வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

கானகம் படைப்போம்

ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த இப்பிரபஞ்சத்தின் சூரிய குடும்பத்தில் மற்ற கோள்களை விட மிகவும் அழகானது நாம் வாழும் பூமிப்பந்து ஆகும்.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிரகங்கள் பாறைகள், மலைகள், மேடு, பள்ளம் என கரடு முரடான அமைப்பையே கொண்டுள்ளன. ஆனால் இதற்கு நேர் மாறாக நம் பூமிதான், நீல வண்ணக்கடல், பசுஞ்சோலைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள், அடர்ந்த காடுகள் என கொள்ளை அழகோடு ஒரு மென்மையான பூவைப்போல் அதன் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

அதனால்தான் பூமியை ஒரு பூப்பந்து என்று கூட அழைக்கலாம். அப்படிப்பட்ட இந்தப் பூப்பந்தைத்தான் நாம் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளையர்களிடம் இருந்து நம் நாடு விடுவிக்கப்பட்டதைப் போல், இந்த பூமி மனிதர்களின் அட்டூழியத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

நமது எல்லா சுகங்களுக்காகவும் நாம் தெரிந்தோ, தெரியாமலோ பூமியை அழித்துக் கொண்டிருக்கிறோம். அதிநவீன தொழில் நுட்பம், நாகரிக மாற்றம், நாடுகளுக்கு இடையிலான போர், பணத்தை சுற்றி ஓடும் வாழ்க்கை முறை, தொழில் பெருக்கம், லாபவெறி போன்றவற்றால் இந்த அழகிய பூப்பந்து சிதைக்கப்பட்டு வருகிறது. மனிதர்களால் சிதைக்கப்படும் இந்த பூமி, மனிதர்களால் தான் காப்பாற்றப்பட வேண்டும். அந்தப் பொறுப்பு மனித சமுதாயத்திற்குத்தான் உள்ளது. பூமி அதிர நடக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த பூமியை பூமாதேவி தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையில், பூமிக்கு தர வேண்டிய ஒரு மரியாதைக்காக இப்படிச் சொல்வார்கள். ஆனால் நாமோ பூமியை இன்று அணுகுண்டுளால் பிளக்கிறோம். காடுகளை வெட்டி பூமிபந்துக்கு நெருப்பு வைக்கிறோம். சுரங்கம் தோண்டுகிறோம் என்ற பெயரில் பூமியின் அடிவயிற்றைக் கிழிக்கிறோம். தொழிற்சாலைகள் மூலமும், வாகனங்கள் மூலமும் வான்வெளியில் புகை மூட்டி பூமித்தாயை மூச்சடைக்கச் செய்கிறோம். வான்வெளி திணறுகிறது. சமவெளி சுடுகிறது. பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது.

வெண்ணெய்ப் பானையை உடைத்துவிட்டு திருதிருவென முழிக்கும் குழந்தையைப் போல இந்த பூமிப்பந்தை நசுக்கி, மிதித்து, உதைத்து, கிழித்து........ இன்னும் எதை எதையோ செய்துவிட்டு மனித சமுதாயம் இப்போது திருதிருவென விழிபிதுங்கி நிற்கிறது. இனியாவது நாம் திருந்‍துவோமா? நமது செயல்களுக்காக வருந்துவோமா? வருங்கால சந்ததிக்கு மிச்ச சொச்சமுள்ள பூமியையாவது விட்டு வைப்போமா? போன்ற கேள்விகள் நம் கண் முன் சூலாயுதமாய் எழுந்து நிக்கின்றன. இனியாகிலும் இந்த பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை மக்களிடையே வலுப்பெறுமா?

காடுகளை வளர்ப்போம் சுற்றுச் சூழல் காப்போம் இயற்கையால் இணைவோம் வருங்கால சந்ததிகளுக்கு வன வளம் விட்டுச் செல்வோம்.