வியாழன், 19 டிசம்பர், 2019

கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்

கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்துகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

2050ம் ஆண்டில் உலக கடற்பரப்பில் மீன்களை விட பிளாஸ்டிக் பொருட்களே அதிகமாக காணப்படும் என்றால் நம்ப முடியுமா..?? ஆம்.. உலகம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச பொளாதார மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எண்ணற்ற கடல் வளங்களை தன்னுள் கொண்டு இயற்கையின் அவதாரமாக திகழும் கடல் தான் உலகின் 71 சதவீத பரப்பளவை நிரப்பியுள்ளது. வெறும் 29 சதவீத நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் 71 சதவீத கடற்பரப்பை பிளாஸ்டிக்கை கொண்டு நிரப்பினால் உலகம் என்னவாகும்..? தென் ஆப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் அலையில் அடித்து வரப்படும் காட்சியே அதற்கு சாட்சி..!

ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது, நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு லாரி பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்குச் சமம். அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் ஊடாகவே கடலில் கலக்கின்றன. எந்த வித சிந்தனையுமின்றி நாம் தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களை காவு வாங்குவதோடு, கடல் மீன்களை உட்கொள்ளும் நமக்கே மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

பிளாஸ்டிக் கழிவுகள் அப்படியே கடலில் மிதப்பது அல்ல. ஒருசில பிளாஸ்டிக்குகள் நுண் துகள்களாக (MICRO, NANO PLASTICS)மாறிவிடுகின்றன. இதனை உட்கொள்வதால் 800 வகையான கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கலிஃபோர்னியா - ஹவாய் இடையேயான கடற்பரப்பில் உள்ள பிளாஸ்டிக் நுண் கழிவுகள் மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க் நகரங்களை விட ஏழு மடங்கு அதிகம். 

ஆமைகள், திமிங்கலங்கள் முதல் கடற்பரப்பு மேல் பறக்கும் பறவைகள் வரை பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்ளுவதால் தொண்டைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் சிக்கி உயிரிழக்கின்றன. அண்மையில் ஸ்காட்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அதன் வயிற்றில் இருந்து 100 கிலோ எடைக்கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. திமிங்கலத்தின் உயிரிழப்புக்கு வயிற்றுப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தின.

உலக வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஒருப்பக்கம் இருந்தாலும் கடலும் கடல் சார்ந்த வளங்களும் பிளாஸ்டிக் எனும் குண்டுகளால் நாள்தோறும் துளைக்கப்படுகிறது. 

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு அரசும் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கண்ணுக்குத் தெரியாத பல உயிர்கள் ஆபத்தில் மூழ்குகின்றன.

என்ன தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு முடிந்தளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளங்களை பாதுகாப்பதே மனிதர்களின் தார்மீக பொறுப்பு!

சனி, 23 நவம்பர், 2019

சிதைந்து கொண்டிருக்கும் ஹாங்காங்!

போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல் ஓயாததால், வன்முறைக் களமாக மாறியிருக்கிறது ஹாங்காங். எனினும், போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும், என எச்சரித்துள்ளனர் போலீசார்.

ஹாங்காங்கில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில், மசோதா கொண்டு வரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய மசோதா திரும்ப பெறப்பட்டது. ஆனாலும் மக்களின் போராட்டம் 6 மாதங்களை கடந்து இன்றளவும் ஓய்ந்தபாடில்லை.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு, முழு சுதந்திரம் வழங்க கோரி, போராட்டம் நீடிக்கிறது. ஹாங்காங்கின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு, போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து, அப்புறப்படுத்த முயன்ற போலீசார் மீது, போராட்டக்காரர்களை பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும், போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால், வன்முறை களமாக மாறியிருக்கிறது ஹாங்காங்.போராட்டத்தை கைவிட மறுத்ததால், பலரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை, விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டம் உலகளவில் எதிரொலித்துள்ள நிலையில், அதை தீவிரமாக கண்காணித்து வருவதாக, ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில், மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மேரீஸ் பெய்ன் கேட்டுக் கொண்டுள்ளார். ஜனநாயகத்தை வலியுறுத்தி, 6 மாதங்களாக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தை, கட்டுப்படுத்த முடியாமல், ஹாங்காங் அரசு திணறி வருகிறது.

திங்கள், 18 நவம்பர், 2019

அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை: – சுமந்திரன்

எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தீர்வு வரும்வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை முடிவை வைத்துள்ளது. இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தாலும் கடந்த ஒரு மாதமாக தமிழ் அரசு கட்சிக்குள் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 25 அக்டோபர், 2019

டென்மார்க்கில் ஆச்சரியம்: நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்

டென்மார்க்கில் கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோபன்ஹேகன், 

டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ‘ரப்ஜெர்க் நியூடு’ கலங்கரை விளக்கத்தை பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மணல் அரிப்பு காரணமாக இந்த கலங்கரை விளக்கம் மெல்ல, மெல்ல சரிந்து மொத்தமாக கடலில் விழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் கடலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த கலங்கரை விளக்கம், மணல் அரிப்பு காரணமாக தற்போது 2 மீட்டர் தொலைவில் இருக்கிறது.

எனவே இந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க டென்மார்க் அரசு முடிவு செய்தது. அதற்காக 7½ லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5 கோடியே 32 லட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் தொடங்கின.

 தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 720 டன் எடைகொண்ட அந்த கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன. கடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளை மறைத்து எந்த ஆராய்ச்சியையும் நடத்தவில்லை-எட்வர்டு ஸ்னோடன்

அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளை மறைத்து எந்த ஆராய்ச்சியையும் நடத்தவில்லை என அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் உள்ள  ஏரியா 51 பகுதி குறித்து பல்வேறு கற்பனை செய்திகள்  வருகின்றன. லாஸ் வேகாஸில் இருந்து வடமேற்கே 80 மைல்கள் தொலைவில் நிவேடாவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் தான் ஏரியா 51 எனப்படுகிறது. 

2013 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட - ஏரியா 51 முகாமில் பிடிபட்ட வேற்றுகிரகவாசிகள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய தொழில்நுட்பமும், பறக்கும் வாகனமும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதை அமெரிக்க அரசு மறுத்து வருகிறது.

ஏரியா 51ல் பணியாற்றிய இயற்பியலாளர் என்று தம்மை கூறிக் கொண்ட பாப் லாஸர் என்பவர் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் 1989-ல் பேட்டி அளித்த போது, இந்தத் தகவல்கள் பரவத் தொடங்கின.

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது பற்றியும், வேற்றுக்கிரக பறக்கும் சாதனங்கள் பற்றி அமெரிக்க அரசிடம் தகவல்கள் உள்ளதாகவும், மக்களிடம் தெரிவிக்காமல் அவற்றை மறைத்து வைத்திருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.

ரகசியத்தன்மை உள்ள அந்த ராணுவ முகாமை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுமே வேற்றுகிரகம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.  `பூமிவாசிகளை வரவேற்கிறோம்' என்ற அறிவிப்புப் பலகை வரவேற்கிறது.

‘ஏரியா 51’ பகுதியில், கண்ணுக்கு தெரியும் ஆய்வுக்கூடங்களை விட, மண்ணுக்குள் மறைந்திருக்கும் ஆய்வுக்கூடங்களே அதிகம். அதனால்தான், ‘ஏரியா 51’ ரகசியம் காக்கப்படுகிறது.

சிஐஏவின் முன்னாள் ஊழியர், எட்வர்டு ஸ்னோடன் நாட்டின் மிக நெருக்கமாக வைத்திருக்கும் சில ரகசியங்களை தேடி உள்ளார்.  கூகிளின் சிஐஏ பதிப்பை அணுகக்கூடிய  ஆர்வமுள்ளவர்களைப் போலவே, உலகில் உலவும் சில மிக முக்கியமான கேள்விகளுக்கான பதில்களைத் தேடி உள்ளார்.

எட்வர்ட் ஸ்னோவ்டென் சிஐஏ தரவுத்தளங்கள் மூலம் தேடியபோது அரசாங்கம் வேற்றுகிரகவாசிகளை மறைத்து வைத்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினார். 

 ஸ்னோடன்  புத்திசாலித்தனமான, வேற்று கிரக வாழ்க்கை பற்றி அமெரிக்க அரசிற்கு ஒன்றும் தெரியாது என்று  கூறி உள்ளார்.

வேற்றுகிரகவாசிகள் ஒருபோதும் பூமியைத் தொடர்பு கொள்ளவில்லை, அல்லது குறைந்தபட்சம் அவர்கள் அமெரிக்க உளவுத்துறையையும் தொடர்பு கொள்ளவில்லை "என்று ஸ்னோடன் தனது சமீபத்திய   பதிவில் "எழுதி உள்ளார்.

ஆனால் நிலவில் அமெரிக்கா இறங்கியது  உண்மையில் நிகழ்ந்தது என கூறி உள்ளார்.

கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி

All 39 people found dead in shipping container in Essex were Chinese nationals, officials confirm.

லண்டன்

கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி

இங்கிலாந்தில், போலீஸ் பறிமுதல் செய்த லாரி கண்டெய்னரில் சடலமாக கிடந்தவர்கள் சீனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் பின்தங்கிய நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

அவ்வாறு குடிபெயர்வோரை தடுக்க எல்லையோரம் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் சட்டவிரோதமாக குடியேற முயல்கின்றனர்.

அவ்வாறு சட்டவிரோதமாக செல்வோர் பூட்டிய வாகனங்களில் நீண்ட தூரம் பயணித்து மூச்சுத் திணறி உயிரிழப்பது உண்டு. அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு டென்மார்க்கிலிருந்து இங்கிலாந்து வந்த லாரியில் 58 சீன அகதிகளின்  உடல்கள் இருந்த சம்பவம் உலகையே அதிரவைத்தது.

இந்தநிலையில், பெல்ஜியத்திலிருந்து கப்பல் மூலம் லண்டன் வந்த கண்டெய்னர் நேற்று லாரியில் வைத்து லண்டனின் கிரேய்ஸ் பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதனை காவலாளிகள் சோதனை செய்தபோது, அதில் பெண்கள் உள்பட  39  பேரின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கண்டெய்னருடன் சடலத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தவர்கள் சீனர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த சம்பவம் நினைத்து பார்க்க முடியாதது என்றும் இந்த சோகமான சம்பவத்தைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் உண்மை என்ன என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

புதன், 23 அக்டோபர், 2019

கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் புதிய உச்சம்.. செயற்கை தோல் கண்டுபிடிப்பு

பொதுவாகவே குளர்ச்சி, வெப்பம் ஆகியவற்றை நமது தோல்தான் முதலில் உணரும். பின்னர் அதை நரம்பு வழியாக மூளைக்கு கொண்டு சென்று அதற்கு ஏற்றவாறு எதிர்வினையை நமது உடல் செய்யும்.

அதேபோல், கிள்ளுதல், தொடுதல், கூச்சம் போன்ற உணர்வுகளை மனித மூளை தோல் மூலமே கண்டறியும். இந்நிலையில், மனித உணர்வுகளை கண்டறியும் செயற்கை தோலை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயற்கை தோல், சிலிக்கான் (silicone membrane) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித தோல் மாற்று அறுவை சிகிச்சைதான் எங்கள் இலக்கு என்று செயற்கை தோலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்மருத்துவம்உலகம்பரம்பரை நோய்களை திருத்தியமைக்கும் பொறிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு உண்டாகும் பல நோய் நிலைமைகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகின்றன. இக்குறைபாடுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படக்கூடியனவாகும். இந்நிலையில் குறித்த குறைபாடுகளை 90 சதவீதம் வெற்றிகரமாக மாற்றயமைக்கக்கூடிய புதிய பொறிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள சுமார் 75000 நோய்களை கட்டுப்படுத்தலாம்.

விக்கிப்பீடியாவை விரைவில் இழந்து விடுவோமா? - புதிய தகவல்

அறிவுப்பசிக்கான தீனி அற்றுப்போகும் அபாயம், ஈடில்லா ஞானத்தை அளிக்கும் மட்டற்ற கலைக்களஞ்சியச் சுரங்கம் வற்றிப்போகும் ஆபத்து. விக்கிப்பீடியாவுக்கு என்ன நேர்ந்தது?

வாஷிங்டன்:

அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதித்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள்  ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன.

ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தொகுப்புகளாக வெளியான இந்த புத்தகங்களின் மூலம் நாம் அறிய விரும்பிய தகவல்களை எல்லாம் விளக்கப்படங்களுடன் தெரிந்துகொள்ள முடிந்தது. 

ஆனால், இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்களை கொண்டதாகவும் முழு தொகுப்பும் பல்லாயிரம் ரூபாய் விலையிலும் இருந்ததால் ஏழை-எளியவர்களால் இவற்றை வாங்கி பயனடைய இயலாத நிலை இருந்தது. 

எனினும், மாவட்ட அரசு தலைமை நூலகங்களில் ‘குறிப்புதவி நூல்கள்’ என்ற பகுதியில் இவை வைக்கப்பட்டிருந்தன. நம்மால் இந்த புத்தகங்களை சொந்தமாக்கி கொள்ள இயலாமல் போனாலும் தேவையான குறிப்புகளை பெற  ‘என்சைக்லோப்பீடியா’ தொகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.

சில ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளாக வெளியாகும் ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகங்களில் முந்தைய பதிப்புக்கு பிறகு நடைபெற்ற மேலும் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

நாளடைவில் உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி அபாரமான வளர்ச்சியை அடைந்தது. கம்ப்யூட்டர், மின்னணு எழுத்தியல் முறை அதிகரித்தது. இன்டர்நெட் எனப்படும் இணையத்தளத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாத அம்சமாக மாறியது.

எழுத்துகளாக அச்சுக்கோர்த்து, மையால் காகிதத்தில் அச்சிட்டு புத்தகமாக தயாரித்து விற்பனை செய்த காலம் மாறி, இணையத்தின் வழியாக மின்னணு முறையில் கம்ப்யூட்டரில் புத்தகங்களின் பக்கங்களை காணும் நிலை உருவானது.

இப்படி சில தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடக்கும் நிலையை மாற்றி அனைத்து தகவல்களையும் கலைக்களஞ்சியமாக ஒரே இடத்தில் 
குவியலாக  படைக்கும் எண்ணம் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் என்பவருக்கு தோன்றியது.

இதன் விளைவாக ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகத் தொகுப்புகளைப்போல் இணையத்தளத்தின் வாயிலாக ஓர் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கினார். ’விக்கிப்பீடியா’ என்ற பெயருடன் 15-1-2001 அன்று துவக்கப்பட்ட இந்த இணையவழி அறிவுச்சேவைக்கு இன்று வயது 18.

தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ’விக்கிப்பீடியா’ நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் பிரதான ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை.

உலகின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இந்த ’விக்கிப்பீடியா’ இணையப்பக்கத்தில் தனித்தனி தலைப்புடன் பதிவு செய்கின்றனர்.

குறிப்பாக, இணையத்தளத்தில் நரேந்திர மோடி என்று தேடினால் முதலில் அவரது பெயரிலான 'விக்கிப்பீடியா’ பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். இப்படி உலகளாவிய அளவில் பல வரலாறுகளும் சம்பவங்களும் தனிநபர்கள் பற்றிய குறிப்புகளும் விக்கிப்பீடியாவில் பொதிந்துள்ளன.

பெரும்பாலும் முதலில் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படும் இதுபோன்ற தரவுகளை பிறநாட்டினர் தங்களது தாய்மொழியில் மீள்பதிவிடுகின்றனர். இந்தியாவிலும் அனைத்து மாநில மொழிகளிலும் பல 'விக்கிப்பீடியா’ தகவல்கள் காணக் கிடைக்கின்றன. 

அவற்றில் சில திருத்தங்களையும் பலர் சுட்டிக் காட்டுவதுண்டு. பின்னர், அவை நிவர்த்திக்கப்படும். இப்படி பல தனிநபர்கள் தாமாகவே முன்வந்து சம்பளம் ஏதுமின்றி பதிவிடும் தகவல்களை தொகுப்பாக திரட்டி வைக்கும் பணியை 'விக்கிப்பீடியா’ நிர்வாகம் செய்து வருகிறது. 

இந்த தகவல் திரட்டுகளை எல்லாம் பாதுகாப்பதற்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகளை விலைகொடுத்து பெறுவதற்கும், தகவல் திரட்டுகளை எல்லாம் டிஜிட்டல் கோப்புகளாக சேகரித்து, பாதுகாத்து சர்வர்களின் மூலம் பயனாளிகளுக்கு அளிப்பதற்கும்  ஏராளமான பணம் தேவைப்பட்டாலும் வர்த்தக நோக்கம் ஏதுமின்றி, பயனாளிகளின் அறிவுப்பசிக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இங்கு இலவசமாகவே கிடைத்து வருகின்றன. 

இதனால், உலகம் முழுவதும் பலகோடி மக்கள் பலனடைந்துள்ளனர். அன்றாடம் சிலகோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தகவல்களை தேடி விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்லும் வாசகர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சில விக்கிப்பீடியா பக்கங்களின் முகப்பில் ஒரு விண்ணப்பம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

‘இந்தியாவில் உள்ள அனைத்து வாசகர்களும் அறிவது.., விக்கிப்பீடியாவின் சுதந்திரத்தை நீங்கள் பாதுகாத்து நிலைநாட்ட ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உங்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், 99 சதவீதம் பேர் அப்படி தருவதில்லை.

இதை வாசிக்கும் அனைவரும் 150 ரூபாயாவது அன்பளிப்பாக அளித்தால்தான் இனிவரும் ஆண்டுகளுக்கு அபிவிருத்திக்கான பாதையில் விக்கிப்பீடியாவை அழைத்துச் செல்ல இயலும்.

லாபநோக்கமற்ற முறையில் இந்த விக்கிப்பீடியாவை நாங்கள் தொடங்கியபோது இதனால் ஏற்படப்போகும் பொருளிழப்பு பற்றியும் இதற்காக நீங்கள் வருத்தப்பட நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர். 

ஆனால், விக்கிப்பீடியா வர்த்தகரீதியாக மாற்றப்பட்டு விட்டால் அதனால் இந்த உலகிற்கு பேரிழப்பு என்று நாங்கள் கருதினோம். ஞானத்தை விரும்பும் அனைவரையும் விக்கிப்பீடியா ஒன்றிணைத்து வருகிறது. படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் சில கொடையாளர்கள் ஆகியோர் நம்மை வாழ்வித்து வருகின்றனர்.

நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை மாறாத எண்ணற்றத் தகவல்களை இங்கு பதிவிட்டு உங்களுக்காக உழைக்கும் மக்களை உள்ளடக்கிய சமுதாயமாக திகழும் விக்கிப்பீடியா இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கவும் வளரவும் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்’ என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரூ.150, 300, 500, 1000, 1500, 3000, 5000 அல்லது அதற்கு அதிகமான தொகையையும்கூட நன்கொடையாக அளிக்க விரும்பும் கொடையாளர்கள் பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த தகவல் வந்துபோகும் பெட்டியில் இடம்பெற்றுள்ளது.

செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய உள்ள பேஸ்புக்..!

செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வானொலியைத் தவிர, 1990கள் வரை நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள அடுத்தநாள் காலையில் வரும் நாளேடுகளுக்காக மக்கள் காத்திருந்தனர். பின்னர் செய்தி தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் என்று பரிணமித்து வந்த செய்தித்துறை இன்று முழுக்க முழுக்க இணைய மயமாகிவிட்டது. ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக சென்று விழுந்துவிடுகிறது. இதற்கு முழு முதற்காரணம் சமூக வலைதளங்களின் பயன்பாடுதான். 

சமூக வலைத்தளங்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, தொலைக்காட்சியில் செய்தி நேரத்திற்காக காந்திருந்தவர்களை செல்போனை நோக்கி வரவைத்திருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் எளிதில் மக்களை அடைந்துவிடுகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது பேஸ்புக் நிறுவனம். 

நம்பகமான செய்திகளைப் பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு  புதிய செய்தி பிரிவை அறிமுகம் செய்வது தான் அந்த புது முயற்சி. செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி  செய்ய உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான  Wall Street Journal, News Corp, Dow Jones, New York Post, the Washington Post போன்ற செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 

செய்தியை வெளியிட விரும்பும் நிறுவனங்கள் மக்களுடன் நேரடி உறவை ஏற்படுத்த இந்த புது வசதிகள்  உதவும்.மேலும் அதன் உண்மைத்தன்மை உயர்தரமாக  இருப்பதையும் இந்த புது வசதி உறுதி செய்கிறது.  பயனர்களுக்கு எந்த வகையிலான செய்திகள் தேவைப்படுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இதற்கென சிறப்பாக நியமிக்கப்பட உள்ள செய்தி ஆசிரியர்கள் தீர்மானிப்பார்கள்.   செய்தி சேனல்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் போலவே,  10 முக்கிய தலைப்புச் செய்திகளைக்  கொண்ட ஓர் பகுதி இங்கு  பிரதானமாக இருக்கும். 

இனி மக்கள், செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை.  பேஸ்புக் செய்தி சேவையின் மூலமாக பேஸ்புக்கே இனிமேல் நமக்கு செய்தி வாசிக்கப்போகிறது. இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக். செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு பேஸ்புக் ஓர் குறிப்பிட்ட கட்டணத்தையும் வழங்கும். 

செய்தி சேனல்களில் ப்ரேக்கிங்கை பார்த்து தங்களை அப்டேட் செய்துகொண்ட சமூகம் இனிமேல் பேஸ்புக்கிலேயே செய்திகளை பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளப்போகின்றனர். இனி அடுத்து வரும் சந்ததிகளும் செய்திகளுக்காகவும் பேஸ்புக்கை  உபயோகப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மார்க் ஜீகர்பெர்க்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்- பின்னணி இதுதான்

ஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன.

சிட்னி:

போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ்  கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர்.

அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம்  சாட்டின. பத்திரிக்கைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும்  ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும்  தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும்  தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பத்திரிக்கை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிக்கை, தி  ஆஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை  (போட்டோவை) ட்விட்டரில் பதிவு செய்தார்.

மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை  கேட்டுக்கொண்டார்.

ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம்  உள்ளது’ என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த  இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது என்கின்றனர்.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான்,  பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்,” என்றார்.

'இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜன்சி கால ஊடக வெளியீடுகளை நினைவுபடுத்திய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள். இதே போல் அன்றும் இந்திய பத்திரிக்கைகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டன'
In India, "the Emergency" refers to a 21-month period from 1975 to 1977 when Prime Minister Indira Gandhi had a state of emergency declared across the country.

Related Tags :
Australia | Australian newspapers | black out | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் | கருமைநிற பக்கம்

கார்ட்டூன்க்குள் நடந்த அரசியல் - 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமே‌‌ஷன் திரைப்படம்

 
தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி -  ‘அபோமினபிள்’ அனிமே‌‌ஷன் திரைப்படத்தை வெளியிட 3 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டது.

‘Abominable’ pulled from Vietnamese cinemas because of a map of China

The seemingly innocent “Abominable” has ruffled feathers internationally.
( DreamWorks Animation)

கோலாலம்பூர்:
அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்குனரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமே‌‌ஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.531 கோடியே 75 லட்சம்) செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த முழு நீள அனிமே‌‌ஷன் படத்திற்கு உலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.ஆனால் படத்தில் ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் காட்சியால் 3 நாடுகளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது, தென் சீனக்கடல் தொடர்பான சிறிய காட்சி.சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலின் பெரும்பகுதி தனக்குரியது என சொந்தம் கொண்டாடும் வகையில் சீனா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள வரைபடம் ‘அபோமினபிள்’ படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரைபடம்தான் சர்ச்சைக்கு காரணம்.ஆனால், தென் சீனக்கடல் தங்களுக்கு சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் புரூனே ஆகிய 4 தென்கிழக்கு ஆசிய நாடுகளும், இன்னொரு பக்கம் தைவானும் குரல் எழுப்பி வருகின்றன.


எனவே சர்ச்சைக்குரிய அந்த வரைபடம் இடம்பெற்றுள்ள காட்சியை மட்டும் நீக்க வேண்டும் என வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் வலியுறுத்தின.

அபோமினபிள் அனிமே‌‌ஷன் திரைப்படம்

ஆனால் ‘அபோமினபிள்’ படக்குழுவினர் இதை ஏற்கவில்லை. எனவே அந்த 2 நாடுகளிலும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது.இந்த நிலையில் மலேசிய தணிக்கை துறையும் சர்ச்சைக்குரிய அந்த காட்சியை நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் தணிக்கை துறைக்கு தெரிவித்த பதிலையே மலேசிய தரப்புக்கும் ‘அபோமினபிள்’ படக்குழு தெரிவித்தது. அதனை தொடர்ந்து மலேசியாவும் ‘அபோமினபிள்’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது.

Related Tags :
Malaysia | Ban | Abominable | Controversial Map | South China Sea | தென் சீனக்கடல் | அனிமே‌‌ஷன் திரைப்படம் தடை | அபோமினபிள்

சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி

ஜெர்மனியை சேர்ந்த என்.எச். ஓட்டல் குழுமம் நாஜி படையின் பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது.

பெர்லின்:

2-ம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் எதிரிகளிடம் தப்பிப்பதற்காக ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் பிரமாண்டமான பதுங்கு குழியை பயன்படுத்தி வந்தனர்.

 
கடந்த 1942-ம் ஆண்டில் 1,000 தொழிலாளர்களை கொண்டு 300 நாட்களில் இந்த பதுங்கு குழி கட்டி முடிக்கப்பட்டது. 3.5 மீட்டர் தடிமன் கொண்ட சுவர்களுடன் 18,000 பேர் தங்குவதற்காக இது கட்டப்பட்டது. நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த பதுங்கு குழியை இடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதை இடிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான வெடி பொருட்கள் தேவைப்பட்டதாலும், இடிக்கும்போது அதனை சுற்றியுள்ள குடியிருப்புகளும் தரைமட்டமாகக்கூடும் என்பதாலும் அந்த முடிவு கைவிடப்பட்டது. அதன் பின்னர் இந்த பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம் மற்றும் வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஜெர்மனியை சேர்ந்த என்.எச். ஓட்டல் குழுமம் இந்த பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த ஓட்டல் 5 அடுக்குமாடிகளுடன் ‘பிரமிடு’ வடிவத்தில் கண்களை கவரும் வண்ணம் பிரமாண்டமாக கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 அறைகளுடன், மதுபான விடுதி, உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகள் என சகலவசதிகளும் இந்த ஓட்டலில் இருக்கும் என என்.எச். ஓட்டல் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த ஓட்டல் 2021-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எகிப்தில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிக்கள் கண்டெடுப்பு...!

எகிப்து நாட்டில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகளுடன் கூடிய 30 சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

எகிப்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர், தெற்கு பகுதியான லக்ஸாரில் மம்மிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு பலன் கிடைக்கும் வகையில், ஒரே இடத்தில் புதைக்கப்பட்ட ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய 30 சவப்பெட்டிகளை தோண்டி எடுத்துள்ளனர்.

அழகிய பூ வேலைப்பாடுகளுடன பல வண்ணத்துடன் காணப்படும் சவப்பெட்டிக்குள் மம்மிக்கள் இருப்பதையும் தொல்லியல் துறையினர் உறுதி  செய்துள்ளனர். எகிப்தில் முற்காலத்தில் இறந்தவர்களை முற்றிலும் துணியால் சுற்றி, சவப்பெட்டிக்குள் வைத்து புதைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக பழமையான முத்து கண்டுபிடிப்பு!

8000 ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முத்துதான் உலகின் மிகவும் பழமையானது என்றும், இவை நியோலித்திக் காலத்திலேயே வணிகம் நடைபெற்றதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரவா தீவுகளில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஒரு அறையின் தளத்தில் அந்த முத்து கெண்டெடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவானது அமீரகத்தின் தலைமையகமான அபுதாபியின் மேற்குப்பகுதியில் உள்ளது. அந்த தீவில் மிகப்பழமையான கட்டுமானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் நடந்த ஆராய்ச்சியில் இந்த முத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட முத்தின் லேயர்களை ஆராய்ச்சி செய்ததில் அது  கிமு 5800-5600 நூற்றாண்டைச் சேர்ந்த நியோலித்திக் காலத்தைச்சேர்ந்ததாக இருக்கலாம் என்று அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பழமையான முத்து அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவர்களது தற்போதைய பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் மிகப்பழமையான பின்னணியைக்கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது என்று அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் சேர்மன் முகமது அல் முபாரக் தெரிவித்துள்ளார்.

மராவா பகுதியில் நடைபெறும் ஆராய்ச்சியின் மூலம் அங்கு நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த சிதைந்த நிலையில் காணப்படும் கற் சிலைகள், சங்கு மற்றும் செராமிக் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் அதிகம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது கூர்மையான பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

“10000 ஆண்டுகள் சொகுசு” என்ற பெயரில், அக்டோபர் 30ம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கும் கண்காட்சியில் இந்த முத்து உலகிற்கு முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. அமீரக வல்லுநர்கள் இந்த முத்து வணிகம் செராமிக் மற்றும் இதர பொருட்களுக்கு மாற்றாக, மெசபடோமியா நாகரிகத்துடன் வணிகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

அதோடு, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஒருகாலத்தில் முத்து வணிகத்தில் சிறந்து விளங்கியதாகவும், அந்த வணிகம் 
 ஜப்பானிய வளர்ப்பு முத்துக்களின் வருகையால் 1930 களில் சரிந்ததோடு, உலகளாவிய பொருளாதார மோதல்களை உருவாக்கியதால் அந்த வணிகம் கைவிடப்பட்டது. முத்து வணிகத்தை கைவிட்ட பிறகு தற்போது அரபுநாடுகளின் பொருளாதார சக்தியாக விளங்கும் எண்ணெய் உற்பதிக்கு திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 19 அக்டோபர், 2019

அறிவியலின்படி உலகிலேயே மிக அழகான பெண் இவர்தான்... ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள்...

அறிவியல் ரீதியாக உலகின் மிக அழகான பெண்ணுக்கான அத்தனை தகுதிகளையும் பெற்றவர் பெல்லா ஹேடிட் என்னும் மாடல்தான் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
பழங்கால கிரேக்க விதிகளின்படி உலகிலேயே அழகான பெண் யார் என்பது குறித்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன்படி நடிகை மற்றும் மாடலான பெல்லா ஹேடிட், உலகிலேயே அழகான முக அமைப்பு கொண்ட பெண் என தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரேக்க அறிவியல் விதிமுறைப்படி அழகான பெண் என்ற அம்சங்களுக்கு பெல்லா ஹேடிட் 94.35 சதவிகிதம் பொருந்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பாடகி பியோனஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அம்பர் ஹியர்ட், அரியானா கிராண்டே மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் மார்வெல் படங்களில் நடித்து புகழ் பெற்ற ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார். மேம்பட்ட முக ஒப்பனை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மைய குழு நடத்திய இந்த ஆய்வின்படி உலகிலேயே அழகான பெண்ணாக பெல்லா ஹேடிட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் தலைவரை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்த பாகிஸ்தான்!

கடந்த ஆண்டு மறைந்த பாகிஸ்தானின் பிரபல மனித உரிமை ஆர்வலர் ஆஸ்மா ஜஹாங்கிர் நினைவாக நடத்தபடவிருக்கும் மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக உலகளாவிய பத்திரிகை சுதந்திர அமைப்பின் ஆசியாவிற்காக ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் அமெரிக்காவிலிருந்து லாகூருக்கு விமானத்தில் வந்திறங்கினார்.

அப்போது விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், தாங்கள் உள்துறை அமைச்சகத்தின் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதால் உங்களை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என தடுத்ததுடன் அவரை உடனடியாக வேறு விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் தலைவர் ஜோயல் சைமன் கூறுகையில், பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் பற்றி கவலை கொள்பவர்களின் முகத்தில் விடப்பட்ட மிகப்பெரிய அறை இது. இது தொடர்பாக பாகிஸ்தான் விளக்கம் தர வேண்டும். பத்திரிகை சுதந்திரம் பற்றி அரசு கவலைப்படுவதாக இருந்தால் மிகவும் நேர்மையான முறையில் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஸ்டீவன் பட்லர் பாகிஸ்தானுக்கு வாடிக்கையாக வரக்கூடியவர் என்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து பணியாற்றுபவர் என்றும் அவரை பாகிஸ்தான் அரசு நடத்தியுள்ள விதம் மிகவும் கலவை கொள்ளச்செய்வதாக இருப்பதாகவும் சைமன் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் பல முன்னணி பத்திரிகைகள் கூட சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் சில செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டு மூடப்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில் உலக பத்திரிகை சுதந்திர அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

தடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி

துருக்கி அரசு உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள் மீது பயன்படுத்துவதாக குர்திஷ் படைகள் குற்றம் சாட்டியுள்ளன.

அலேப்போ

சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஒரு வாரமாக சண்டையிட்டு வருகிறது.

இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லையில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 

போரை நிறுத்த குர்து- சிரியா ராணுவம் இணையும்  என அண்மையில் ரஷ்யா கூறியது. இதைத்தொடர்ந்து, வடக்கு சிரியா முழுவதும் ரஷ்யா, சிரியா மற்றும் குர்து ஜனநாயகப் படையின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும் அலேப்போ மாகாணத்தின் மன்பிஜ் நகரை துருக்கி தாக்கவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதால் மன்பிஜ் நகரம், ரக்பா மாகாணத்தில் உள்ள தப்கா நகரங்களில் சிரியா தனது ராணுவத்தை குவித்து, ராணுவ தளத்தையும் அமைத்து தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், சிரியாவின் வடக்கு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 637 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து குர்திஷ்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரிய நாட்டின் அரசுப்படைகள் எல்லைப் பகுதிக்கு விரைந்துள்ளது. இதனால் சிரியா மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. 

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி அரசு உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள் மீது பயன்படுத்துவதாக குர்திஷ் படைகள் குற்றம் சாட்டியுள்ளது.

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல்: துருக்கி அதிபரை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் “முட்டாளாக இருக்காதீர்கள்” என துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வாஷிங்டன், 

சிரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, சண்டையை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தியது.

ஆனால் அதனை நிராகரித்த துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் சண்டையை நிறுத்தப்போவதில்லை என சூளுரைத்துள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் சிரியா மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கிய முதல் நாளே (அதாவது கடந்த 9-ந்தேதியே) பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி தாயீப் எர்டோகனுக்கு ஜனாதிபதி டிரம்ப் கடிதம் அனுப்பியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் அந்த கடிதத்தின் நகலையும் வெள்ளை மாளிகை தனது அலுவலக இணைய பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. அந்த கடிதத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது:-

ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்! ஆயிரக் கணக்கான மக்களை கொல்வதற்கு நீங்களும் பொறுப்பேற்க தேவையில்லை. துருக்கியின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு நானும் பொறுப்பேற்க தேவையில்லை.

நீங்கள் சரியான வழியில் செயல்பட்டாலும், மனிதாபிமான வழியில் நடந்தால் மட்டுமே உலகம் உங்களை சாதகமாக பார்க்கும். முட்டாளாக இருக்காதீர்கள். பேச்சுவார்த்தை மூலம் குர்து படையினருடனான பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் டிரம்பின் கோரிக்கையை தாயீப் எர்டோகன் முற்றிலுமாக நிராகரித்ததாகவும், அவர் எழுதிய கடிதத்தை குப்பை தொட்டியில் வீசியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே வெள்ளைமாளிகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப், “சண்டை நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஒத்துழைக்கவில்லையென்றால் அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையில் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என கடுமையாக எச்சரித்தார்.

குர்துக்கள் மற்றும் துருக்கி ராணுவம் இடையிலான சண்டையை நிறுத்த டிரம்ப் தீவிர முனைப்பு காட்டி வந்தாலும், அவர் சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற்றதே துருக்கியின் தாக்குதலுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு தொடருகிறது.

இது தொடர்பாக டிரம்ப் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரின் சொந்த கட்சியான குடியரசு கட்சியில் இருந்தே பெரும்பாலான விமர்சனங்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த கண்டன தீர்மானத்துக்கு ஆதரவாக குடியரசு கட்சியை சேர்ந்த 129 உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டனர். இது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆனாலும் டிரம்ப், சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற்றதை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில் “சிரியாவில் துருக்கியின் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக்கூடாது, ஏனெனில் அது நமது எல்லை அல்ல. அத்துடன் குர்துக்கள் தேவதூதர்கள் இல்லை” என கூறினார். 


தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு: கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை

பார்சிலோனா,

கேட்டலோனியாவின் வரலாற்றையும், தனித்தன்மையையும் போற்றும் வகையில் அதை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

இதையடுத்து விடுதலை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இதை வலியுறுத்தி பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது.

அதில் கேட்டலோனியா மந்திரிகள் உள்ளிட்ட 9 பேருக்கு, 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து ஸ்பெயின் சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் தீர்ப்பளித்தது. இதனை கண்டித்து கேட்டலோனியா மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், சாலையில் நின்றுகொண்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

மேலும் போராட்டத்தை ஒடுக்கிய, போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு உருவானது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் பார்சிலோனா நகர் முழுவதுமே போர்க்களமாக காட்சியளித்தது.

வியாழன், 17 அக்டோபர், 2019

ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்

ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் உறவினர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
டப்லின்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தின் லீனெஸ்டர் மாகாணத்தில் உள்ள கில்கென்னி நகரை சேர்ந்தவர் ஷே பிராட்லி. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர் கடந்த 12-ந் தேதி உடல்நல குறைவால் இறந்தார்.

இவர் இறப்பதற்கு முன்பாக தன் கடைசி ஆசையை தனது உறவினர்களிடம் கூறியிருந்தார். அது என்னவென்றால், தனது உடலை அடக்கம் செய்யும்போது, உறவினர்கள் யாரும் அழக்கூடாது என்றும், மாறாக வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதை சொன்னதோடு மட்டும் இல்லாமல் தனது இறுதிச்சடங்கில் உறவினர்களை சிரிக்கவைப்பதற்கான ஏற்பாட்டையும் அவர் செய்திருந்தார். அதன்படி ஷே பிராட்லி இறப்பதற்கு முன்பு தனது குரலில் ஆடியோ ஒன்றை பதிவு செய்து, தனது மகள் ஆன்டிரியாவிடம் கொடுத்திருந்தார்.

ஷே பிராட்லியின் இறுதிச்சடங்கின் போது, அவரது சவக்குழிக்கு அருகில் ஒலிப்பெருக்கி மூலம் அந்த ஆடியோவை ஆன்டிரியா ஒலி பரப்பினார். அதில், “நான் எங்கே இருக்கிறேன்? இது மிகவும் இருட்டாக இருக்கிறது. என்னை வெளியே விடுங்கள்” என ஷே பிராட்லி பேசியிருந்தார்.

இதை கேட்டு அங்கு கூடியிருந்த ஷே பிராட்லியின் உறவினர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - நோ பிரா’ (உள்ளாடை இல்லை) புரட்சி சுல்லி!

மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
சியோல்:

தென்கொரியாவை சேர்ந்த பிரபல ‘பாப்’ பாடகி சுல்லி (வயது 25). இவர் “வெப்சீரிஸ்” எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராக திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக ‘நோ பிரா’ (உள்ளாடை இல்லை) புரட்சியின் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக சுல்லி, மேலாடையின்றி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதன் மூலம் அவர் சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்துக்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத அவர், பலமுறை இன்ஸ்டாகிராம் நேரலையில் மேலாடையின்றி தோன்றி அதிரவைத்து வந்தார். இதனால் அவர் பழமைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தார்.

இந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் சுல்லி பிணமாக கிடந்தார். அவரது மேலாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம சாவு குறித்து விசாரித்து வரும் போலீசார், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுல்லியின் நெருங்கிய தோழியும், சக ‘பாப்’ பாடகியுமான ஜாங்கியூன் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது நினைவுகூரத்தக்கது.  


ஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு

சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் பிடியில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அவர்களே விடுதலை செய்வதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அங்காரா:

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. 


அந்நாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த போராளிகள் குழு குர்திஷ்தான் என்ற தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது. 


இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் படையினருக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதையடுத்து, துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டம் தீட்டினார். 


ஆகையால், 'அமைதி வசந்தம்’ என்ற பெயரில் கடந்த 9-ம் தேதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்திஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகிறது. 


இந்த தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான குர்திஷ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும், இந்த  தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குர்திஷ் போராளிகள் என இதுவரை 500-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 


துருக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குர்திஷ் போராளிகள் சிரிய அரசுப்படைகளின் உதவியை நாடியுள்ளனர். ரஷியா ஆதரவு பெற்ற சிரிய அரசுப்படைகள் துருக்கி தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் விதமாக எல்லையில் குவிக்கப்பட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. 

இதற்கிடையில், துருக்கியின் ஆக்ரோஷ தாக்குதல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்போது போதிய கண்காணிப்பு இல்லாததால் அங்கிருந்து தப்பிச்சென்று வருகிறனர். 


தற்போதைய கணக்கீட்டின்படி, துருக்கி நடத்திவரும் தாக்குதல் காரணமாக இதுவரை 800-க்கும் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறையை விட்டு தப்பிச்சென்று விட்டதாக குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் இன்று ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் பாராளுமன்ற பிரிவினரை சந்தித்தார்.


இந்த சந்திப்பின் போது, சிரியாவில் கைது செய்யப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் சிறையில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை வைத்து பேரம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைக்க உதவும் கருவியாக குர்திஷ் போராளிகள் பயன்படுத்துகின்றனர். 


மேலும், அவர்கள் தங்கள் பிடியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்து வருகின்றனர். ஆனாலும், வடக்கு சிரியாவில் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றியும் எவ்வித கவலையும் இல்லை என அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.


சிரியாவில் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் துருக்கியின் தாக்குதல் காரணமாக தப்பிச்செல்வது மிகுந்த கவலையை தருவதாக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தக்கன பிழைக்கும் 'குர்தீஸ்'

வல்லரசு நாடுகளின் அரசியலுக்குள் சிறப்பான இராஜதந்திரத்தினூடு தன் இனத்தையும், இயக்கத்தையும் காப்பாற்றும் செயற்பாட்டில் குர்தீஸ் அமைப்பு சிறப்பாக செயற்பட்டிருக்கின்றது. வெறுமனே களத்தில் போராளிகளை மாத்திரம் நம்பியிராமல் அரசியல் உறவுகளில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தி இதுவரை காலமும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த நாடுகளின் உதவியை உடனடியாக பெற்றுக்கொண்டது களத்தில் நிலைமைகளை முற்றாக மாற்றியது.
துருக்கி எல்லையில் இப்போது சிரிய ராணுவம். அவர்களுக்கு எந்த நேரத்திலும் உதவும் நிலையில் ரஷ்யா ராணுவம்.

ஆயிரக்கணக்கான மக்களை கொன்று எல்லை கடந்து வந்த துருக்கி இராணுவம் இனி செய்யப்போவது என்ன?
மத்திய கிழக்கில் முடிசூடா மன்னனாய் தன்னை உருவகப்படுத்துவதற்கு ரஷ்யாவின் காய்நகர்த்தல்கள் மிகச்சிறப்பு.

வியாழன், 10 அக்டோபர், 2019

குர்துக்கள் யார்? அவர்கள் மீது தாக்குதல் ஏன்? உலக நாடுகள் என்ன சொல்கின்றன?

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது.


துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஸ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர். இவர்கள் ஒரு இன சிறுபான்மை குழு, சுமார் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை  இருப்பார்கள்  பெரும்பாலானவர்கள் சன்னி முஸ்லிம்கள். அவர்கள் ஒரு தனித்துவமான இனம், கலாச்சாரம் மற்றும் மொழியால் ஒன்றுபட்டுள்ளனர்.

குர்துகள் எங்கு வாழ்கிறார்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் தாயகத்தை உருவாக்குவதற்கு குர்துகள் பாடுபட்டு வருகிறார்கள். இப்போது உலகின் மிகப்பெரிய நாடற்ற நாடுகளில் குர்திஸ்தான் ஒன்றாகும், 

அரசு சாரா பிராந்தியமான மக்களுக்கு உத்தியோகபூர்வ தாயகமோ நாடோ இல்லை. இன்று, குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஆர்மீனியா ஆகிய ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

ஒய்.பி.ஜி என் அழைக்கப்படும் குர்தீஷ் மக்கள் பாதுகாப்புப் படை  தான்  குர்து மக்களை பாதுகாக்கிறது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்த அமைப்பு பெரும் பங்கு வகித்தது.'

அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டியது ஒய்.பி.ஜி., அமைப்பு. சிரியாவில் நிலைமை இப்படி இருக்க, துருக்கியில், குர்துக்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. மேலும் தனி தேசம் கேட்கும் குர்துக்கள் தங்கள் நாட்டிலும், தங்கள் நாட்டின் எல்லை அருகேயும் இருப்பதை துருக்கி விரும்பவில்லை.

துருக்கியில்  குர்துகள் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர், பெரும்பாலும் துருக்கியில் இவர்கள் "மவுண்டன் டர்க்ஸ்" என்று அழைக்கப்படுகிறார்கள், அங்கு அவர்கள் பாரம்பரிய குர்திஷ் ஆடைகளை அணியவோ அல்லது அவர்களின் மொழியைப் பேசவோ தடை செய்யப்பட்டு உள்ளனர். 

துருக்கியில் குர்துகள் மிகப்பெரிய இன சிறுபான்மையினராக இருந்தாலும், சுமார் 20 சதவீத மக்கள் உள்ளனர், அவர்கள் துருக்கியில் ஒரு சிறுபான்மைக் குழுவாக அங்கீகரிக்கப்படவில்லை.

குர்துக்களின் தனி தேசத்தை விரும்பாத துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குர்துக்கள் போராளிகள் குழுவின் ஆதரவுடன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஸ்தான் வொர்க்கர்ஸ் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.

எல்லையோரம் உள்ள குர்து இனப் போராளிகளை தீர்த்துக்கட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

தங்கள் நாட்டு படைகளை  சிரியாவில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்த டிரம்ப், அதே வேளையில், குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத துருக்கி அரசு, குர்து இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது.

புதன்கிழமை இரவில் சிரியாவின் ரஸ் அல் அயின் நகரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. டல் அப்யத் உள்பட 2  நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த நகரங்கள் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.

உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை ஒய்.பி.ஜி. போராளிகள் குழுக்களின் 181 முகாம்கள்  மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.

குர்திஷ் சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எஃப்) வியாழக்கிழமை, தல் ஹலாஃப் மையத்திலும், வடகிழக்கு சிரியாவின் ஸ்லுக் நகரத்திலும் "துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம்" மேற்கொண்ட தரை ஊடுருவல் முயற்சியைத் தடுத்து விட்டதாக கூறி உள்ளது. 

ஆபரேஷன் ' அமைதி வசந்தம் '   இரவில் விமானம் மற்றும் நிலம் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அடையப்பட்டன. திட்டமிட்டபடி செயல்பாடு வெற்றிகரமாக அமைந்தது என கூறியது.

துருக்கியின் இராணுவ நடவடிக்கையின் முதல் நாளில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது

சிரியாவின் எல்லையை ஒட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. குர்து போராளிகள் குழுக்களுக்கு எதிராக துருக்கி தொடங்கியுள்ள இந்தப் போரால், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

துருக்கி நடவடிக்கையை பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் கண்டித்துள்ளன. இங்கிலாந்து, ஈராக் போன்ற பல நாடுகள் "கடுமையான கவலையை" வெளிப்படுத்தியுள்ளன. 

நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை தனிப்பட்ட முறையில் கூடியது. ஆபரேஷன் ' அமைதி வசந்தம் '  என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  கவலை தெரிவித்து உள்ளது.

சைரா நரசிம்ம ரெட்டி - அதிர வைக்கிறது

"துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கதையினை இன்று திரையில் பார்த்தேன். உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையைச் சொல்கிறது, சிரஞ்சீவி நடித்திருக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி'.

ஒரு வீரரின் கதை அருமையான உணர்வுடன் படைத்திருக்கிறது இத்திரைப்படம். பல காட்சிகளும், வசனங்களும் எங்கோ வாழ்ந்த வாழ்க்கையை ஈழத்தமிழர்களுக்கு நினைவூட்டக்கூடியது.

நாட்டிய தாரகை தமன்னாவின் தற்கொடை!
அங்கயற்கண்ணி, யாழினி போன்ற சகோதரிகளின் நினைவுகளுள் ஈகைகளும் கண் முன்னே நிழலாடியது. அதுவும் பாளையக்காரர்கள் பலர் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் எதனால் வீழ்த்தப்பட்டது என்பதும் ஆரம்பகால இயக்கங்களின் செயற்பாடுகளையும் முரண்பாடுகளையுமே திரையிட்டு காட்டியது. 
Sye_Raa_Narasimha_Reddy

வேலுநாச்சியாரின் படையிலிருந்து இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டாகி, பிரிட்டிஷாரைக் கொன்று குவித்த குயிலியின் வரலாற்றை இந்தப் படத்திலும் வேறு ஒரு நபருக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பாரத நாடு, தமிழ்நாடு என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெறுகின்றன. 1840'களில் அப்படியெல்லாம் இல்லை என்பது ஒரு வரலாற்றுப் பிழையாகவே படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்கு கட்டபொம்மனும், மாவீரன் பூலித்தேவனும், மருது சகோதரர்களும் எப்படியோ அப்படியே தான் ஆந்திர மக்களுக்கு ரேநாட்டுச் சூரியனான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. 

ஆனால்...

நரசிம்ம ரெட்டிக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பாகவே வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அப்படியிருக்கையில் நரசிம்ம ரெட்டிதான் முதலில் போரிட்டவர் என்பது போன்ற வசனங்கள் படத்தில் வருகின்றன.. 

தொய்வில்லாமல் உண்மை நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட படம். காட்சிகள் காலங்களால் மாத்திரமே வேறுபட்டது. பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. சிரஞ்சீவி உடன் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, கன்னட திரையுலகின் கிச்சா சுதீப் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதிர வைக்கிறது.

வரலாற்று கதையை படமாக மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற தயாரிப்பாளரின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். இதை நடிகரும் சிரஞ்சீவியின் மகனுமான, ராம் சரண் தயாரித்துள்ளார். 

தந்தைக்கு மகன் செய்த பாக்கியம். சிறப்பு❣

வீராதி வீரர்கள் தம் இன்னுயிரை ஈந்து அந்த வெறியாட்டம் ஆடிச் சென்ற british வந்தேறிகளுக்கு உரக்கச் சொல்லிச் சென்றது ஒன்றே ஒன்று தான்.

'Get out from my Motherland'

மொத்தத்தில்

●சைரா...! - வீரவணக்கம்

☆ 'அதிகமாக பணங்களை அநாவசியமான தயாரிப்புக்களுக்கும், ஆடம்பரங்களுக்கும் அள்ளியிறைக்கும் தமிழ் தயாரிப்பாளர்களே..! 
இது போன்ற தமிழர் நாகரீக வரலாறுகளையும், வீரர்களுடைய கதைகளையும் தயாரிப்பதற்கு முன் வர வேண்டும். தெலுங்கு சினிமா உலகம் அதை பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். இவ்வாறான படைப்புக்கள் தலைமுறை கடந்தும் வாழ வைக்கும்.'"

#Sye_Raa_Narasimha_Reddy
#HistoricalBlockbuster

புதன், 9 அக்டோபர், 2019

அணைக்கட்டு திட்டத்தால் நீரில் மூழ்கும் வரலாற்று சின்னங்கள்..!

துருக்கியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹசன்கீஃப் பகுதி புதிதாக கட்டப்பட்டுள்ள அணைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

துருக்கியில் டைக்ரிஸ் ஆற்றங்கரையுல் அமைந்துள்ள மிகவும் பழமையான பகுதிகளில் ஹசன்கீஃப் பகுதியும் ஒன்று. இயற்கையை தன்னுள் புதைத்துள்ள பாலைவனச் சோலை மற்றும் மனித நாகரிகத்தின் பழமையான குடியிருப்புகளை கொண்ட அப்பகுதியில் 12 ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

பிரமிப்பை ஏற்படுத்தும் ஆயிரக்கணக்கான குகைகள், நினைவு கல்லறைகள், தேவாலயங்கள் என உலகின் நினைவுச் சின்னமாகமே அறியப்படும் ஹசன்கீஃப் பகுதியில் துருக்கி அரசானது இலிசு என்ற அணையை கட்டியுள்ளது. இதனால் அங்கு பழங்காலம் தொட்டு வாழ்ந்து வந்த 80 ஆயிரம் மக்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மொசபடோமியா, பைசான்டியம், ஓட்டோமன் மற்றும் அரேபிய பேரரசுகளின் வரலாற்று எச்சங்களை தன்னுள் கொண்டுள்ள ஹசன்கீஃப் பகுதியை அணைத்திட்டத்திற்கு துருக்கி அரசு பலி கொடுத்துவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மக்களின் பல ஆண்டுகால போராட்டம் வேருடன் பிடுங்கியெறியப்பட்ட நிலையில், ஹசன்கீஃப் பகுதியை இன்னும் சில நாட்களில் மறையும் என்றும் அவர்கள் கவலையுடன் கூறினர். 
 

புதிய உலகின் அரசியலைப் புரிந்து கொள்ள ...


21ம் நூற்றாண்டில் உலக அரசியல் பற்றிப் பேச முனையும்போது நாம் 20ம் நூற்றாண்டை ஒரு கணம் சிந்திக்காமல் இருக்க இயலாது. இரண்டு உலகப் போர்கள், இந்தியா உட்படக் காலனி நாடுகள் சுதந்திரம் அடைதல், ஐ.நா அவையின் தோற்றம், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம், உலக வங்கி, ஐ.எம்.எஃப், ருஷ்யப் புரட்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் வளையத்திற்குள் வருதல், “நேடோ’ (NATO) மற்றும் வார்சா ஒப்பந்தம் ஆகியவற்றின் ஊடாக உலகம் இரு கூறுகளாக்த் தொகுக்கப் படுதல், ‘அணிசேரா நாடுகள்’ (NAM) எனும் கோட்பட்டை நேரு, நாசர், டிட்டோ முதலானோர் உருவாக்குதல், வியட்நாம் யுத்தம், பனிப்போர், லத்தின் அமெரிக்க நாடுகளில் புரட்சிகர இயக்கங்களின் உருவாக்கம், சோவியத்தின் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் பிடியிலிருந்து விலகுதல், சோஷலிசம் மற்றும் கம்யூனிசச் சித்தாந்தங்களுக்கு உலக அளவில் ஏற்பட்ட பின்னடைவு, ருஷ்யா வெகு வேகமாக முதலாளிய முறைக்குத் திரும்பியதோடு ‘மாஃபியா’ பொருளாதாரம் ஒன்றும் அங்கு தலைகாட்டல், வார்சா ஒப்பந்தக் கூட்டணி இல்லாமற் போதல், வார்சா ஒப்பந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்த முன்னாள் சிவப்பு நாடுகள் ஒவ்வொன்றாக ‘நேடோ’ வில் அடைக்கலமாதல், கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளைப் பிரித்திருந்த சுவர் தகர்ந்து நொறுங்குதல், பனிப்போர்க் காலம் முடிந்துவிட்டது எனவும் இனி ஒரு துருவ
உலகம்தான் எனவும், இனி கலாச்சாரங்களுக்கிடையே நடக்கும் மோதல்கள்தான் சாத்தியம் எனவும் அமெரிக்காவும் உலக முதலாளியமும் தன்னை உலகின் முன் நிறுத்திக் கொள்ளல் – என்பதாக நாம் ஒரு பருந்துப் பார்வையில் சென்ற நூற்றாண்டு உலக அரசியலின் முக்கிய கணங்களைப் பட்டியலிடலாம்.

இந்தப் பின்னணியிலிருந்து நோக்கும்போது 21ம் நூற்றாண்டின் உலக அரசியல் 1990 களிலிருந்தே தொடங்கிவிட்டது எனலாம்.

இனி “ஒரு துருவ உலகம்” என்கிற முன்வைப்பின் அடிப்படையில் நம் கண்முன் அரங்கேறிய, அர்ங்கேறிக் கொண்டுள்ள சில நிகழ்வுகளையும், காட்சிகளையும் ஒரு கணம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்க்கலாம்.
முதலில் நம் நினைவில் நிழலாடுவது WTO, GATT, GATS முதலான உலக வர்த்தக ஒப்பந்தங்களுக்குள் உலக நாடுகள் ஒருங்கிணைக்கப்படுதல், உலகமயம் என்கிற கருத்தாக்கத்தின் ஊடாக சந்தையின் ஆட்சிக்கு உலகப் பொருளாதாரம் எந்தத் தடைகளும் இன்றி திறந்துவிடப் படுதல், ஐரோப்பிய ஒன்றியம் உருவாதல், சீனா ஒரு முக்கிய பொருளாதார சக்தியாக மேலெழுதல், சோவியத் யூனியன் சிதைந்து ருஷ்யா முற்றிலுமாக முதலாளியத்திற்குத் திரும்பிய பின்னும் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ நாடுகளால் அது குறி வைத்துத் தாக்கப்படுதல். போஸ்னியா இன அழிப்பு, யுகோஸ்லாவியா முதலான நாடுகளின் சிதறல், ஸ்காட்லந்த், கேடலான் முதலான புவிப் பகுதிகள் தனியாகப் பிரிந்து சுயாட்சி கோரும் நிலை, ஒரு மிக முக்கியமான மாற்று உலக அரசியல் கோட்பாடாக உருப்பெற்றிருந்த அணிசேரா நாடுகளின் அமைப்பு (NAM), ஷங்காய் கார்பொரேஷன் எல்லாம் பெரிய அளவில் பலவீனப்பட்டு கிட்டதட்ட ஒன்றும் இல்லாமல் போன நிலை, World Economic Forum முதலான முதலாளிய உலக அமைப்புகளில் இந்தியா போன்ற நாடுகள் அதி உற்சாகத்துடன் பங்கு பெறுதல், சூடான், ஏமன் முதலான நாடுகளில் பட்டினிச் சாவுகள், சந்தை எனும் அடிப்படையில் நாட்டு எல்லைகள் அர்த்தமற்றுப் போனாலும் மக்களின் இயக்கம், குடிப்பெயர்வு முதலானவை கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுதல், குடிமக்களின் ஒவ்வொரு அசைவும் இயக்கமும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு கண்காணிப்பிற்கு உள்ளாதால், இதனூடாகச் சேகரிக்கப்படும் தரவுகளின் ஊடாக குடிமக்களின் ஒவ்வொரு அசைவும் கட்டுப்படுத்தப்படுதல் (data control) என்பன ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் படைஎடுப்பு, ஈராக் மீது விதிக்கப்பட்ட கொடும் பொருளாதாரத் தடை, 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல், இரண்டாம் ஈராக் போர், சதாம் உசேன் தூக்கிலிடப்படுதல், லிபியா முதலான நாடுகளில் வெளியிலிருந்து திணிக்கப்பட்ட இரத்தக் களறிகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், உலகளவில் உருவாக்கப்படும் “இஸ்லாமிய வெறுப்பு” (Islamophobia), ஐ.எஸ் பயங்கரவாதம் உருப்பெறல், பலஸ்தீன மக்களின் மிக அடிப்படையான உரிமைகள், உயிர், உடைமைகள் எல்லாம் உலக அளவில் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாமல் பறி போதல், அரபு வசந்தம், நீண்ட கால மத்திய கிழக்குச் சர்வாதிகாரிகள் தூக்கிஎறியப்படுதல், வால்ஸ்ட்ரீட் முதலாக உலகெங்கிலும் நடைபெற்ற அமர்வுப் போராட்டங்கள், அமெரிக்கா, ஐ.எஸ், சவூதி ஆகியவற்றின் கூட்டுத் தாக்குதலின் விளைவாக வரலாறு காணாத அளவில் சிரியா நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்படுதல், ஈரான், ருஷ்யா முதலான நாடுகளைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள்….

இன்று உருவாகியுள்ள உலக அளவிலான அரசியலின் பொதுப்போக்கை மிகச் சுருக்கமாகத் தொகுத்துக் கொள்ள நம் கண்முன் நடந்து கொண்டுள்ள இம்மாற்றங்கள் குறித்த இந்தக் கணக்கெடுப்பு (survey) உதவும் என நம்புகிறேன். இவற்றில் ஓரிரண்டு பிரச்சினைகளை மட்டும் சிறிது விளக்கமாகக் காணலாம்.

ஐ.எஸ் பயங்கரவாதம்

முதலில் இன்று உலகைப் பெரிய அளவில் அச்சுற்றுத்திக் கொண்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாதத்தை எடுத்துக் கொள்வோம். 21ம் நூற்றாண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு விடிந்ததை மறக்க இயலாது. ‘அல்குவேதா’ எனும் பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட அந்தத் தாக்குதலில் 2996 பேர் கொல்லப்பட்டனர். 6000 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவிற்கு 10 பில்லியன் டாலர் சொத்திழப்பு ஏற்பட்டது. இந்த இழப்புக்ளைக் காட்டிலும் இதைத் தன் உலக மேலாண்மை முயற்சிகளுக்கு ஏற்பட்ட ஒரு தாக்குதல் 21ம் நூற்றாண்டை ‘அமெரிக்க நூற்றாண்டாக’ அறிவித்த தம் முயற்சிக்கு ஏற்பட்ட ஒரு அவமானம் என்றே அமெரிக்கா எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கியது. அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன் 1990 ல் சதாம் உசேனின் படைகள் குவைத்தை ஆக்ரமித்ததை ஒட்டி, தனது கூட்டாளிகளான குவைத் மற்றும் சவூதியைக் காப்பாற்றுவது எனும் பெயரில் அமெரிக்கா 35 நாடுகள் கூட்டணி ஒன்றை உருவாக்கி Operation Desert Storm (17 ஜன1991 – 28 பிப்1991) எனும் படைஎடுப்பை நடத்தி ஈராக் மீது மிகக் கடுமையான தடைகளை (sanctions) அமுல் செய்திருந்தது. ஈராக் தனிமைப் படுத்தப்பட்டது மட்டுமல்ல அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவு உட்பட தடை செய்யப்பட்டதால் ஈராக் மக்கள் அடைந்த துன்பங்கள் அந்தப் பத்தாண்டுகளில் ஏராளம். அதற்கும் முன் ஆப்கானிஸ்தான் மீது மேற்கொண்ட அமெரிக்கப் போர், இப்போதைய ஈராக் மீதான தடைகள் ஆகியவற்றின் பின்னணியில் உருவானதுதான் அல்குவேதா அமைப்பு. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்காக உடனடியாக அல்குவேதாவையும், ஒசாமா பின் லேடனையும் ஒழித்துக் கட்ட இயலாத புஷ் நிர்வாகம் 2003ல் ஈராக் மீது இரண்டாம் முறையாகப் படை எடுத்தது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு சதாமும் உடந்தை என்பதாகவும் சதாமிடம் “பேரழிவு ஆயுதங்கள்” (WMD) உள்ளதெனவும் கூறிப் போரில் இறங்கியபோது டோனி ப்ளேயரின் பிரிட்டன் அந்த நடவடிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு துணைநின்றது. மிக எளிதாக ஈராக்கை வென்றதோடு சதாமையும் தூக்கிலிட்டு (2006), 2011 வரை அங்கு படைகளை நிறுத்தி முழுக்க முழுக்க அமெரிக்க இராணுவம் மற்றும் கூலிப் படைகளின் கட்டுப்பாட்டில் அம்மக்கள், குறிப்பாக சன்னி முஸ்லிம்கள் பெரிய அளவில் கொல்லப்பட்டனர், துன்புறுத்தலுக்கும் ஆளாயினர். படைஎடுப்பிற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் எதுவும் சதாமிடம் இல்லை என்பது நிரூபணமாகியது. இந்த ஆக்ரமிப்புப் போர் குறித்த சர் ஜான் சில்காட்டின் அறிக்கை வெளியிடப்பட்டபோது (ஜூலை, 2016) அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் தலைகுனிய நேரிட்டது. தேவையற்ற ஆக்ரமிப்புப் போர் அது என்பதை அது வெளிப்படுத்தியபோது, “வருந்துகிறேன், வேதனைப்படுகிறேன், மன்னிப்புக் கோருகிறேன்” என பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் டோனி ப்ளேயர். அவரது ‘லேபர்’ கட்சி சார்பாக அதன் தலைவர் ஜெரமி கோர்பின் மன்னிப்புக் கோரினார். நான் அப்போதே இந்தப் படைஎடுப்பு தவறு எனச் சொன்னேனே என்றார் பாரக் ஒபாமா. புஷ் மட்டும், “சாதாமுக்குப் பின் உலகம் நன்றாகத்தான் உள்ளது” என்றார்.

சதாம் கொல்லப்பட்டபின் எடுபிடி நூருல் மாலிகி அரசின் கீழ் ஆக்ரமிப்புப் படைகளின் அத்துமீறல்களைத் தாங்க இயலாத மக்கள், குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்ட சன்னி முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடங்கினர். முதலில் அமைதி வழியில்தான் எதிர்ப்புகள் இருந்தன. இராணுவ அடக்குமுறையைக் கைவிடல், அடக்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், யாரையும் கொல்லும் அதிகாரத்தை நீக்குதல் முதலியன மட்டுமே அவர்களின் கோரிக்கைகள். பலூஜா மற்றும் ரமாடியை மையமாகக் கொண்டு இனக்குழு மக்கள் தம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கியபோது கூட அது பயங்கரவாதத் தாக்குதலாக வெளிப்படவில்லை. ஆனால் எல்லாம் பயங்கரவாதத் தாக்குதலாகவே அறிவிக்கப்பட்டு அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் ஐ.எஸ் பயங்கரவாதம் உருக் கொண்டது. முன்னாள் ஈராக் இராணுவத்தினர், அதிகாரம் இழந்து ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம்கள், சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைகளுக்கு ஆளானோர் இவர்கள் எல்லோரும் திரள் திரளாக ISIS பக்கம் சென்றனர். தற்போதைய ISIS தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி அப்படி ஈராக் சிறையில் அடைப்பட்டுக் கிடந்தவர்தான்
ISIS அல்லது ISIL அல்லது IS என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் சந்தேகமில்லை. தேசங்களைக் கடந்த ஒரு இஸ்லாமிய ஆட்சி என்கிற பெயரில் ஒரு புதிய கலீபா ஆட்சியை (caliphate) உருவாக்குவதாகப் பீற்றிக் கொண்டு அது மேற்கொள்ளும் வன்முறைகளை யாரும் ஏற்க இயலாது. எனினும் இப்படியான பயங்கரவாத அமைப்பு தானாகவே அங்கு உருவாகிவிடவில்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.. வெறும் சன்னி முஸ்லிம்களின் பயங்கரவாதமாகவும் இதைச் சுருக்கிப் பார்க்க இயலாது. அது முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல. அது ஒரு இனக்குழுச் சமூகமும் கூட. அவற்றின் பண்புகளோடும் அவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகளவில் உருவாக்கப்படும் இஸ்லாமிய வெறுப்பு

கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் தன் ஆசையை வெளிப்படையாக அறிவித்துச் செயல்படுத்தும் அமெரிக்கா பதிலாக வேறொரு எதிரியைத் தேடியபோது அது கண்டுபிடித்ததுதான் ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’. இப்போது இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதையும் தாண்டி, ‘இஸ்லாம்’, “முஸ்லிம்கள்” என்ற இரண்டு சொற்களுமே பயங்கரவாதத்தின் குறியீடுகளாக நிறுத்தப்படுகின்றன.
இந்தத் தாக்குதல்களில் ஈராக்கில் மட்டும் மொத்தத்தில் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சிரியாவில் ஏப்ரல் 30, 2016 வரை கொல்லப்பட்டோர் 151,888. செரெபெர்னிகாவில் 1995 ல் கொல்லப்பட்ட போஸ்னிய முஸ்லிம்களிகளின் எண்ணிக்கை 8332. அப்போது அகதிகளானோர் 30,000 பேர்.
உலகெங்கிலும் இவ்வாறான இஸ்லாமிய வெறுப்புக்கு ஆளாகும் முஸ்லிம்கள் ஆங்காங்கு ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவு அளிக்கும் நிலையும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஐ.எஸ் பிரிட்டிஷ் அரசளவு பரப்புள்ள புவிப்பரப்பின் மீது அதிகாரம் செலுத்தக் கூடியதாகவும், நாளொன்றுக்கு சுமார் 9,000 பீப்பாய் எண்ணை ஏற்றுமதி செய்யும் அளவிற்குப் பொருளாதாரப் பலம் உள்ளதாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
அது மட்டுமல்ல, எந்த அமெரிக்க ஆக்ரமிப்புக்கு எதிராக ஐ.எஸ் உருவானதோ அதே அமெரிக்காவிற்கே அது கையாளாகச் செயல்படும் நிலையும் இன்று சிரியாவில் ஏற்பட்டுள்ளது.

சிரியா

சிரியாவில் தற்போதைய குடியரசுத் தலைவராக உள்ள பஷார் அல் அசாத்தின் ஊழல், அடக்குமுறை ஆட்சிக்கெதிரான உளாட்டுப்போர் அரபு வசந்தத்தின் தொடர்ச்சியாக 2011ல் தொடங்கியதுதான் எனினும் துனிசியா, எகிப்து முதலான நாடுகளில் முளைத்த அரபு வசந்த எழுச்சிகளைப்போல அமைதி வழியில் மக்கள் ஆதரவுடன் நடக்கும் போராட்டமாக அது அமையவில்லை. இங்கு அப்படியான பெரிய மக்கள் ஆதரவு இல்லாத அந்த எதிர்ப்பு ஒரு உள்நாட்டுப் போராக வடிவெடுத்தது. அசாத் ஆட்சி அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியதன் விளைவுதான் இன்றைய சிரிய அகதிகள் பிரச்சினை. அசாத் ஆட்சிக்கு எதிரான இன்றைய இந்த உள்நாட்டுப் போருக்கு சவூதி, கடார், துருக்கி முதலான நாடுகள் வெளிப்படையாக ஆதரவாக உள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய முடியரசுகள் அசாத்துக்கு எதிரான இந்த அமைப்புகளுக்கு பெரிய அளவில் நிதி உதவி அளிக்கின்றன. இவை தவிர அமெரிக்காவும் அசாத்துக்கு எதிரான இந்தப் போருக்கு ஆதரவளிக்கின்றது. “ஒரளவு மென்மையான” (moderate) இந்த அமைப்புகளுக்குத் தாங்கள் உதவுவதாக அமெரிக்கா வெளிப்படையாகவே கூறுகிறது.
யார் அந்த மென்மையான அமைப்புகள்?
ஒருபக்கம் தலைகளை வெட்டி வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் ஐ.எஸ் அமைப்பு, இன்னொரு பக்கம் சிரியாவின் அல் கொய்தாவான அல் நுஸ்ரா முன்னணி, அப்புறம் சலாஃபிஸ்டுகளான சில அல்ஷாம்ஸ் இயக்கங்கள் ஆகியவைதான் அமெரிக்கா உதவி செய்கிற இந்த “மென்மையான பயங்கரவாத” அமைப்புகள். இவை கைப்பற்றும் பகுதிகளில் உடனடியாக ஷரியா சட்டத்திண் ஆட்சி என்கிற பெயரில் கடும் அடக்குமுறைகள், சிறுபான்மையினர் மற்றும் அல்லாவைட் முஸ்லிம்கள் கொல்லப்படுதல், அகதிகளாக்கப்படுதல் நிகழ்கின்றன.

அமெரிக்கா சவூதி முதலியன இப்படி ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுவதன் பின்னணி என்ன?
உண்மையில் இன்று சிரியாவுக்குள் மூன்று போர்கள் நடந்து கொண்டுள்ளன. 1. அசாத் அரசிற்கும் உள் நாட்டு ஆயுதக் குழுக்களுக்குமான போர். 2. ஈரான் மீது சவூதி நடத்தும் மறைமுக யுத்தம். 3.உக்ரேன் போருக்கு அடுத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கும் போர்.
பஷார் அசாத் அரசுக்கு இன்று பக்க பலமாக இருப்பது லெபனானின் ஹிஸ்புல்லா, மற்றும் குர்திஷ் இயக்கங்கள், ஈரான் மற்றும்ருஷ்ய நாடுகள் ஆகியன. ஈரானைத் தன் ஜென்மப் பகையாக நினைக்கும் அமெரிக்க ஆதரவு அரசான சவூதி, அசாத்தை வீழ்த்தி சிரியாவில் தனக்கும் அமெரிக்காவுக்கும் ஆதரவான ஒரு பொம்மை அரசை அமைத்துவிட்டால் ஈரானை புவி இயல் ரீதியாகத் துண்டித்து விடலாம் என நினைக்கிறது. அதோடு லெபனானிலிருந்து இயங்கும் பலஸ்தீன ஆதரவு ஹிஸ்புல்லாவையும் ஒடுக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை முகாந்திரமாக வைத்து ருஷ்யாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் தற்போது எண்ணை ஏற்றுமதி மூலம் உருவாகியுள்ள நட்பை அழிப்பதும் அமெரிக்காவின் குறிக்கோள்.

தொடரும் அமெரிக்க ருஷ்ய முரண்பாடு
சோவியத் யூனியனின் இறுதிக் கட்டத்தில் கையெழுத்திடப்பட்ட கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தின் போது (பிப் 9,1990) சோவியத் யூனியனிலிருந்து பிரியும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் எதையும் ‘நேட்டோ’ அமைப்பில் இணைக்கக் கூடாது என்பதை ரசியா நிபந்தனையாக விதித்தது. அன்று அது ஏற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் எழுத்து மூலமாக அந்த வாக்குறுதி பதியப்படவில்லை. தவிரவும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஜெர்மனியை நேட்டோவில் இணைத்த போது கோர்பசேவ் அதை எதிர்க்கவும் இல்லை. விளைவு? இன்று சோவியத் அணியில் இருந்த 12 நாடுகள் நேட்டோவில் அடுத்தடுத்து இணைக்கப்பட்டன.

டிமிட்ரி மெத்வதேவ் ரசிய அதிபராக இருந்தபோது இப்படி அன்று வாக்களிக்கப்பட்டதையும், தற்போது அது மீறப்படுவதையும் சுட்டிக் காட்டினார். “அவ்வாறு எந்த ஒப்பந்தமும் அப்போது செய்யப்படவில்லை” என அமெரிக்கா பதிலளித்தது. சோவியத் யூனியனைச் சிதைத்த சாதனையாளர் கோர்பசேவிடம் இது குறித்துக் கேட்டபோது, “இந்த அமெரிக்க அரசியல்வாதிகளை நம்பவே இயலாது” என்றார்.

காலந் தாழ்ந்த ஞானோதயம்.
1991ல் சோவியத் யூனியன் சிதைந்தபோது பிரிந்து வந்த எந்த நாடும் நேட்டோவில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. அப்படிச் சேர்ப்பது நிதிப் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் நேட்டோவும் அவற்றை இணைக்க முயற்சிக்கவில்லை. தொடர்ந்து போஸ்னியப் போர், பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டது, பில் கிளின்டன் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற கையோடு (1993) நேட்டோவை விரிவாக்க முனைந்தது ஆகிய நிகழ்வுகளின் பின்னணியில் முன்னதாக சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து வந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தன. 1990ல் ஜெர்மனி இணைந்ததைக் குறிப்பிட்டேன். 1999ல் நேட்டோ மத்திய ஐரோப்பாவில் கால் பதித்தது. போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி மூன்றும் இணைந்தன,

அடுத்த அலையில் யூரேசியவைச் சுற்றி வளைப்பது போல லிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியா ஆகிய முன்னாள் சோவியத் அணி நாடுகள் நேட்டோவிற்குள் கொண்டு வரப்பட்டன. அப்புறம் இன்னொரு மத்திய ஐரோப்பிய நாடு (ஸ்லோவோகியா), இரு பால்கன் நாடுகள் (பல்கேரியா, ருமேனியா) நேட்டோ வசமாயின. சென்ற ஆண்டு (2017) மான்டிநீக்ரோவும் இணைக்கப்பட்டது. நேட்டோவின் ஆதிக்கம் இப்போது கருங்கடலையும் தொட்டது. ஆக பால்டிக் முதல் கருங்கடல் வரை இப்போது நேட்டோவின் அதிகாரம் விரிந்துள்ளது. 2009ல் அல்பேனியாவும் குரோஷியாவும் இணைந்தன. அட்யாட்ரிக் கடற்கரை வரை இன்று நேட்டோவின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிறது.

மிச்சம் இருப்பது உக்ரேன் உள்ளிட்ட இரண்டொரு வார்சா ஒப்பந்த நாடுகள்தான். ஜார்ஜியா, போஸ்னியா, ஹெர்சகோவினா, முதலியன நேட்டோவில் சேர விண்ணப்பித்துக் காத்திருக்கின்றன. ஆனால் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் குறி இப்போது ரசியாவின் எல்லையில் உள்ளதும், போர்நிலை முக்கியத்துவம் வாய்ந்ததுமான உக்ரேன்தான்
உக்ரேன் ரசியாவைப் பொருத்தமட்டில் பல வகைகளில் மிக முக்கியமானது. எல்லை ஓரத்தில் உள்ளது என்பது மட்டுமல்ல நேட்டோவின் வீச்சிலிருந்து தற்போது அதை விலக்கி நிறுத்தியுள்ள நாடும் அதுதான்.. அதுவும் நேட்டோவின் கையில் சிக்கினால் கிட்டத் தட்ட ரசியா ஒரு நிரந்தர முற்றுகை இடப்பட்ட நாடாக மாறிவிடும். நேட்டோவின் ஏவுகணைகள் ரசியாவின் கொல்லைப் புறத்தில் குறிபார்த்து நிறுத்தி வைக்கப்படும். தவிரவும் உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் ரசிய மொழி பேசுவோர். இவர்கள் உக்ரேனின் மொத்த மக்கள் தொகையில் 40 சதத்திற்கும் அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக ரசியாவின் இன்றைய பொருளாதார உயிர்நிலையாக அமைந்துள்ள எரிவாயுக் குழாய்களும் உக்ரேன் வழியாகத்தான் செல்கின்றன.
இந்த நிலையில்தான் 2014 ல் உக்ரேனில் ஒரு ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்தி அதையும் தன் பக்கம் இழுக்க அமெரிக்கா முனைந்தபோது ரசியர்கள் குறிப்பிட்ட அளவில் வாழக்கூடிய கிரிமியாவை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டது. ஒப்பந்தத்தை மீறிய ஆக்ரமிப்பு என அமெரிக்கா அரற்றியபோதும் ருஷ்யா கண்டு கொள்ளவில்லை.

ருஷ்யா இன்று ஒரு சோஷலிச நாடோ உலக அரசியலில் அது ஒரு அறம் சார்ந்த நிலைபாட்டை மேற்கொள்ளும் நாடோ அல்ல. ஆனால் அதே நேரத்தில் உலகில் அமெரிக்கா தன் மேலாண்மையை நிலை நாட்டும் முயற்சியின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் நேரும் மோதல்களில் ருஷ்யாவின் பக்கமே நியாயம் உள்ளது.

ஸ்காட்லந்த் முதலான நாடுகளின் பிரிவினைக் கோரிக்கைகள்
சோவியத் யூனியனின் வீழ்ச்சியை ஒட்டி உலக நாடுகளின் எண்ணிக்கை பெருகியது. சோவியத் யூனியனில் இருந்த நாடுகள் பலவும் தனித்தனி நாடுகளாயின. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன. யுகோஸ்லாவியா பெரும் இரத்தக் களறியுடன் தனித் தனி நாடுகளாகப் பிரிந்தது. அதே நேரத்தில் 28 ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரே ‘கரன்சி’ .முதலான வடிவங்களுடன் ஐரோப்பிய யூனியனாகவும் உருவெடுத்தது. ஆனால் இந்த இணைவு என்பது எவ்வகையிலும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள கூட்டாட்சி நடைமுறையுடன் ஒப்பிடத் தக்கதல்ல. ஐரோப்பிய யூனியனில் ‘மத்திய அரசு’ என ஒன்று கிடையாது.

ஸ்காட்லந்தின் நீண்ட நாள் விருப்பமான பிரிட்டனை விட்டுப்பிரிதல் என்கிற கோரிக்கை இந்த நூற்றாண்டில் அதிக வீச்சுடன் மேலுக்கு வந்தது. 2014ல் பிரிவினைக் கோரிக்கை தொடர்பான வாக்கெடுப்பு ஸ்காட்லந்த் மக்களிடம் நடத்தப்பட்டது.

உலக அளவில் பரபரப்பாகப் பேசவும் கவனிக்கவும் பட்ட இந்த வாக்கெடுப்பு முடிவு பிரிவினைக்கு எதிராக முடிந்தபோதும் உலகளவில், குறிப்பாக ஐரோப்பாவிற்குள் வெளிப்பட்ட பிரிவினைக் கோரிக்கைகளுக்கு அது வலுவூட்டியது. ஸ்பெயினில் காடலோனியா மற்றும் பாஸ்க் பகுதிகள், இத்தாலியில் வெனிடோ மற்றும் தெற்கு டைரோல், ஃப்ரான்சில் கார்சியா, பிரிட்டனி, அல்சேய்ஸ் மற்றும் சவோய், பெல்ஜியத்தில் ஃப்லான்டெர்ஸ், ஜெர்மனியில் பவேரியா மற்றும் ஃப்ரீசியா, டென்மார்கில் ஃபெரோ தீவுகள், போலந்தில் சைலீசியா, ஃபின்லாந்தில் ஆலந்த் என்பன இவ்வாறு இறையாண்மை மற்றும் சுதந்திரம் (sovereignity / independance) கோரும் சில பகுதிகள். இத்தோடு நீண்டகாலமாகக் கனடாவிலிருந்து பிரிவினை கோரிக் கொண்டுள்ள கியூபெக்கில் இந்த வாக்கெடுப்பை ஒட்டி எழுந்துள்ள உற்சாகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தோன்றும்போதே முதலாளியம் ஒருவகை உலகளாவிய தன்மையுடன்தான் தோன்றியது என்பார் கார்ல் மார்க்ஸ். அரசெல்லைகள், புவியியல் வரம்புகள் எல்லாவற்றையும் தாண்டி மூலப் பொருட்களைத் தேடுவது, உற்பத்தி செய்த பொருட்களை விற்பது என்கிற நிலையில் சிறிய சமூகங்களும் அரசுகளும் தம்மைத் தக்கவைத்துக் கொள்ள இயலாத நிலை அப்போது ஏற்பட்டது. பெரிய அரசுகளிடம் தம்மை ஒப்புவித்துப் பாதுகாப்பு பெறும் நிலை உருவானது.

இப்படித்தான் பிரிட்டனியும் கோர்சிகாவும்ஃப்ரான்சுடனும், ஸ்காட்லந்த் பிரிட்டிஷ் பேரரசுடனும் தன்னை இணைத்துக் கொள்ள நேரிட்டது.
இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. உலகமயம், ஐரோப்பிய யூனியன் முதலான பேரமைப்புகள், ‘நேடோ’ போன்ற இராணுவக் கூட்டமைப்புகள் உருவாகியுள்ள சூழலில் சிறிய நாடுகளும் கூட எவ்விதப் பெரிய சுமைகளும் இன்றி தனித்தியங்கும் சூழல் இங்கெல்லாம் உருவாகியுள்ளது,
பெரிய இராணுவம் தேவையில்லை. தனிக் கரன்சி தேவையில்லை. வணிகத் தடைகள் நீக்கப்பட்டு நெறிமுறைகளும் ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டு விட்டன, தனி விமானப் போக்குவரத்து, தபால் துறை என்பதெல்லாம் காலம் கடந்தவையாகிவிட்டன. எனில் ஏன் இனி பிரிட்டனியும் ஸ்காட்லந்தும் ஃப்ரான்சுடனும் பிரிட்டனுடனும் இணைந்திருக்க வேண்டும்?
தவிரவும் உலகமயத்திற்குப் பின் உருவாகியுள்ள வருமானக் குறைவு, வேலை வாய்ப்பின்மை, வேலை நிரந்தரமின்மை, வீடு மற்றும் மருத்துவம் தொடர்பான அரசு நலத் திட்டங்கள் சுருங்குதல் முதலியன இன்று ஸ்காட்லந்த் போன்ற பகுதிகளில் உள்ள சற்றே பின்தங்கிய மக்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒட்டு மொத்தமாக இந்தப் பிரச்சினை எல்லோருக்கும் இருந்தபோதும் ஒரு சில பகுதிகள் கூடுதலாக பாதிக்கப்படுகின்றன. ஏழ்மை, சராசரி ஆயுள் முதலியனவும் கூட மொத்தச் சராசரியைக் காட்டிலும் இப்படியான பகுதிகளில் குறைவு. மத்தியில் ஆட்சிகள் மாறிய போதும் அணுகல் முறைகளில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. எல்லாப் பலன்களும் லண்டன் என்கிற நகர அரசை மையப் படுத்தியே உருவாகின்றன என்கிற கருத்து ஸ்காட்லந்த் மட்டுமின்றி வேல்ஸ், அயர்லாந்த் போன்ற பகுதிகளிலும் இத்தகைய எண்ணங்கள் வலுவாக வேர்கொண்டுள்ள நிலை இன்றைய பிரிவினைக் கோரிக்கைகளுக்கு ஆதாரமாக உள்ளன.

இன்று உருவாகியுள்ள தனி நாட்டுக் கோரிக்கைகள் என்பன சென்ற நூற்றாண்டின் தேசிய இனப் போராட்டங்களைப் போலன்றி இன வெறுப்பு இனப் பகை என்கிற அடிப்படையில் கட்டமைக்கப் படாமைக்கு இதுவே அடிப்படை. பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்துப் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்காட்லந்தியர்களின் இயக்கம் “ஸ்காட்லந்த் தேசியவாதம்” என அடையாளப்படுத்திவிட இயலாத அளவிற்கு ஒரு தீவிரமான சமூக ஜனநாயகத் திட்டத்தை முன்நிறுத்திய செயல்பாடாகவே இருந்தது. தலைமை ஏற்ற ஸ்காட்லந்தின் முதன்மை அமைச்சரும் ஸ்காட்லந்த் தேசியக் கட்சியின் தலைவருமான அலெக்ஸ் சால்மோன் ஒரு இடதுசாரியாக இல்லாதபோதும், தனிநாடு கோரிக்கையில் பெரிய அளவில் இடதுசாரிகள் மற்றும் சோஷலிஸ்டுகள் பங்குபெற்றதை முன்னிட்டு சோஷலிசச் சாய்வுடன் கூடிய ஒரு திட்டத்தை அவர் முன்வைத்து இயங்க வேண்டியதாயிற்று. எல்லோருக்குமான இலவசக் குழந்தைகள் காப்புத் திட்டம், பல்கலைக்கழகம் வரை இலவசப் படிப்பு, ஓய்வூதியத் திட்டங்கள், எல்லோராலும் வெறுக்கப்பட்ட “படுக்கையறை வரி” யை நீக்குதல், தேசிய மருத்துவ நலத் திட்டத்தைப் பொதுத் துறையின் கீழ் கொண்டு வருதல் முதலான வாக்குறுதிகளை சல்மோன் முன்வைத்து இயங்கினார். பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை நிறுத்துவது, நேடோவின் அநீதியான தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளிக்காமை முதலான கொள்கை அறிவிப்புகளையும் அவர் செய்தார்.

ஆங்கில இனத்தின் ஆதிக்கம் என்பதாக அல்லாமல் தனியார் சொத்துக்களில் பாதிக்கு மேல் குவித்துக் கொண்டுள்ள 432 குடும்பங்களின் ஆதிக்கத்தைச் சுட்டிக் காட்டித் தங்கள் தனி நாட்டுக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. “சுதந்திரத்திற்கான தொழிலாளர்கள்” அமைப்பின் அலெக்ஸ் மொசோன், முன்னாள் துறைமுக ஊழியரும் 1999 முதல் 2003 வரை கிளாக்சோ நகரத்தின் மேயர் பதவிக்குச் சமமான நிலையில் இருந்தவருமான லார்ட் புரோவோஸ்ட் முதலானோர் “சோஷலிசத்தை நோக்கிய ஸ்காட்டிஷ் பாதை” ஒன்றுக்கான சாத்தியமாக இந்தத் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தனர்.
இன்னொன்றையும் இங்கு கவனத்தில் கொள்ளல் தகும். இஸ்லாத்தில் ‘தேச அரசு’ என்பதைக் காட்டிலும் ‘உம்மா’ – முஸ்லிம் சமூகம் என்கிற கருத்தாக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இது குறித்த போதிய புரிதல் இல்லாமலும் இஸ்லாமியர்கள் மத்தியில் உள்ள இனக்குழு வேறுபாடுகளை எல்லாம் பற்றிக் கவலை கொள்ளாமலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆட்டோமன் பேரரசு முதலானவை சிதைந்தபோது தன்னிச்சையாகச் செயல் படுத்திய நாட்டுப் பிரிவினைகள் இன்று இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பல சிக்கல்களுக்கும் மோதல்களுக்கும் காரணமாகியுள்ளன. “தேச எல்லைகளைக் கடந்த இஸ்லாமிய நாடு” என்கிற பொருளில் இன்று ஐ.எஸ் (Islamic State) என்கிற கருத்தாக்கம் முன்வைக்கப்படுவதையும் நாம் இந்தக் கோணத்திலிருந்து பார்க்க வேண்டியுள்ளது.


அரபு வசந்தம் மற்றும் வால்ஸ்ட்ரீட் முதலான அமர்வுப் போராட்டங்கள்
இன்று உலக அளவில் அரசியலில் ஏற்பட்டுள்ள பொதுப் போக்குகளைப் பற்றியே நாம் இங்கு பேசிக் கொண்டுள்ளோம். பெரிய அளவில் உலகமயச் சூழலை ஒட்டிப் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை பெரிய அளவில் மக்களைப் பாதித்துள்ளன புதிய சூழலில் இந்தப் பாதிப்புகளுக்கான எதிர்ப்பிலும் உலக அளவில் சில பொதுப் போக்குகளைக் காண முடியும் வால்ஸ்ட்ரீட் அமர்வு, அரபு வசந்தம் முதலியன சில எடுத்துக்காட்டுகள்.

ஈராக். ஆப்கானிஸ்தான் முதலான நாடுகளில் அமெரிக்கா பேரழிவுகளை ஏற்படுத்திய போதிலும் அது எதிர்பார்த்தபடி எல்லா இடங்களிலும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை. ஈரான், சிரியா, உக்ரேன் ஆகிய பிரச்சினைகளில் விரும்பியபடி ஆட்சி மாற்றங்களை (regime changes) அதனால் அரங்கேற்ற இயலவில்லை. அல்குவேதா, ஐ.எஸ் முதலான பயங்கரவாத இயக்கங்களையோ அவற்றின் தாக்குதல்களையோ அதனால் கட்டுப்படுத்த இயலவில்லை. ‘இஸ்லாமிய அரசு’ ஒன்று பிரகடனப்படுத்தக் கூடிய அளவுக்கு இன்று அங்கு நிலைமை உள்ளது. ஈரானை நெருக்குவது என்பதற்குப் பதிலாக அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனில் கூட ருஷ்யாவை அதிரடி நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணிக்கும் திராணி இல்லை.

இன்னொரு பக்கம் அமெரிக்கா சென்ற பத்தாண்டுகளில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் உலக அரங்கில் மட்டுமின்றி உள் நாட்டிலும் அதைப் பலவீனப் படுத்தியுள்ளது. 2008ல் அமெரிக்கா உட்பட உலக முதலாளியம் பெரிய பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்தது. உலகமயத்தின் மூலம் உலகம் ஏதோ ஒரு கிராமமாக உருப்பெற்றுள்ளதாகச் சொன்னார்களே அந்தக் ‘கிராமம்’ முழுவதும் அந்த பாதிப்பிற்கு இலக்காகியது. கடன் சுமை, வேலை இன்மை, விலைவாசி ஏற்றம், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்குப் பொருளாதார வேறுபாடுகள், இரக்கமற்ற கார்பொரேட் கொள்ளைகள், கார்பொரேட்களின் எடுபிடிகளாக அரசுகள் மாறி வரும் அவலம், எதிர்காலத்தில் இவை எல்லாம் மாறலாம் என்கிற நம்பிக்கை பொய்த்து, பதிலாக எதிர்காலமே சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தை உருவாக்கியுள்ள பருவ நிலை மாற்றங்கள் மற்றும் சூழல் அழிவுகள் முதலியன இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக உலகமெங்கும் மிகப் பெரிய கொந்தளிப்புகள் ஏற்பட்டன. 2010 டிசம்பரில் துனீசியாவிலும், 2011ல் எகிப்திலும் தொடர்ந்து உலகெங்கிலும் அது தீயாய்ப் பரவியது.
துனீசியாவின் பென் அலி ஜனவரி (2011) மத்தியிலும், தாஹ்ரீர் சதுக்கத்தில் போராட்டம் தொடங்கிய 18ம் நாள் எகிப்தின் முபாரக்கும் வீழ்ந்த பின் அந்தப் போராட்டங்கள் வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவியது. பஹ்ரெய்ன், ஏமன் பிறகு லிபியா, சிரியா என எல்லா நாடுகளிலும் எதிர்ப்புகள் கிளம்பின. சில நாடுகளில் அரசுகள் வீழ்ந்தன. சில நாடுகளில் அரசுகள் சலுகைகளை வழங்கின. எண்ணை வள நாடுகள் குடிமக்களின் வங்கிக் கணக்கில் காசைச் செலுத்தின..
அடுத்த முக்கிய எழுச்சி மே 15 (2011)ல் ஸ்பெயினில் வெளிப்பட்டது. தம்மைக் “கொதித்தெழுந்தவர்கள்” என அழைத்துக் கொண்ட மக்கள்திரள்கள் (multitudes) மாட்ரிடிலும் பார்சிலோனாவிலும் நகர் மையங்களில் உள்ள சதுக்கங்களைக் கைப்பற்றி அமர்ந்தன. ஊழல்கள், வேலையின்மை, வீடுகளின்மை, கட்டாய வெளியேற்றங்கள் ஆகியவற்றை எதிர்த்து மில்லியன் கணக்கில் மாட்ரிட் நகரின் ப்யூர்டா டி சோல் சதுக்கத்தில் குவிந்த ஸ்பானியர்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வெளியிலிருந்து ஆதரவளித்தனர். மக்கள் மன்றங்களில் (assemblies) விவாதங்களின் ஊடாகப் பொதுக் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. ஜூனில் ஏதன்ஸ் நகரின் சின்டாக்மா சதுக்கத்தில் மக்கள் அமர்ந்தனர். கிரேக்க அரசின் சிக்கன நடவடிக்கைகளை அவர்கள் எதிர்த்தனர். அடுத்த சிலநாட்களில் டெல் அவிவின் ரோத்ஷீல்ட் பூலிவாரில் சமூகநீதி மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் என்கிற முழக்கத்துடன் இஸ்ரேலியர்கள் திரண்டனர். ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆப்ரிக்க பித்தானியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி ரோட்டன்ஹாமில் தோன்றிய கலவரம் பின் இங்கிலாந்தின் வெறு சில பகுதிகளிலும் பரவியது.
இந்தப் பின்னணியிலும், இவற்றின் தொடர்ச்சியாகவும்தான் மே 17 அன்று வால்ஸ்ட்ரீடில் ஸுகோடி பூங்காவில் திரண்ட அமெரிக்கர்களில் அமர்வுப் போராட்டத்தைக் காண வேண்டும். போர்த்துக்கலின் ஜெரகா ஆ ரஸ்கா, மெக்சிகோவின் சோய் 32 இயக்கம், இஸ்தான்புல் தக்ஸீம் பூங்கா அமர்வு முதலானவற்ரைச் சுருக்கம் கருதி நான் இங்கே குறிப்பிடவில்லை. அக்டோபர் 15 வாக்கில் 82 நாடுகளில் கிட்டத்தட்ட 951 முக்கிய உலக நகரங்கள் இப்போராட்டங்களை எதிர்கொண்டன.
இந்தப் போராட்டங்களின் வடிவம், போராட்டக்காரர்களுக்கிடையே நிலவிய உறவின் தன்மை, போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம், அவர்களின் மொழி, இலக்கு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைகளைப் பேசுமுன் ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்வது அவசியம். அவை ஒவ்வொன்றும் ஆங்காங்குள்ள உள்ளூர்த் தன்மைகளுக்குத் தம்மைத் தகவமைத்து வெளிப்பட்டன என்பதுதான் அது. அரபுலகைப் பொருத்தமட்டில் நீண்ட காலக் கொடுங்கோல் ஆட்சியாளர்களை வீழ்த்துவது அவர்களின் நோக்கம் என்று அவை வெளிப்பட்டபோதிலும் வால்ஸ்ட்ரீட் அமர்வு நிதி மூலதன அமைப்பின் கொடுங்கோன்மையை வீழ்த்துவது என வெளிப்பட்டபோதிலும் பொதுவில் அவை இன்று மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கங்களிலிருந்து விடுபடுவது என்கிற பொது நோக்கைக் கொண்டிருந்தன. ஆக, போராட்டங்களின் தனித்தன்மைகள், உள்ளூர் பிரச்சினைகளைத் தாண்டி உலகளாவிய பொது நோக்கங்களை அவை கொண்டிருந்தன. உலகப் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ள கடும் ஏற்றத்தாழ்வுகளையும் ஜனநாயக நிறுவனங்கள் இவற்றால் சிதைக்கப்படுவதையும் அவை எதிர்த்து நின்றன. “(எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ளூம்) ஒரு சதத்தினருக்கு எதிராக (எல்லாவற்றையும் இழந்த) நாங்கள் 99 சதம்” என கூடி இருந்தவர்கள் முழங்கினர். “உண்மையான ஜனநாயகம்” கோரினர்.
நகரத்தின் மையமான வெளி ஒன்றைக் கைப்பற்றி வெளியேறாமல் அமர்வது (occupation) என்பது உலகளாவிய இந்தப் போராட்டங்களின் பொதுத்தன்மைகளில் ஒன்று. பதினைந்தாண்டுகளுக்கு முன் உலகமயச் செயற்பாடுகளை எதித்த போராட்டங்கள் ஒரு வகையில் ஒரு ‘நாடோடித் தன்மையை’ப் பெற்றிருந்தது. உலக மய நிறுவனங்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அங்கு ஆர்பாட்டங்களை நிகழ்த்துவது என்பது இன்று மாறி, இத்தகைய நாடோடித் தன்மைக்குப் பதிலாக ஓரிடத்தில் இருந்து போராடும் ‘அமர்வுத் தன்மையை’ (sedentary) இன்றைய போராட்டங்கள் எடுத்தன. குறிப்பான தலைமை உருவாவதை இவை பிரக்ஞை பூர்வமாகத் தவிர்த்தன. மிஷேல் ஹார்ட், அந்தோனியோ நெக்ரி, ஸ்லாவோக் சிஸெக், காலே லாஸ்ன், மிகா வைட் முதலான இன்றைய சிந்தனையாளர்கள் போராட்டத்தை ஆதரித்து முழங்கினாலும், முன்னெடுத்துச் சென்றாலும் அவர்களும் கூட இங்கே தலைமை தாங்க அநுமதிக்கப்படவில்லை. ஒரு மையப்படுத்தப்பட்ட அதிகாரம் என்பதைச் சுட்டும் ஆணிவேர் என எதையும் அடையாளப் படுத்த இயலாத, ஆணி வேரே இல்லாத “புல் வடிவ” (rhizomatic movement) அமைப்பைக் கொண்டதாக இவை அமைந்தன.
பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்குப் பதிலாக, எல்லோரும் பங்கேற்று கருத்தொருமிப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கும் “மக்கள் திரள் அவை” (multitude form) என்கிற வடிவை அவை எடுத்தன.. நவ தாராளவாதப் பொருளாதார எதிர்ப்பு, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டல் என்பதைத் தாண்டிய எந்த மையமான கருத்தியலையுங் கூட இந்த அமர்வுப் போராட்டங்கள் கொண்டிருக்கவில்லை.
இத்தகைய நடைமுறைகள் ஒரு உண்மையான ஜனநாயகத்தையும், பன்மைத்துவத்தையும் இந்த அமர்வுப் போராட்டங்களுக்கு அளித்தன. சற்றே மாறு பட்ட கருத்துடைய பல்வேறு சிறு இயக்கங்கள் இணந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் இவை வழி வகுத்தன.
எனினும் இத்தகைய அமர்வுப் போராட்டங்கள் எதைச் சாதித்தன என்கிற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. பல ஆயிரக் கணக்கான மக்கள் ஓரிடத்தில் கூடி மாதக் கணக்கில் போராடுவது, பொது முடிவுகளை எடுப்பது, மருத்துவம், உணவு முதலான பிரச்சினைகள் என்பன முக்கிய சிக்கல்களை. ஏற்படுத்தவே செய்தன. சென்னை மெரீனா போன்ற இடங்களில் அவை வன்முறையாகக் கலைக்கவும் பட்டன.
அமர்வுப் போராட்டங்கள் உடனடியான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடவில்லை ஆயினும் ஆயுதப் போராட்டங்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் முதலான மரபுவழிப் போராட்டங்களும் கூட எல்லாப் பிரச்சினைகளையும் எல்ல்லா நேரங்களிலும் தீர்த்துவிடவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
எனவே..
புதிய நூற்றாண்டில் உருவாகியுள்ள “புதிய உலகின்” அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக ஒரு சில நிகழ்வுகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன். அரசியல் என்பது பொருளாதாரத்துடன் பிரிக்க இயலாமல் பின்னிப் பிணைந்தது என்பது மார்க்சியம் முன்வைக்கும் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. இந்த ஒரு துருவ உலகின் பொருளாதாரச் செயல்பாடுகள், திறந்துவிடப்பட்ட சந்தை, கல்வி, மருத்துவம் என அனைத்தும் பன்னாட்டுக் கொள்ளைக் களமாக்கப்பட்ட நிலை, குடிமக்கள் சமூகப் பாதுகாப்பை இழந்து நிற்றல், நிரந்தர வேலை, ஓய்வூதியம் என்பதெல்லாம் பொருளற்றுப் போனது ஆகியவற்றுடன் இன்றைய அரசியலை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
சோவியத் யூனியன் காலத்திய பனிப்போர் முடிவுற்றதோடு உலகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது எனவும், இனி போர் நெருக்கடிகள் இருக்காது எனவும் சொல்லப்பட்டதெல்லாம் எத்துணை அபத்தம் என்பதற்கு கடந்த கால் நூற்றாண்டு உலக வரலாறு சாட்சியம் பகர்கிறது. ஒருவேளை சோவியத் யூனியன் வலுவாக இருந்திருக்குமானால் வளைகுடாப் போர்கள், ஐ.எஸ் பயங்கரவாதம் முதலியன சாத்தியமில்லாமல் ஆகியிருக்குமே என்கிற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஏதோ ஒரு காரணம் சொல்லி ஒரு இறையாண்மையுடைய நாட்டுக்குள் நுழைந்து அதை அழிப்பது, பின் நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் வைத்த குற்றச்சாட்டு தவறு என உணர்ந்து கொண்டோம் எனப் புன்னகைப்பது என்கிற இன்றைய நிலை ஒரு துருவ உலகு எத்தனை ஆபத்தானது என்பதற்கு ஒரு சான்று. பட்டினிச் சாவுகள், ஏதுமற்ற அகதிகளாக மக்கள் உலகெங்கும் அலைதல், மேலும் மேலும் வேலையின்மை பெருகுதல், சுற்றுச் சூழல் பாழ்படுதல், அழிவாயுதங்களின் உற்பத்தி பெருகுதல்… எதைத்தான் சோவியத்துக்குப் பிந்திய புதிய உலகம் தடுத்து விட்டது? இறையாண்மை உடைய நாடுகளுக்குள் புகுந்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி அம்மக்களைக் கொன்று குவிப்பது என்பதெல்லாம் இன்றைய மாற்றங்கள்தானே? இப்படிச் சொல்வது பனிப்போர்க் காலத்தையோ, சோவியத்தையோ கொண்டாடுவது அல்ல. தான் அழிவதற்கான காரணிகளை சோவியத் அதற்குள்ளேயே கொண்டிருந்தது. இன்னும் கூட ரஷ்யா, சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிலா ஆகியனதான் அமெரிக்க மேலாண்மைக்கு ஒரு சவாலாக உள்ளன என்பதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது. சோவித்துக்குப் பிந்திய இன்றைய உலகம் அன்றைய பனிப்போர்க் காலத்தைக் காட்டிலும் இன்னும் கொடியது, அறக் கேடானது என்பதுதான்