செவ்வாய், 7 மே, 2019

ஜப்பானில் 38 ஆண்டுகளாக குறைந்து வரும் குழந்தை பிறப்பு

கடந்த 38 வருடங்களாக ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு குறைந்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டது. #JapanChildPopulation

டோக்கியோ:

ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம், குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறித்து ஆய்வறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கையின் மூலம், கடந்த 38 வருடங்களாக ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஏப்ரல் 1-ந் தேதி கணக்கெடுப்பின்படி 1 கோடியே 52 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் (15 வயதுக்கு உட்பட்டோர்) உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1,80,000 குறைவாகும்.

கடந்த 1950-ம் ஆண்டில் இருந்து நடந்த கணக்கெடுப்பில் இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கை ஆகும். தற்போது ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் 12.1 சதவீதம் குழந்தைகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை உலகத்தில் 4 கோடி மக்கள் உள்ள நாடுகளில் மிகவும் குறைவானதாகும். தென்கொரியாவில் 12.9 சதவீதம் குழந்தைகளும், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் 13.4 சதவீதம் குழந்தைகளும் உள்ளனர்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2018-ம் ஆண்டில் பிறப்பு எண்ணிக்கை 9,21,000 ஆக வீழ்ச்சியடைந்தது தெரியவந்துள்ளது.  #JapanChildPopulation