வெள்ளி, 25 அக்டோபர், 2019

டென்மார்க்கில் ஆச்சரியம்: நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்

டென்மார்க்கில் கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோபன்ஹேகன், 

டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ‘ரப்ஜெர்க் நியூடு’ கலங்கரை விளக்கத்தை பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மணல் அரிப்பு காரணமாக இந்த கலங்கரை விளக்கம் மெல்ல, மெல்ல சரிந்து மொத்தமாக கடலில் விழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் கடலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த கலங்கரை விளக்கம், மணல் அரிப்பு காரணமாக தற்போது 2 மீட்டர் தொலைவில் இருக்கிறது.

எனவே இந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க டென்மார்க் அரசு முடிவு செய்தது. அதற்காக 7½ லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5 கோடியே 32 லட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் தொடங்கின.

 தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 720 டன் எடைகொண்ட அந்த கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன. கடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.