திங்கள், 18 மே, 2020

எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும்..!

“வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யகலத்தொழில் செய்தே – பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். என்று #சமத்துவத்தையும்,

“உடன் பிறந்தார்களைப் போல – இவ்வுலகில்
மனிதரெல்லாருக்கும் இடம் பெரிதுண்டு வையத்தில் – இதில்
எதுக்கு சண்டைகள் செய்வீர்? என்றும் சமாதானம் கோருகிறான்.

“காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான். 

நம் #பாரதி, #மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?

பாரதியை ஒரு சார்புடையவனாக சித்தரிக்கும் சதியோ என்று வினவத் தோன்றுகிறது. பாரதி ஒரு மகாகவி என்னும் வெற்று பெருமை பேசி பயனில்லை, அவனை உலகமுழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் இனப் பெருமை என்பது வெற்று உணர்ச்சி முழக்கமாக, இனவெறி தூண்டுவதற்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு, பாரதியே கூறியதுபோல்,

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
       இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
       நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
       தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
       பரவும் வகை செய்தல் வேண்டும்.

- நாம் அதற்கு உழைப்போம்.