செவ்வாய், 17 ஜூலை, 2018

முதல் முறையாக டிரம்ப் - புதின் நேருக்கு நேர் சந்திப்பு: பின்லாந்து நாட்டில் நடந்தது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்து பேசினர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சந்திப்பு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நடந்தது.

Donald Trump meets Vladimir Putin: The key moments from the summit

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச விரும்புவதாக கடந்த மார்ச் மாதம் ரஷிய அதிபர் புதின் விருப்பம் தெரிவித்து இருந்தார். இதை டிரம்பும் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்புடன், புதின் பின்லாந்தில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரும் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் நேற்று சந்தித்தனர். இரு தலைவர்களும் முதன் முதலாக தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

மாஸ்கோ நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நீண்ட நெடிய பயணமாக புதின் நேற்று காலை தனி விமானம் மூலம் ஹெல்சிங்கி நகர் சென்றடைந்தார்.

இதைத் தொடர்ந்து டிரம்பும், புதினும் பின்லாந்து அதிபர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும், உலககோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக புதினை டிரம்ப் பாராட்டினார். இரு பெரும் வல்லரசு நாடுகளின் தலைவர்களின் இந்த சந்திப்பை உலக நாடுகள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தன. தலைவர்களின் இந்த சந்திப்பு 2 அமர்வுகளாக பல மணி நேரம் நீடித்தது.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது பேச்சுவார்த்தை நிச்சயம் செறிவு மிகுந்ததாகவும், இரு நாடுகளுக்கும் இடையே மிகச் சிறந்த உறவை ஏற்படுத்துவதாகவும் அமையும். எங்களது பேச்சு வர்த்தகம் முதல் ராணுவம் வரையிலும் ஏவுகணை முதல் அணு ஆயுத விவகாரம் வரை இருக்கும். சீனா குறித்தும் விவாதிப்போம்.

வெளிப்படையாகச் சொல்லப்போனால் அமெரிக்காவும், ரஷியாவும் இணைந்து செயல்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக இந்த சந்திப்பு உருவாகி இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் போனது. நான் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் இன்னும் 2 ஆண்டுகள்தான் மீதி உள்ளது. என்றபோதிலும் இரு நாடுகளும் மிகச்சிறப்பான உறவை பேண முடியும் என்று நம்புகிறேன்.

எங்கள் இரு நாடுகளையும் இந்த உலகம் ஒன்று சேர்ந்து பார்க்கவே விரும்புகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாங்கள் இரு பெரும் அணுசக்தி நாடுகள். உலக அணு ஆயுதங்களில் 90 சதவீதம் எங்களிடம்தான் உள்ளன. இது நல்லதுக்கு அல்ல. இது மோசமான ஒன்றாகும். இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உலகம் எங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இப்பிரச்சினையை நாங்கள் முன்னெடுத்து விவாதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதின் கூறுகையில், “எங்கள் இரு நாடுகளின் உறவு மற்றும் உலகப் பிரச்சினைகள் குறித்து விரிவான முறையில் பேசுவதற்கு சரியான நேரம் அமைந்திருக்கிறது” என்றார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தையின்போது, 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா(புதின் அரசு) தலையிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் எதுவும் இல்லை.

முன்னதாக ரஷியாவுடன், அமெரிக்காவின் உறவு பல காலம் சரியாக அமையாததற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் மோசமான அணுகுமுறையே காரணம் என்று டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்திருந்தது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.