திங்கள், 18 மே, 2020

புதியதோர் உலகம் செய்வோம்

நாள்தோறும் ஊற்றெடுக்கும் கிணறுகளின் தண்ணீரே பயன்படுகிறது. இடையீடில்லாது ஓடிக்கொண்டேயிருக்கிற ஆறே ஜீவநதி; மனிதகுலத்துக்குப் பயன்படுவது. புண்ணிய தீர்த்தங்களாகக்கூட இடையீடில்லாது ஓடிக் கொண்டேயிருக்கின்ற ஆறுகளே அங்கீகரிக்கப்படுகின்றன.

அறிவின் வளர்ச்சிக்குப் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். இலக்கியங்கள், புராணங்கள் மிகப் பழமையானவைகளைக் கற்கவேண்டும். அப்படிக் கற்பது வாழ்நிலையின் அடித்தளத்தை வலுப்படுத்தும்-வேர்கள் மரத்தை வலுப்படுத்துவது போல!
 
அறிவியல், அனுபவம் வளர வளர வளரும் தன்மையுடையது. அறிவியல் முற்றாக உலகியலை, உடலியலைச் சார்ந்தது. இந்த அறிவியல் உலகந்தழி இயது என்றுகூடக் கூறலாம்.
 
கலாச்சாரம், பண்பாடு முதலியன நாடுகள் தோறும் மாறும். இவை தலைமுறை தலைமுறையாக வருவன. இப்படி வழி வழி வரும் கலாச்சாரம், பண்பாடு ஆகியன வளரும் புதிய சமுதாயத்திற்கு மாறுபடாது. சென்ற கால வரலாற்றில் மாறுபட்டதில்லை.
 
ஒரு பழமை, புதுமையை ஈன்றுதர மறுக்குமாயின் அந்தப் பழமையில் ஏதோ குறையிருப்பதாகத்தான் பொருள். ஒரே வழி பழமைவாதிகள் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ளப் புதிய சிந்தனையை புதியவற்றை எதிர்ப்பார்கள்.
 
➡️ கிரேக்க ஞானி சாக்ரட்டிஸ், கலீலியோ, ஏசு பெருமான், அப்பரடிகள், வள்ளலார் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்றாகும். ஆனாலும் அவர்கள் கண்ட புதுமைதான் வென்றது.
 
அறிவு வளரும்போதே, ஆன்மாவும் ஒருங்கிணைந்து வளரவேண்டும். ஆன்மாவை வளர்த்துப் பேணிக்காக்கும் அறிவே, அறிவு. ஆன்மாவுக்குத் தொடர்பில்லாத அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்யாது; மாற்றங்களுக்கும் காரணமாக அமையாது.
 
சிந்தனையில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, அறிவியலில் வளர்ச்சி, வாழ்நிலையில் வளர்ச்சி, சமூகத்தில் வளர்ச்சி இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் நிகழுமாயின் மாற்றங்கள் ஏற்படும்.
 
வளர்ச்சியும் மாற்றங்களுமே மனிதகுல மேம்பாட்டுக்கு உந்துசக்திகள். மனிதன் பழக்கங்களுக்கும், வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.
 
நாளும் மனிதன், புத்துயிர்ப்புப் பெறவேண்டும்; புது மனிதனாகப் பிறப்பெடுக்க வேண்டும். மனிதன் உழுதாலிலேயே உழுது கொண்டிருக்கும் வரை, நிலம் வளம் அடையாது.
 
🔅 அதுபோலவே படித்த சுலோகங்களையும் கோஷங்களையும் திரும்பத் திரும்பப் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி பாதிப்பு அடைந்தபின், மாற்றங்களும் ஏற்படாது.
 
அதனால், சாதி, சம்பிரதாய, மூடப் பழக்கங்களும் நிறைந்து வறுமையில் கிடந்துழலும் கூட்டமாக மக்கள் மாறுவர். இது நாட்டுக்கு ஏற்றதல்ல.
 
ஆதலால், ஒவ்வொரு நாளும் சென்ற காலத்திலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, நாளையை நோக்கி தடைபோட வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல; பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதுவும்" அல்ல, எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி; மாற்றம்...! 

ஆதலால், நமக்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி, எதிர்கால நம்பிக்கை வேண்டும். வளர்ச்சியுடன் கூடியமாறுதல் தேவை. சென்ற காலத்தை விட எதிர்காலம் விழுமிய சிறப்புடையதாக இருக்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். ”இனி எதிர்காலத்தின் சிறப்பும்” என்பார் சேக்கிழார். பாவேந்தன் பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான்.

மத நிறுவனங்கள் அனுட்டானத்தை விட, பிரச்சாரப் புயலில் சிக்கித் தவிக்கின்றன. நாடோ, ஊரோ, வீடோ இன்று ஒன்றாக-ஒருருவாகவில்லை. கிராமத்தின் எல்லையில் நம்மை வரவேற்பது பசுமையும், இலைகளும், பூக்களும் நிறைந்த மரங்கள் அல்ல. கட்சிக் கொடிகளே வரவேற்கின்றன. அரசியற்கட்சிகளின் கொடிகளும் அல்ல.

உள் அமைப்பு ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் உத்தியாகக் கொள்ளாது தேக்கமடைந்ததால் ஏற்பட்ட கோபதாபங்களால் பிரசவிக்கப் பெற்றவைகளே இன்றுள்ள பெரும்பான்மையான கட்சிகள்..👈

'ஆகவே சிந்தியுங்கள்.' வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய பாதையில் செல்ல அடியெடுத்து வைப்போம் நடப்போம்! தொடர்ந்து நடப்போம்!