புகையிலை குறித்த ஒரு விளம்பரம் எல்லோருக்கும் நினைவிருக்கும். ``நான்தான் முகேஷ். ஒரு வருஷமா குட்கா தின்னேன், இப்போ வாய் கேன்சருக்கு ஆபரேஷன் செய்யப் போறாங்க” என்கிற முகேஷின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கும் மருத்துவத்தின் குரல் ``சோகம் என்னன்னா முகேஷை எங்களால காப்பாத்த முடியல. அவருக்கு வயசு 24” .
போன நூற்றாண்டில் சிகரெட் புகைப்பது ஒரு வித குற்ற சம்பவமாகப் பார்க்கப்பட்டது. மக்கள் மறைந்தே சிகரெட்டை புகைத்தார்கள். 21-ம் நூற்றாண்டில் நாகரிக வளர்ச்சியின் காரணமாக சிகரெட், தனிமனித ஸ்டைல் ஆனது. திரைப்படங்களில் நாயகர்கள் சிகரெட்டோடு தோன்றி சிகரெட் குறித்த ஒரு ஈடுபாட்டை மக்களின் மீது தெரிந்தோ தெரியாமலோ திணித்திருந்தார்கள்.
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த சிகரெட் எப்படி உலகமெங்கும் வந்தது என்பதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே புகையிலை பயன்பாடு இருந்து வருவதாக வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் புகையிலையை கடவுளின் கொடை என நினைத்திருந்தார்கள். வலி நிவாரணியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். காயங்கள், பல்வலி, இன்னபிற உபாதைகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டமாற்று முறையில் புகையிலையைக் கொடுத்து பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். புகையிலையை ஆபத்தான பொருள் என அப்போது யாரும் உணரவில்லை. புகையிலை சத்தமில்லாமல் பல காரியங்களை ஆதிகாலத்திலிருந்து நிகழ்த்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் புகையிலை பல நாடுகளை உருவாக்கியிருக்கிறது, பணக்காரர்களை உருவாக்கியிருக்கிறது. வல்லரசுகளை உருவாக்கியிருக்கிறது.
கிபி 1492-ம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஐரோப்பாவின் சான் சால்வடார் தீவுக்கு வருகை புரிந்த பொழுது, அம்மக்கள் இலை போன்ற ஒன்றை மருந்தாக எடுத்துக்கொள்வதைப் பார்க்கிறார். அந்த இலையைப் பயன்படுத்தியதும் மக்கள் குடிகாரர்களைப் போல நடந்து கொள்வதை கவனிக்கிறார். புகையிலையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் விளைவுகளைக் கண்டறிந்தார். உலகில் முதன் முதலில் புகையிலை என்பதைக் கண்டறிந்தவர் கொலம்பஸ். ஆனால், பெரும்பாலான ஐரோப்பியர்கள் 16-ம் நூற்றாண்டின் மத்தியில் புகையிலையின் முதல் சுவையைப் பெறவில்லை, பிரான்சின் ஜீன் நிகோட் போன்ற சாகசக்காரர்களும், தூதர்களும் புகையிலையின் பயன்பாட்டை மற்ற நாடுகளுக்குப் பிரபலப்படுத்தத் தொடங்கினார்கள். புகையிலை 1556-ல் பிரான்சிற்கும், 1558-ல் போர்ச்சுக்கல், 1559-ல் ஸ்பெயினிலும் அறிமுகப்படுத்தப்பட்டது, 1565-ல் தொடக்கத்தில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பிறகான காலகட்டத்தில் அதாவது 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் புகையிலை உலகம் முழுமைக்கும் பரவ ஆரம்பித்தது. லண்டனைச் சார்ந்த கிங் ஜேம்ஸ் என்கிற ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட வெர்ஜீனியா என்கிற கம்பனி தன்னுடைய காலனியை ஜேம்ஸ் டவ்னில் நிறுவியது. (தற்போது அந்த நாடு வெர்ஜீனியா என்றே அழைக்கப்படுகிறது.) அங்கு கண்ணாடிப் பொருள்கள், துணி உற்பத்தி போன்ற தொழில்களில் ஈடுபட்டது. ஆனால், அதற்கான லாபத்தை அந்த நிறுவனத்தால் பெற முடியவில்லை. லாபமில்லாமல் இயங்கிய வெர்ஜீனியா நிறுவனத்துக்கு 1612-ம் ஆண்டு ஜான் ரொபைல் என்கிற ஆங்கிலேயர் தென் அமெரிக்காவில் இருந்து புகையிலை விதைகளைக் கொண்டு வந்து வெர்ஜினியா மூலமாக உற்பத்தி செய்கிறார். அந்தக் காலகட்டத்தில் புகையிலைப் பொருள்களை உற்பத்தி செய்கிற உரிமையை ஐரோப்பாவின் ஸ்பானிஷ் நாடு வைத்திருந்தது. ஸ்பானிஷ் அல்லாத வேறு யாரும் புகையிலை விதைகளை வாங்க முடியாது. அப்படி மீறி புகையிலை விதைகளை ஸ்பானிஷ் அல்லாதோருக்கு விற்பனை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்குக் கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. ஜான் ரொபைல் மூலமாகப் பெற்ற விதைகளை வெர்ஜீனியா நிறுவனம் தங்களுடைய காலனியான ஜேம்ஸ் டவுனில் பயிரிடுகிறது. அப்போதும் கூட அவர்களால் புகையிலை உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியாமல் போகிறது. 1619-ம் ஆண்டு அடிமைகளாகக் கொண்டு வந்த மக்களைப் பயன்படுத்தி உற்பத்தியை மீண்டும் தொடங்குகிறது. ஜேம்ஸ் டவுன், வெஜினியா, ஓல்ட் யூரோப்பியன் செட்டில்மென்ட் ஆகிய இடங்களில் புகையிலை உற்பத்தியை விரிவாக்குகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் புகையிலை உற்பத்தியில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த தொடங்குகிறது. 1660-ம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகமான புகையிலையை வெர்ஜீனியா உற்பத்தி செய்தது. வெர்ஜினா, மேரிலேண்ட், கரோலினா ஆகிய மாகாணங்கள் முழுவதுமாக புகையிலை காலனி என்றே அழைக்கப்பட்டது.

1600 களின் முற்பகுதியில் இருந்து கச்சா வடிவத்தில் இருந்த சிகரெட்டுகள், உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமெரிக்காவில் பரவலாக பிரபலமடைந்தன. 1800 களின் முற்பகுதி வரை சிகார்கள் பிரபலமடையவில்லை. அப்போது 'சுவிங்கம்' வடிவிலான புகையிலை சந்தையில் அதிக வரவேற்பைப் பெற ஆரம்பித்தது. சிகார் மற்றும் சிகரெட்டுகள் கைகள் மூலமே தயாரிக்கப்பட்டு வந்தன. 1881 ஜேம்ஸ் புச்சனான் (James Buchanan) என்பவர் “ BONSACK MACHINE” என்னும் சிகரெட் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் சிகரெட்டுகளின் உற்பத்தி பல மடங்காக உயர்ந்தது. ஜேம்ஸ் புச்சானான் நிறுவனம் முதல் சிகரெட் DUKE OF DURHAM என்கிற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. DUKE நிறுவனம் 1882-ம் ஆண்டு 9.8 மில்லியன் சிகரெட்டுகளை உற்பத்தி செய்தது. 1884-ம் ஆண்டு DUKE நிறுவனம் மேலும் இரண்டு புதிய சிகரெட் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கியது. இதில் ஒரு இயந்திரம் 10 மணி நேரத்துக்கு 1,20,000 சிகரெட்டுகளை தயாரித்தது. அந்த வருடம் DUKE நிறுவனம் 744 மில்லியன் சிகரெட்டுகளைத் தயாரித்தது. இது 1883-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒட்டுமொத்த சிகரெட் உற்பத்தியின் அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. புகையிலை இருந்தால் மட்டும் போதும் சிகரெட்டுகளை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என்பதால் சிகரெட் உலகின் நம்பர் ஒன் புகையிலை தயாரிப்பாக மாறியது. முதல் உலகப் போரின் பொழுது சிகரெட்டுகள் ராணுவ வீரர்களுக்கு சோல்ஜர்ஸ் ஸ்மோக் என்கிற பெயரில் விநியோகிக்கப்பட்டது. 2-வது உலகப் போரின்போது சிகரெட் பாக்கெட்டுகள் ராணுவ வீரர்களுக்கு ரேஷன் முறையில் வழங்கப்பட்டன.
சிகரெட் பாதிப்புகள் குறித்து 19-ம் நூற்றாண்டு வரை பெரிய விழிப்பு உணர்வுகளோ, விளம்பரங்களோ வராமலே இருந்தது. 1900-ம் ஆண்டு சுமார் 4.4 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 19-ம் நூற்றாண்டில்தான் பல நிறுவனங்கள் சிகரெட் தயாரிப்பில் இறங்கின. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இன்றைக்கு சிகரெட் தயாரிப்பில் உலகின் முதல் நிறுவனமாக இருக்கக் கூடிய இம்பீரியல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. சுமார் 13 நிறுவனங்களைச் சேர்த்து ஒரு நிறுவனமாக வளர்ந்தது. இதை அப்போது முன்னணியில் இருந்த Buck Duke நிறுவனம் எதிர்த்தது. ஆனாலும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் இரண்டு நிறுவனமும் இணைந்து தங்களுடைய சிகரெட் பொருள்களை British American Tobacco Company என்கிற பெயரில் வெளிநாடுகளில் விற்பனை செய்வதென ஒப்பந்தம் செய்துகொண்டனர். தொழில் போட்டியைச் சமாளிக்க 1902-ம் ஆண்டு பிலிப்ஸ் மோரிஸ் நிறுவனம் இப்போது முன்னிலையில் இருக்கிற மார்ல்போரோ சிகரெட்டை தனி பிராண்டாகஅறிமுகப்படுத்தியது.

பல நூற்றாண்டுகளாக `நிக்கோடின்' மருந்துப் பட்டியலில் இருந்து வந்தது. 1906-ம் ஆண்டின் ஃபெடரல் உணவு மற்றும் போதைப்பொருள் சட்டம், கலப்பின உணவுகள் மற்றும் மருந்துகளின் விற்பனையைத் தடை செய்தது. மேலும் புகையிலை, நிகோடின் மருந்து பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன. 1914-ம் ஆண்டு யு.எஸ். பார்மகோபீயா பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் தயாரிப்புகளை ஒரு மருந்து வரையறையைக் கொண்டு வந்தது. அதில் நோயைக் குணப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தும்போது மட்டும் புகையிலை சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. 20-ம் நூற்றாண்டில் சிகரெட் குறித்த விழிப்பு உணர்வுகளைப் பல நாடுகளும் நடத்தத் தொடங்கின. ஜெர்மன் அரசு உதவியுடன் 1930 இருந்து 1940 வரை விழிப்பு உணர்வு குறித்த விஷயங்கள் நடைபெற்றன. ஆனால் மக்கள் சிகரெட் குறித்த விழிப்பு உணர்வுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1940-ம் ஆண்டு ஜெர்மன் மருத்துவர்கள் சிகரெட் புகைப்பதால் நுரையீரல் புற்று நோய் வரும் என மருத்துவ ரீதியாக அறிவித்தார்கள். இதன் மூலம் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை பல அரசுகளும் தடை செய்தன. 1950-ம் ஆண்டு ஆங்கிலோ அமெரிக்கன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஜெர்மன் மருத்துவர்கள் கூறியதை உறுதி செய்தனர். ஆனால், சிகரெட் உற்பத்தியும், சிகரெட் புகைப்பதும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. சிகரெட் குறித்த விளம்பரங்கள் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டன. சிகரெட் மற்றும் புகையிலையின் விளைவுகளை உணர்ந்த பிரிட்டன் அரசு 1965-ம் ஆண்டு சிகரெட் குறித்த எந்த விளம்பரங்களையும் ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதித்தது. இதைத் தொடர்ந்து 1971-ம் ஆண்டு அமெரிக்காவும் தொலைக்காட்சி விளம்பரங்களைத் தடை செய்தது. 1986-ம் ஆண்டு கியூபா அதிபர் பிடல் கேஸ்ட்ரோ சிகார் புகைப்பதைக் கைவிட்டார். அவர் கியூபாவில் தயாரிக்கப்பட்ட கியூபா சிகார் என்கிற பிராண்டை பயன்படுத்தினார். 1988-ம் ஆண்டு ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் 7,10,000 பேர் புதிதாக புகை பிடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. 1988-ம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டு 40-வது ஆண்டு தினத்தில் 1987 ஏப்ரல் மாதம் 7 தேதி உலகின் முதல் புகையிலை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. 1988-ம் ஆண்டு முதல் மே மாதம் 31-ம் தேதி ஒவ்வொரு வருடமும் புகையிலை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2001 வருடம் இந்திய அரசு பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்தது.

புகைப்பழக்கத்தை விட்டால் 10 ஆண்டுகள் கூடுதல் ஆயுள் கிடைக்கும்!
இந்தியாவில் புகையிலை 17-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய புகையிலையானது உலகம் முழுவதிலும் சுவை மற்றும் மென்மையான தன்மைக்குப் பிரபலமானது; தவிர, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் இந்திய புகையிலைக்கு பெரும் தேவை இருக்கிறது. இந்தியாவில் ஆண்டு உற்பத்தி சுமார் 830,000 மெட்ரிக் டன்கள்; உலகம் முழுவதும் வருடத்துக்கு 5 மில்லியன் மக்கள் சிகரெட் மற்றும் புகையிலையால் இறக்கிறார்கள். சிகரெட் மற்றும் புகையிலை குறித்த விளைவுகளை உணர்ந்த நாடுகள் ஒன்றின் பின் ஒன்றாகப் புகையிலை பொருள்களைத் தடை செய்தன. ஆனாலும் இன்றைய அளவில் புகையிலையை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்துகொண்டேதானிருக்கின்றன.
இன்றைய தேதியில் உலக புகையிலை உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருக்கிற நாடுகள்
சீனா...
பிரேசில்...
இந்தியா......
பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இதை எப்படி தடுத்து நிறுத்துவது? நம் ஒவ்வொருவரும் புகையிலைப் பொருள்களை எடுத்துக்கொள்ள மாட்டோம் என உறுதிமொழி எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
செய்வீர்களா... ?