செவ்வாய், 17 ஜூலை, 2018

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: 7 நாட்களாக ரேடியேட்டர் நீரை குடித்து உயிர் பிழைத்த இளம்பெண்

பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 7 நாட்களாக காரின் ரேடியேட்டர் நீரை குடித்து இளம்பெண் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. #California

கலிபோர்னியா மலைமுகட்டில் இருந்து 250 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய இளம்பெண் 7 நாட்களாக உயிருக்கு போராடிய சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

கலிபோர்னியாவில் பிக் சர் பகுதியில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற 23 வயது பெண் போலந்தில் இருந்து தனது சகோதரி வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே வனவிலங்கு வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க முயற்சிக்கும்போது கார் பள்ளத்தில் விழுந்தது. அவர் குறிப்பிட்ட நேரத்திற்கு தனது சகோதரியின் வீட்டுக்கு செல்லாததால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த ஒரு ஜோடி, ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் காயங்களுடன் விபத்தில் சிக்கியிருப்பதை கண்டனர். உடனடியாக அவரை மீட்ட அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறும்போது, ஏஞ்செலாவை மீட்கும்போது அவர் விலா எலும்புகளில் காயங்களுடனும், மூளை இரத்த அழுத்ததினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினர். மேலும் அவர் உயிர் பிழைத்தது ஆச்சர்யம் அளிப்பதாகவும், அந்த சூழ்நிலையில் வேறு யாரும் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என தெரிவித்தனர்.

7 நாட்களாக உடலில் காயத்துடன் தனிமையில் உயிர்தப்பிய ஏஞ்செலா, 7 நாட்களாக உணவு இன்றி தனது காரின் ரேடியேட்டரில் இருந்த நீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார். ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்