வியாழன், 28 மே, 2020

மாறுதல் காலப் பயங்கரங்கள்

மாறுதல் காலப் பயங்கரங்கள் (Horrors of Transition)
உலக அளவிலான தனித்தனி நிலங்களும் சமூகங்களும் அரசுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, கலக்கப்பட்டு, குழப்பப்பட்டு புதிய வகையான அரசுகள், ஆட்சிப் பரப்புகள் உருவாக்கப்பட்ட காலனிய கால மாறுதல்கள் என்பவை உலக வரலாற்றில் பயங்கரங்கள் நிறைந்த பல புதிய அத்தியாயங்களைத் தோற்றுவித்தன. நில ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, இன மேலாதிக்கம் என்பவற்றின் மூலம் நிலவியல்சார் பண்பாட்டுச் சமூகங்கள் அடிமை நிலைக்குத்  தள்ளப்பட்டன. தமக்கு முற்றிலும் அன்னியமான ஒரு நாடு, இனம், அரசு தம்மீது ஆதிக்கம் செய்தல் என்பதன் புதிர் பல சமூகங்களில் அச்சத்தையும், உள்ளார்ந்த பயங்கரம்சார் உளவியலையும் தோற்றுவித்தன.

இந்தக் காலகட்டத்தின் மாற்றங்கள் அனைத்தும் உலகின் நிலம்சார் சமூகங்களின் மீது அவற்றின் அனுமதி இல்லாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்  பல கட்டமைப்பு மாற்றங்களையும் உண்டாக்கின. நவீன அரசுகளும் நவீன அறிவமைப்புகளும் நவீன மதிப்பீடுகளும்  நவீன நிறுவனங்களும் ஒவ்வொரு சமூகத்தையும் அவற்றின் மயக்க நிலையூடாகவே  ஊடுறுவி அடிப்படைகளைத் திருத்தி அமைத்துவிட்டன.

இந்த மாறுதல்களை உலக ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தியதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களும், கொடூரங்களும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வரலாற்று நினைவுகளாக இருப்பது ஒரு புறம்,  தம்மை ஒடுக்கிய சமூகங்களின் அறிவும், அமைப்புகளும்  தமக்குள் ஊடுருவி இயக்கிக் கொண்டிருப்பதன் முரண் மறுபுறம் என்ற ஒவ்வாமை மற்றும் பொருந்தாமை  அடிமைப்பட்ட நிலங்களின்  ஊனமுற்ற உளவியலாக மாறியிருந்தது.  இந்த மாறுதல்காலப் பயங்கரங்களை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக எதிர் கொண்டு தனதாக்கம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அதில் ஒன்றுதான் நிலங்களுக்குள்ளான உள்மோதல்கள். சுயச்சமூக குற்றச்செயல்கள், தன்னழிவுச் செயல்பாடுகள், சமூகப் பொருத்தமின்மை, தனிமனிதர்களை உள்ளடக்காமை என வெவ்வேறுவித வன்முறை வடிவங்களும் இந்த மாறுதல்காலப் பயங்கரங்களில் அடங்கும். அவ்வகையான மாறுதல் கால பயங்கரங்களின் ஒரு பகுதியாகவே இலங்கை மண்ணில் நிகழ்ந்த ஈழப்போர் என்பதும் அமைந்து விட்டது.  நவீன கால ஓருலக அமைப்பில் தன் அடையாளத்தை முதன்மைப்படுத்தி தனக்கான மொழி, நிலம், நாடு என்பதை வடிவமைத்துக்கொள்ள முயன்ற ஒரு மக்கள் தொகுதியின் துயரமாக  அது இருந்து வந்தது.

தன்னை நவீனப்படுத்திக்கொள்ள உலக சமூகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வெறு  உத்திகளை வெவ்வெறு  செயல்வடிவங்களைக் கைக்கொள்கின்றன, போர் என்பதும் அவற்றில் ஒன்று. புராதனமானதும் அதே சமயம் புதிய உத்திகளை உள்ளடக்கியதுமான இந்தச்செயல் மாறுதல்காலப் பயங்கரங்களில் அதிக  பலம் மிக்கதாகவும், அதிக வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. இதனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இலங்கை மண்ணின் தமிழ்ச் சமூகம் நேரடியாக ஒரு நவீனத் தன்மையை அடைந்து விடுகிறது. மாறுதல் காலப் பயங்கரத்திற்கு உட்படும் ஒரு சமூகம் என்ற நிலையிலிருந்து பயங்கரத்தில் பங்கெடுக்கும் சமூகமாக அது மாற முயற்சிக்கிறது.  இதன் மூலம் உலக அரசியலில் தனது அடையாளத்தை அது வலிந்து உருவாக்கிக் கொள்கிறது.

இலங்கை அரசு சிங்கள மொழி-இன அடையாளத்தை மையப்படுத்தித் தன் நிலத்தை, வரலாற்றை வரையறை செய்வதற்கான அடிப்படைகளை உருவாக்கிய உடனேயே தமிழ்ச் சமூகமும் தனது மொழி-இன அடையாள அரசியலுக்கு அதிக அழுத்தம் தரத் தொடங்கிவிடுகிறது.  இந்த  எதிர்மைகள் இலங்கை அரசியல் மற்றும் சமூக இயக்கத்தில் ஒவ்வொருவரையும் ஆயுதமயப்படுத்தும் செயலின் முதல் கட்டமாக அமைந்து விட்டன. மதம், மொழி, இனம் என வேறுபாட்டு அடையாளங்களின் போர்க்குணம் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களைத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. இது இரண்டு இனங்களுக்குமே மாறுதல் காலப் பயங்கரத்தை நிகழ்த்தும் பாத்திரத்தை ஏற்கும் நிலையை உருவாக்கி  விடுகிறது. சிங்களர் இனம், மொழி,  பௌத்தமதம்  என்பவை அரசால் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்ட நிலையில் ‘தமிழ்’ என்பது  அரசற்ற போர்க்  குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இங்கு சிங்கள அரசும் இராணுவமும் தமிழ் மக்களை உள்ளடக்காமல் அடிமை நிலையில் வைத்து பணிந்து வாழும்  மக்களாக அவர்களை உறுதிப்படுத்தும் செயல்முறைகளைக் கையாண்டதன் மூலம் போராளிகளின் நேரடி எதிர்க்களமாக தம்மை நிறுத்திக் கொண்டன.  மாறுதல்காலப் பயங்கரத்தின்  மிக   அவலமான பகுதி  இது.

இந்நிலையில் தமிழ்நிலம், தமிழ்த்தேசம் என்பவை உயிர் வாழ்க்கையுடன் மட்டுமின்றி மனித அடையாளத்தின் ஒரு பகுதியாக உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இவை அனைத்துமே உருவகச் செயல்பாடுகள் என்றாலும் போர் என்பதை நேரடி உத்தியாக முன்வைத்த ஒரு அரசின் முன் கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற நிகழ்வியல் துயரமாக மாறிவிடுகிறது. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மதிக்கப்படாத நிலையிலும் மீறப்பட்ட நிலையிலும் உருவக நிலைகள் உடைந்து உடல் அழிப்பு நிலையை அடைந்து விட்டது. (1957-இன் பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம், 1965-இன் டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவை அவமதிக்கப்பட்டன.)

1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தமிழர்களை, தமிழ்க் குழுக்களை போர் இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன. இலங்கை அரசு தன்னை தமிழர்களுக்கானதாக வைத்துக்கொள்ள முடியாததுடன் தமிழர் அழிப்புக்கான நிறுவனமாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறது. அரசியல் பேச்சுவார்த்தைகளால், உள்ளடக்கும் அரசியல் ஒப்பந்தங்களால், ஆட்சிப் பகிர்வுகளால் தமிழர்களிடையே அடையாள உறுதியையும், உயிர்வாழும் உரிமையையும் பலப்படுத்தி இருக்க வேண்டிய இலங்கை அரசு ஆயுதங்களையே மையப்படுத்திய பொழுது தமிழர்களின் குழுக்களும் அதே உத்தியைக் கைக்கொள்ள வேண்டியிருந்து.

இந்தப் போர்ச் சூழல் ‘இடைநிலை அரசியல் சொல்லாடல் எதனையும் உருவாக்க முடியாமல் போனதால் போராளிகள் என்போர் தம்மை அரசுக்கு இணையாக எதிர்நிலைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. அர்த்தம் அற்ற, வெற்றடக்கம் கொண்ட, பணிந்து போகும் ஒரு உயிரியாக இருப்பதை விடவும் ஒரு போராளியாக  இருப்பது அர்த்தமுடையதாக, பெருமை தருவதாக, அதிகாரத்தை வழங்கக் கூடியதாக தோற்றம் தரத் தொடங்கியது.

இதற்கு முன்பே உலக அளவில் புரட்சிகள் என்பவை மனித நிலைமாற்றங்களின் களமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆயுதம் தாங்கிய தனிமனிதர்கள் குழுக்களாகவும் படைகளாகவும் மாறும்போது கோட்பாட்டு வலிமை உடைய, அர்த்தம் நிறைந்த மனிதத் தொகுதிகளாக வடிவம் பெறுகின்றனர்.   இது அரசுகளுக்கு இணையான ஒரு தோற்றத்தை தரக்கூடியது. தனிமைப்பட்ட, சிதறுண்ட மனிதர்களுக்குப் பதிலாக ஒன்றிணைந்த, தொகுதியான,  செயலுடைய, மகிமைப்பட்ட உறுப்பினர்களின் உருவாக்கம் இங்கு நிகழ்கிறது.

அரசு ராணுவங்களில் இடம் பெறுவோர் தேசபக்தி, தியாகம், புனிதக் கடமை என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் பெறும் நிலையில் போராளிகளாகத் தம்மை மாற்றிக் கொண்டோர் இலட்சியம், புனித இலக்கு, விடுதலைக்கான  தியாகம் என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் அடைகின்றனர்.  இது தாமே உருவாக்கிக் கொண்ட உயர்வாக்கம்  என்பதைவிட தமக்குப்பின் உள்ள மக்களால் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்ள போராடச் சூழல் அவர்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருகிறது. இந்த அடையாளம் ஒரு வகையில் மீறப்படவோ, மீள இடம்அளிக்கவோ முடியாத நிலையை அடையக் கூடும். இந்தச் சிக்கல்தான் ஈழப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் பின் திரும்பிப்போக முடியாத நிலையை உருவாக்கியது.

மாறுதல் காலப் பயங்கரங்கள் என்பவை ஒவ்வொரு சமூகத்தையும் வெவ்வேறு வகையில் பாதிப்பதுண்டு. அரசு, நிர்வாகம், நீதித்துறை, பொருளாதாரக் கட்டுமானம் என்பவை மாறிவிட அதற்குட்பட்ட மக்களோ வேறு வகை  சமயநம்பிக்கை, பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டவர்களாகவே இருந்தால், இவ்வகை பயங்கரம் வெளித்தெரியாத உள்ளடங்கிய உடைவுகளை ஏற்படுத்தும்.  பிரஞ்சு புரட்சி போல ஒரே அமைப்புக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகள் மோதி உடைத்துக் கொண்டு மாற்று வடிவம் பெற முயற்சிக்கும் போது ஏற்படும் பயங்கரங்கள் வெளிப்படையான நிகழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கும். அந்த அமைப்புக்குள்ளாகச் சில பகுதிகளை உடைத்து நீக்கி மாறுதல்களைச் செய்வதன் மூலம் கோட்பாட்டு அடிப்படைகள் மாறும்.  ‘விஞ்ஞானச் செயல் திட்டங்கள்’ ஒரு சமூகத்தின் மீது கவிழும் போது அவற்றின் மீதான புரிதல் இன்றியே அவற்றிற்கு உட்பட்டு பிறகு அம்மாற்றங்களைத்  நமதாக்கிக் கொள்ள  நேரலாம். இந்தச் சூழலிலும் கூட மாறுதல் காலப் பயங்கரங்கள்  உள்ளார்ந்து நிகழவே செய்யும்.

ஈழப் போராட்டம் என்பது நவீன தேசம், அரசு, நிர்வாகம், ஆட்சி என்ற மாறிய வடிவங்களால் சூழப்பட்ட ஒரு சமூகத்திற்குள் நிகழ்ந்த மாறுதல்கால அமைதியின்மை, சமநிலைக் குலைவு.  அதனை இலங்கை அரசு பொறுப்பற்ற வகையில் கையாண்டதும், வன்முறையால் அதனை புதைத்துவிடலாம்  என்று முடிவு செய்ததும் மாறுதல் கால பயங்கரத்தை போர்க்கால பயங்கரம் நோக்கித் தள்ளியது.  அதே வன்முறை அதனை பயங்கரமானதும் துயர் நிரம்பியதுமான ஒரு முடிவுக்குக் கொண்டு செலுத்தியது.  தற்போது மீண்டும் ஒற்றைத் தேசிய அரசு, பலமான நிர்வாகம், வலிமையான இராணுவம், ஒன்றுப்பட்ட நாடு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடையில் எல்லாவற்றையும் இழந்த மக்கள்    தற்போது ‘உயிர்வாழ்க்கை’        என்பதை மட்டும் பெற்றவர்களாக   அரசின் கருணையின் கீழ்  வாழ வேண்டியவர்களாகி   உள்ளனர்.

இதுவரை கொல்லப்பட்ட  தமிழர்கள், போராளிகள், அரசுப் படையினர் எல்லோரும் இந்த மாறுதல்காலப் பயங்கரத்திற்கு பலியானவர்களாகின்றனர். கொல்லப்பட்டத் தமிழர்கள், போராளிகள் என்ற வகையில் இனி நினைவு கடந்த மறதிக்குள் புதைந்தால் தவிர மீந்திருப்பவர்கள் உயிர்வாழ முடியாது. இந்த நிலைகடந்த வலி, துயரம், இழப்பு, என்பவை ஒரு மரத்துப் போன நிலையை, பேதலித்த கூட்டு மனநிலையை உருவாக்கக்கூடியது.

இந்த மன நிலையின் வெளிப்பாடுகள் இனி தம் கடந்த காலப்போராட்டம் பற்றிய கசப்புணர்வாக வெளிப்படும். போராளிகள் மீதான வெறுப்பாக, தாம் கண்ட கனவின் மீதான அச்சமாக, தம்மைப் பற்றியே ஏதும் சொல்லமுடியாத மௌனமாக, செயலற்ற  ஒப்படைப்பாக  வெவ்வெறு வகைகளில் வெளிப்படும். எல்லா இலட்சியங்களின் அடிப்படையிலும்  எளிய மனித உணர்வுகளே  உள்ளன, இந்த எளிய அடிப்படை  உணர்வுகளே  எல்லா வரலாற்று  நிகழ்வுகளுக்குப் பிறகும் மீந்து நிற்பவை. தற்போது  “மீந்து நிற்கும்” இலங்கைத் தமிழர்களிடம் இருப்பவை அச்சங்கள், எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த  வெற்று மனித   நிலை.  இந்த  ‘வெற்றுமனித’  நிலையைக்    கூட ஒரு அரசு தனக்கு   வெளியில் உள்ள ஒரு மக்கள் தொகுதியின் அரசியலுடன் அடையாளப்படுத்தியே  அணுகும்  என்பதுதான்  இதில் உள்ள அவலம்.

அவர்கள் வெற்று மனித நிலை அடைந்த ‘தமிழர்கள்’ என்ற அடையாத்தையோ, அவர்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் தமக்கெனத் தனிநாடு கேட்ட ஒரு நிலப்பகுதியின் மக்கள் என்பதை அரசும் ராணுவமும் மறக்கப் போவதில்லை. இந்த அடையாளத்துடனேயே அவர்களுக்கான எதிர்காலம் திட்டமிடப்படும். அவர்களின் ஒவ்வொரு அசைவும் மற்றொரு விடுதலைப் போரின் தொடக்கமாக அமைந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடனேயே கவனிப்புக்குள்ளாகும். இந்நிலை  இன்னும் ஒரு வகையான மாறுதல் காலப் பயங்ரகங்களைக் கொண்டதாக இருக்கும்.  அதற்கும் தமிழ்ச் சமூகம் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் இது.