செவ்வாய், 22 அக்டோபர், 2019

உலகின் மிக பழமையான முத்து கண்டுபிடிப்பு!

8000 ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முத்துதான் உலகின் மிகவும் பழமையானது என்றும், இவை நியோலித்திக் காலத்திலேயே வணிகம் நடைபெற்றதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரவா தீவுகளில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஒரு அறையின் தளத்தில் அந்த முத்து கெண்டெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவானது அமீரகத்தின் தலைமையகமான அபுதாபியின் மேற்குப்பகுதியில் உள்ளது. அந்த தீவில் மிகப்பழமையான கட்டுமானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் நடந்த ஆராய்ச்சியில் இந்த முத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட முத்தின் லேயர்களை ஆராய்ச்சி செய்ததில் அது  கிமு 5800-5600 நூற்றாண்டைச் சேர்ந்த நியோலித்திக் காலத்தைச்சேர்ந்ததாக இருக்கலாம் என்று அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவர்களது தற்போதைய பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் மிகப்பழமையான பின்னணியைக்கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது என்று அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் சேர்மன் முகமது அல் முபாரக் தெரிவித்துள்ளார்.

மராவா பகுதியில் நடைபெறும் ஆராய்ச்சியின் மூலம் அங்கு நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த சிதைந்த நிலையில் காணப்படும் கற் சிலைகள், சங்கு மற்றும் செராமிக் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது கூர்மையான பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“10000 ஆண்டுகள் சொகுசு” என்ற பெயரில், அக்டோபர் 30ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் இந்த முத்து உலகிற்கு முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. அமீரக வல்லுநர்கள் இந்த முத்து வணிகம் செராமிக் மற்றும் இதர பொருட்களுக்கு மாற்றாக, மெசபடோமியா நாகரிகத்துடன் வணிகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

அதோடு, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஒருகாலத்தில் முத்து வணிகத்தில் சிறந்து விளங்கியதாகவும், அந்த வணிகம் 
 ஜப்பானிய வளர்ப்பு முத்துக்களின் வருகையால் 1930 களில் சரிந்ததோடு, உலகளாவிய பொருளாதார மோதல்களை உருவாக்கியதால் அந்த வணிகம் கைவிடப்பட்டது. முத்து வணிகத்தை கைவிட்ட பிறகு தற்போது அரபுநாடுகளின் பொருளாதார சக்தியாக விளங்கும் எண்ணெய் உற்பதிக்கு திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.