புதன், 28 ஆகஸ்ட், 2019

பசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வரும் அமேசான்...!

பிரேசிலில் நிகழ்ந்த பயங்கர காட்டுத்தீயால், பசுமையான அழகை இழந்து சாம்பல் காடாக மாறி வருகிறது அமேசான் காடுகள். 

55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அமேசான் மழைக்காடுகளின் தற்போதைய நிலை படுமோசமான நிலைக்கு மாறிவிட்டது. பூமியின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் இந்த காடுகள், உலகுக்கு 20 சதவீத ஆக்சிஜனை வழங்கி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் தற்போது அமேசான் காடுகள் தன் அழகை இழந்து, சாம்பலாக மாறியுள்ளது. 


பிரேசில் நாட்டில் தற்போது கோடைகாலம் என்பதால், இயற்கையாகவே தீ பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் அமேசான் வனப்பகுதியில் நிகழ்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 85 சதவீதம் அதிகம் என்றும் பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்புத்துறை வீரர்கள், ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அடர்ந்த காடுகளுக்குள் சென்று கொளுந்துவிட்டு எரியும் மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை விரைந்து கட்டுப்படுத்த வலியுறுத்தி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் போராட்டம் நடைபெற்றது. பசுமை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அதிபர் ஜேர் போல்சனரோ அதிக முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

அமேசான் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, ஒட்டு மொத்த பூமிக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.