சனி, 19 அக்டோபர், 2019

உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் தலைவரை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்த பாகிஸ்தான்!

கடந்த ஆண்டு மறைந்த பாகிஸ்தானின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஆஸ்மா ஜஹாங்கிர் நினைவாக நடத்தபடவிருக்கும் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக உலகளாவிய பத்திரிகை சுதந்திர அமைப்பின் ஆசியாவிற்காக ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் அமெரிக்காவிலிருந்து லாகூருக்கு விமானத்தில் வந்திறங்கினார்.

அப்போது விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், தாங்கள் உள்துறை அமைச்சகத்தின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதால் உங்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என தடுத்ததுடன் அவரை உடனடியாக வேறு விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் தலைவர் ஜோயல் சைமன் கூறுகையில், பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் பற்றி கவலை கொள்பவர்களின் முகத்தில் விடப்பட்ட மிகப்பெரிய அறை இது. இது தொடர்பாக பாகிஸ்தான் விளக்கம் தர வேண்டும். பத்திரிகை சுதந்திரம் பற்றி அரசு கவலைப்படுவதாக இருந்தால் மிகவும் நேர்மையான முறையில் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஸ்டீவன் பட்லர் பாகிஸ்தானுக்கு வாடிக்கையாக வரக்கூடியவர் என்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர் என்றும் அவரை பாகிஸ்தான் அரசு நடத்தியுள்ள விதம் மிகவும் கலவை கொள்ளச்செய்வதாக இருப்பதாகவும் சைமன் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் பல முன்னணி பத்திரிகைகள் கூட சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சில செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டு மூடப்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில் உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.