திங்கள், 18 மே, 2020

"நீ நீயாக இரு.."

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.

மன எழுச்சியடைந்துள்ள இளைஞர்கள் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். 

'அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.'🪔🙏