வியாழன், 26 ஜூலை, 2018

இம்ரான் கான் - விளையாட்டுத் துறையில் இருந்து அரசியல்

பாகிஸ்தான் அணி, 1992ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இம்ரான் கான், இன்று அந்நாட்டின் பிரதமராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார். விளையாட்டுத் துறையில் இருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது எப்படி என்பதை இனி பார்க்கலாம்.

1992ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் Imran Ahmad Khan Niazi.அப்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரிஃப். ஊழல் புகாரில் சிக்கி நவாஸ் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க இருக்கிறார் இம்ரான் கான்.

1952ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் உயர் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் இம்ரான்கான். அமைதியான சிறுவனாக வளர்ந்த இம்ரான் கான், பாகிஸ்தானில் பள்ளிப் படிப்பையும், இங்கிலாந்தில் கல்லூரி படிப்பை முடித்தார். தனது 16 வயது வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இம்ரான், 1971ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.

மெல்ல மெல்ல அணியில் தனது இருப்பை பலப்படுத்திய இம்ரான் தனது 30வது வயதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 1992ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அதே ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இம்ரான், 1996ம் ஆண்டு Pakistan Tehreek-e-Insaf என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 

1997ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் இரண்டிலுமே தோல்வியடைந்தார். 1999ம் ஆண்டு ராணுவ உதவியுடன் நவாஸ் ஷெரிஃப்பை ஆட்சியிலிருந்து அகற்றிய முஷாரஃப்பின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார் இம்ரான். ஆனால், ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் 2007ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடத்த உத்தரவிட்ட முஷஃரப்பின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, இம்ரான்கான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2011ம் ஆண்டு ஆளும் கட்சிக்கு எதிராக லாகூரில் பிரமாண்ட பேரணியை நடத்தி தனது பலத்தை நிரூபித்தார். இதனால், பாகிஸ்தானின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக இம்ரான் கான் வளர்ந்து விட்டதாக பத்திரிகைகள் எழுதின. பாகிஸ்தான் மண்ணில், தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், அமெரிக்க போர் விமானங்கள் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்தினார் இம்ரான்.

2013ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்தார் இம்ரான். ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் அமெரிக்கா போர் விமானத் தாக்குதலை முடிவிற்கு கொண்டு வந்து அமைதியை நிலை நாட்டுவேன் என்றார். அந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சியால் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf. 

2013ம் ஆண்டு தேர்தலில் முறைகேடு செய்து நவாஸ் வெற்றி பெற்றதாகவும் எனவே நவாஸ் ஷெரிஃப் பதவி விலகக் கோரியும் உரிய விசாரணை நடத்தக்கோரியும் லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் வரை ஊர்வலம் சென்றார் இம்ரான். 2013ம் ஆண்டுக்குப் பிறகு இம்ரான்கானின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கருத்துகளை ஏற்கும் விதமாக கூட்டங்களில் பேசினார் இம்ரான்கான். பாகிஸ்தான் ராணுவமும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியதாகவும் கூறப்படுகிறது.

நவாஷ் ஷெரிஃப் மற்றும் பூட்டோ குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து வெளியான ஊழல் புகார்களும், இம்ரான்கானின் அரசியல் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தது. வெளிநாட்டில் சொத்து வாங்கிய புகாரில் நவாஸ் ஷெரிஃபும், ஊழல் குற்றச்சாட்டில் ஆசிஃப் அலி சர்தாரியும் சிறையில் அடைக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு அரசியல் ரீதியான வாய்ப்புகளை அதிகரித்தன.

நிர்வாக ரீதியாக பாகிஸ்தானை எப்படி வழிநடத்துவார் என்ற கேள்விகள் இருந்தாலும், ஊழல் கறை படாத அரசியல் தலைவர் என்ற காரணம், அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறது.