புதன், 23 அக்டோபர், 2019

செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய உள்ள பேஸ்புக்..!

செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வானொலியைத் தவிர, 1990கள் வரை நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள அடுத்தநாள் காலையில் வரும் நாளேடுகளுக்காக மக்கள் காத்திருந்தனர். பின்னர் செய்தி தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் என்று பரிணமித்து வந்த செய்தித்துறை இன்று முழுக்க முழுக்க இணைய மயமாகிவிட்டது. ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக சென்று விழுந்துவிடுகிறது. இதற்கு முழு முதற்காரணம் சமூக வலைதளங்களின் பயன்பாடுதான். 

சமூக வலைத்தளங்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, தொலைக்காட்சியில் செய்தி நேரத்திற்காக காந்திருந்தவர்களை செல்போனை நோக்கி வரவைத்திருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் எளிதில் மக்களை அடைந்துவிடுகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது பேஸ்புக் நிறுவனம். 

நம்பகமான செய்திகளைப் பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு  புதிய செய்தி பிரிவை அறிமுகம் செய்வது தான் அந்த புது முயற்சி. செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி  செய்ய உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான  Wall Street Journal, News Corp, Dow Jones, New York Post, the Washington Post போன்ற செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 

செய்தியை வெளியிட விரும்பும் நிறுவனங்கள் மக்களுடன் நேரடி உறவை ஏற்படுத்த இந்த புது வசதிகள்  உதவும்.மேலும் அதன் உண்மைத்தன்மை உயர்தரமாக  இருப்பதையும் இந்த புது வசதி உறுதி செய்கிறது.  பயனர்களுக்கு எந்த வகையிலான செய்திகள் தேவைப்படுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இதற்கென சிறப்பாக நியமிக்கப்பட உள்ள செய்தி ஆசிரியர்கள் தீர்மானிப்பார்கள்.   செய்தி சேனல்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் போலவே,  10 முக்கிய தலைப்புச் செய்திகளைக்  கொண்ட ஓர் பகுதி இங்கு  பிரதானமாக இருக்கும். 

இனி மக்கள், செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை.  பேஸ்புக் செய்தி சேவையின் மூலமாக பேஸ்புக்கே இனிமேல் நமக்கு செய்தி வாசிக்கப்போகிறது. இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக். செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு பேஸ்புக் ஓர் குறிப்பிட்ட கட்டணத்தையும் வழங்கும். 

செய்தி சேனல்களில் ப்ரேக்கிங்கை பார்த்து தங்களை அப்டேட் செய்துகொண்ட சமூகம் இனிமேல் பேஸ்புக்கிலேயே செய்திகளை பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளப்போகின்றனர். இனி அடுத்து வரும் சந்ததிகளும் செய்திகளுக்காகவும் பேஸ்புக்கை  உபயோகப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மார்க் ஜீகர்பெர்க்.