வியாழன், 10 அக்டோபர், 2019

சைரா நரசிம்ம ரெட்டி - அதிர வைக்கிறது

"துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கதையினை இன்று திரையில் பார்த்தேன். உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையைச் சொல்கிறது, சிரஞ்சீவி நடித்திருக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி'.

ஒரு வீரரின் கதை அருமையான உணர்வுடன் படைத்திருக்கிறது இத்திரைப்படம். பல காட்சிகளும், வசனங்களும் எங்கோ வாழ்ந்த வாழ்க்கையை ஈழத்தமிழர்களுக்கு நினைவூட்டக்கூடியது.

நாட்டிய தாரகை தமன்னாவின் தற்கொடை!
அங்கயற்கண்ணி, யாழினி போன்ற சகோதரிகளின் நினைவுகளுள் ஈகைகளும் கண் முன்னே நிழலாடியது. அதுவும் பாளையக்காரர்கள் பலர் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் எதனால் வீழ்த்தப்பட்டது என்பதும் ஆரம்பகால இயக்கங்களின் செயற்பாடுகளையும் முரண்பாடுகளையுமே திரையிட்டு காட்டியது. 
Sye_Raa_Narasimha_Reddy

வேலுநாச்சியாரின் படையிலிருந்து இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டாகி, பிரிட்டிஷாரைக் கொன்று குவித்த குயிலியின் வரலாற்றை இந்தப் படத்திலும் வேறு ஒரு நபருக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பாரத நாடு, தமிழ்நாடு என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெறுகின்றன. 1840'களில் அப்படியெல்லாம் இல்லை என்பது ஒரு வரலாற்றுப் பிழையாகவே படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்கு கட்டபொம்மனும், மாவீரன் பூலித்தேவனும், மருது சகோதரர்களும் எப்படியோ அப்படியே தான் ஆந்திர மக்களுக்கு ரேநாட்டுச் சூரியனான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. 

ஆனால்...

நரசிம்ம ரெட்டிக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அப்படியிருக்கையில் நரசிம்ம ரெட்டிதான் முதலில் போரிட்டவர் என்பது போன்ற வசனங்கள் படத்தில் வருகின்றன.. 

தொய்வில்லாமல் உண்மை நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட படம். காட்சிகள் காலங்களால் மாத்திரமே வேறுபட்டது. பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. சிரஞ்சீவி உடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, கன்னட திரையுலகின் கிச்சா சுதீப் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிர வைக்கிறது.

வரலாற்று கதையை படமாக மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற தயாரிப்பாளரின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இதை நடிகரும் சிரஞ்சீவியின் மகனுமான, ராம் சரண் தயாரித்துள்ளார். 

தந்தைக்கு மகன் செய்த பாக்கியம். சிறப்பு❣

வீராதி வீரர்கள் தம் இன்னுயிரை ஈந்து அந்த வெறியாட்டம் ஆடிச் சென்ற british வந்தேறிகளுக்கு உரக்கச் சொல்லிச் சென்றது ஒன்றே ஒன்று தான்.

'Get out from my Motherland'

மொத்தத்தில்

●சைரா...! - வீரவணக்கம்

☆ 'அதிகமாக பணங்களை அநாவசியமான தயாரிப்புக்களுக்கும், ஆடம்பரங்களுக்கும் அள்ளியிறைக்கும் தமிழ் தயாரிப்பாளர்களே..! 
இது போன்ற தமிழர் நாகரீக வரலாறுகளையும், வீரர்களுடைய கதைகளையும் தயாரிப்பதற்கு முன் வர வேண்டும். தெலுங்கு சினிமா உலகம் அதை பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறான படைப்புக்கள் தலைமுறை கடந்தும் வாழ வைக்கும்.'"

#Sye_Raa_Narasimha_Reddy
#HistoricalBlockbuster