றி பல இடங்களில் கமலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இதற்கு முக்கிய காரணம் இந்து என்பது வடக்கே மதம் என்பதையும் தாண்டி அரசியலிலும் ஆழமாக கலந்து உள்ளது. சித்தாந்த ரீதியாக மக்கள் ஒன்றிணைந்து வடக்கே வாக்களிக்கிறார்கள்.

பாம்பு புற்றில் கமல் இதுவரை முஸ்லீம் தீவிரவாதிகள் என்றே சொல்லி வந்தவர்களுக்கு மத்தியில், உலகம் அறியப்பட்ட நடிகரான கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசியது பாஜக மற்றும் இந்து அமைப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் கமல் மீது அவை கடும் கோபத்தில் உள்ளன. கமல் கைவைத்திருப்பது சாதாரண இடத்தில் அல்ல. இந்து என்ற சித்தாந்தத்தில் கை வைத்துள்ளார். அதனால் தான் கமல் பற்ற வைத்த நெருப்பு வடக்கு முழுவதும் பற்றி எரிகிறது. கோட்சேவை வைத்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வம்பு இழுப்பதாக நினைத்து பாம்பு புற்றுக்குள் கமல் கைவிட்டுள்ளார். இனி எப்படி ஆகும் என்பது காலமே விடை சொல்லும்.