புதன், 6 மே, 2020

ஐசக் நியூட்டன்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் (வைரக் கல்) என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீவைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்ட்ன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள்.

உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது.

நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்றுசொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார்.

👉 சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே”- வெற்றி வேர்க்கை

👉 நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள்