செவ்வாய், 7 மே, 2019

காசாவில் சண்டை நிறுத்தம் அமல் - ஹமாஸ் இயக்கம் அறிவிப்பு

காசாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டதாக ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் அறிவித்தது.

ரமல்லா:

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இருநாடுகளின் எல்லையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது.

குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசுவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, காசாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, இஸ்ரேல் போர் விமானங்கள் காசா பகுதியில் குண்டு மழை பொழிந்தன. அதே போல் ஹமாஸ் பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது ராக்கெட் குண்டுகளை வீசுவதை தொடர்ந்தனர்.

இதனால் இது சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. ஹமாஸ் குண்டு வீச்சில் 4 இஸ்ரேலியர்களும், இஸ்ரேலின் வான்தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 23 பேரும் பலியாகினர்.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4.30 மணி முதல் காசாவில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டதாக ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் அறிவித்தது.

கத்தார் மற்றும் ஐ.நா.வின் உதவியோடு எகிப்து நாடு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்து இந்த சண்டை நிறுத்தத்தை கொண்டு வந்ததாக தெரிகிறது. எனினும் இந்த சண்டை நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.