திங்கள், 18 மே, 2020

பகுத்தறிவு அவன் சொல்கேட்டு நடக்கும் ஒரு புத்திசாலியான அடிமை...!

அரசியலில் உணர்வுக்கும் பகுத்தறிவிற்கும் இடையேயான மோதலில், உணர்வுகளே எப்பொழுதும் வெல்கின்றன என்கிறார் 'வெசுடன்'. அரசியலில் உணர்வுகள்தான் முக்கியம், உண்மையோ அல்லது ஆதாயமோ அவ்வளவு முக்கியமல்ல.

“In politics, when reason and emotion collide, emotion invariably wins.”

மனிதர்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து முடிவெடுப்பதாக இருந்தால், அரசியல்வாதிகள் பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. எல்லாம் வெட்டிப் பேச்சாகவே இருக்கும். உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அரசியல்வாதிகள் மக்களை பகுத்தறிவினால் பேசி ஈர்ப்பதில்லை,  மாறாக அவர்களின் அடையாளம் (சாதி, மதம்) , சித்தாந்தம்,  வெறுப்பு,  பயம், காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படியில் உணர்வுகளைத் தூண்டி ஈர்க்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் எந்த அரசியலை ஆதரிக்கிறார் என்பதை அறிய அவருக்கு என்ன ஆதாயம் என்று பார்க்கக் கூடாது, மாறாக அவர் எது மாதிரியான பாரபட்சங்களைக, விருப்பு, வெறுப்புக்களைக்  கொண்டுள்ளார், எது உணர்வுகளைத் தூண்டும் என்று பார்க்கவேண்டும்.  ஒருவர் தனக்கு முக்கியம் என்று கருதுவது எதுவும் உணர்வுகளுடன் தொடர்புடையது. முக்கியமானதை இழந்தால் உணர்வுகள் வருத்தத்தை அளிக்கும்.  நாம் இழந்தால்  வருத்தப்படாத ஒன்றை முக்கியமாகக் கருதமுடியாது.

ஏன் உணர்வுகள் இவ்வளவு முக்கியமானதாக செயல்படுகிறது  என்பதற்கு நமது மூளையின் வடிவமைப்புதான் அடிப்படைக் காரணம். பகுத்தறிவு என்பது பரிணாம வளர்ச்சியில் மூளையில் உருவான கடைசி அடுக்கு, அது உணர்வுகளை உருவாக்கும் அடுக்கின் மீது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக  உணர்வுகளின் வழியாகப் பகுத்தறிவு செயல்படுவதால், உணர்வுகளுக்கு பகுத்தறிவு அடிமையாக இருக்கிறது. பகுத்தறிவு இல்லாவிட்டால் நாம் விலங்குபோல அறிவின்றி  செயல்படுவோம். உணர்வுகள் இல்லாவிட்டால், ஒரு சமூகத்தில்  மனிதனாக செயல்படவே முடியாது. சில உளநோய் (psychopath) உள்ளவர்கள் கொடிய கொலைகள் புரிவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு உணர்வுகள் இல்லாததுதான். உணர்வும் அறிவும் இனைந்துதான் செயல்படுகின்றன. நாம் உணர்வுகள் காட்டும் திசையில் பகுத்தறிவு செயல்படுகிறது. பகுத்தறிவு என்பது ஒரு வக்கீல் போன்றது. உணர்வு எதை சரி என்று சொல்கிறதோ, அதை நியாயப்படுத்தும் ஒரு வக்கீல்தான் பகுத்தறிவு என்கிறது உளவியல் ஆராய்ச்சிகள். உதாரணமாக தொலைக்காட்சி  அல்லது முகநூல் விவாதங்களில், யாரவது “நீங்கள் சொல்வது சரி”  என்று பகுத்தறிந்து கட்சி தாவி பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அனைவரும் உணர்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு சாதகமாக ஒரு வக்கீலைப் போல நியாயம் கற்பிக்கிறார்கள். உணர்வுகளே அனைத்து முடிவையும் எடுப்பதில்லை. சில விடயங்களில் உணர்வுகள் பகுத்தறிவின் கையில் முடிவெடுக்கும் பொறுப்பை  கொடுத்து விடும். உணர்வுகள் என்பது ஒரு முட்டாள் எசமானான் போல.. "பகுத்தறிவு அவன் சொல்கேட்டு நடக்கும் ஒரு புத்திசாலியான அடிமை...!"