திங்கள், 30 ஜூலை, 2018

தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு!

துபாய் நாட்டில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

துபாய் அரசின் இஸ்லாமிய சமய அறநிலையத்துறை சார்பில் இந்த திருவிழா நடைபெற்றது. இதில், அரபி, ஜெர்மன், ஸ்பானிஷ், ருமேனியா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மொழி, மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த கண்காட்சியில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ் அரங்கில் தமிழ் மொழியின் வரலாறு, வளர்ச்சி, தமிழர் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்கள் பண்பாட்டு பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் 2-ஆவது பரிசு பெங்காலிக்கும், 3-ஆவது பரிசு எத்தியோப்பியாவுக்கும் வழங்கப்பட்டது.

வெள்ளி, 27 ஜூலை, 2018

உலகின் மிக அழகிய சிறுமி

நைஜீரியன் சிறுமியின் புகைப்படம்...!

Angelic five-year-old Nigerian, Jare, is ‘world’s most beautiful girl’

உலகின் மிக அழகிய சிறுமி என்று அனைவராலும் பேசப்பட்டு வருகிறார் நைஜீரியாவை சேர்ந்த 5 வயது சிறுமி ஜேர் இஜலானா (Jare Ijalana ).

சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில், ஜேரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார் புகைப்படக்கலைஞர் மோஃபி பமூயிவா (Mofe Bamuyiwa). “அவள் ஒரு சிறுமி.... இருந்தாலும் அவள் ஒரு தேவதை” என்று ஜேரின் ஒரு புகைப்படத்திற்கு மோஃபி தலைப்பிட்டிருந்தார்.

பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அதிக மக்களால் லைக்  செய்யப்பட்டு, தற்பொழுது 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஜேரின் புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர்.

ஜேரின் கருமை நிறமும், அழகான கண்களும், அடர்ந்த முடியும் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. பொம்மை போன்று மிக அழகாக இருக்கும் ஜேரின் புகைப்படத்திற்கு பெரும்பாலானோர் உலகின் மிக அழகிய சிறுமி என்பது போல கருத்து பதிவிட்டுள்ளனர்.

குழந்தைப்பருவத்திற்கும் இளமைப்பருவத்திற்கும் இடையிலான ஒரு விஷயத்தை புகைப்படம் எடுக்க முயற்சித்ததாகவும், ஜேரின் இயற்கையான அழகை அப்படியே படம்பிடிக்க வேண்டுமெனெ நினைத்ததாகவும் ஜேரை புகைப்படம் எடுத்த மோஃபி தெரிவித்தார்

21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமானது: இன்று முழு சந்திர கிரகணம்: 103 நிமிடங்கள் நீடிக்கும்

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்குகிறது. 103 நிமிடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிக்கிறது. அப்போது நிலா, ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும்.

முன்னதாக இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணமாக தொடங்குகிறது.

இந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.

மேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது.

அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந் தேதி நிகழும். அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.

இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது.

இதுபோன்ற ஒரு முழு சந்திர கிரணம் மீண்டும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 21-ந் தேதி இரவில் நிகழ உள்ளது.

வியாழன், 26 ஜூலை, 2018

இம்ரான் கான் - விளையாட்டுத் துறையில் இருந்து அரசியல்

பாகிஸ்தான் அணி, 1992ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இம்ரான் கான், இன்று அந்நாட்டின் பிரதமராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார். விளையாட்டுத் துறையில் இருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது எப்படி என்பதை இனி பார்க்கலாம்.

1992ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் Imran Ahmad Khan Niazi.அப்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரிஃப். ஊழல் புகாரில் சிக்கி நவாஸ் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க இருக்கிறார் இம்ரான் கான்.

1952ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் உயர் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் இம்ரான்கான். அமைதியான சிறுவனாக வளர்ந்த இம்ரான் கான், பாகிஸ்தானில் பள்ளிப் படிப்பையும், இங்கிலாந்தில் கல்லூரி படிப்பை முடித்தார். தனது 16 வயது வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இம்ரான், 1971ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.

மெல்ல மெல்ல அணியில் தனது இருப்பை பலப்படுத்திய இம்ரான் தனது 30வது வயதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 1992ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அதே ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இம்ரான், 1996ம் ஆண்டு Pakistan Tehreek-e-Insaf என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 

1997ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் இரண்டிலுமே தோல்வியடைந்தார். 1999ம் ஆண்டு ராணுவ உதவியுடன் நவாஸ் ஷெரிஃப்பை ஆட்சியிலிருந்து அகற்றிய முஷாரஃப்பின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார் இம்ரான். ஆனால், ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் 2007ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடத்த உத்தரவிட்ட முஷஃரப்பின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, இம்ரான்கான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2011ம் ஆண்டு ஆளும் கட்சிக்கு எதிராக லாகூரில் பிரமாண்ட பேரணியை நடத்தி தனது பலத்தை நிரூபித்தார். இதனால், பாகிஸ்தானின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக இம்ரான் கான் வளர்ந்து விட்டதாக பத்திரிகைகள் எழுதின. பாகிஸ்தான் மண்ணில், தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், அமெரிக்க போர் விமானங்கள் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்தினார் இம்ரான்.

2013ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்தார் இம்ரான். ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் அமெரிக்கா போர் விமானத் தாக்குதலை முடிவிற்கு கொண்டு வந்து அமைதியை நிலை நாட்டுவேன் என்றார். அந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சியால் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf. 

2013ம் ஆண்டு தேர்தலில் முறைகேடு செய்து நவாஸ் வெற்றி பெற்றதாகவும் எனவே நவாஸ் ஷெரிஃப் பதவி விலகக் கோரியும் உரிய விசாரணை நடத்தக்கோரியும் லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் வரை ஊர்வலம் சென்றார் இம்ரான். 2013ம் ஆண்டுக்குப் பிறகு இம்ரான்கானின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கருத்துகளை ஏற்கும் விதமாக கூட்டங்களில் பேசினார் இம்ரான்கான். பாகிஸ்தான் ராணுவமும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியதாகவும் கூறப்படுகிறது.

நவாஷ் ஷெரிஃப் மற்றும் பூட்டோ குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து வெளியான ஊழல் புகார்களும், இம்ரான்கானின் அரசியல் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தது. வெளிநாட்டில் சொத்து வாங்கிய புகாரில் நவாஸ் ஷெரிஃபும், ஊழல் குற்றச்சாட்டில் ஆசிஃப் அலி சர்தாரியும் சிறையில் அடைக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு அரசியல் ரீதியான வாய்ப்புகளை அதிகரித்தன.

நிர்வாக ரீதியாக பாகிஸ்தானை எப்படி வழிநடத்துவார் என்ற கேள்விகள் இருந்தாலும், ஊழல் கறை படாத அரசியல் தலைவர் என்ற காரணம், அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றிய அடிப்படைத் தகவல்கள்

➤பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பு தான் பிரிக்ஸ்

➤5  நாடுகளின் முதல் எழுத்தை கொண்டு ஆங்கிலத்தில் BRICS என்ற பெயர் உருவாக்கப்பட்டது

➤சர்வதேச பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு போட்டியாக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது

➤உலக மக்கள்தொகையில் 40% பேர் பிரிக்ஸ் நாடுகளில் உள்ளனர்

➤உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு

➤உலக வங்கி, IMFக்கு போட்டியாக நியூ டெவலப்மெண்ட் பாங்க் என்ற பெயரில் வங்கி தொடங்கப்பட்டுள்ளது

➤சர்வதேச அரங்கில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு சவாலாக பிரிக்ஸ் அமைப்பு பார்க்கப்படுகிறது 

➤பிரிக்ஸ் அமைப்பின் 10-வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது

➤சில நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போர் தொடுத்துள்ள நிலையில் பிரிக்ஸ் மாநாட்டு முக்கியத்துவம் பெறுகிறது

பேய்ப்படம் 

சுவாரசியமான விஷயங்களை விரும்புபவர்கள், பேய் படம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். பயந்தாலும் கூட பேய் படம் பார்ப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

பேய் கனவை ஏற்படுத்துவது, பயமுறுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்கு சில நன்மைகளும், பேய்ப்படம் பார்ப்பதன் மூலம் ஏற்படுகிறது.

பேய் படம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1. கலோரிகளை குறைக்கிறது:

2012ம் ஆண்டு, லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், 10 நபர்களை வேறு வேறு பேய் படங்களை பார்க்கச் செய்தது. அதிக பயமாக இருக்கும் பேய் படத்தை பார்த்த நபர் ஒருவர் அதிகமாக குதித்ததாலும் கத்தியதாலும் அவருடைய கலோரிகள் அதிக அளவில் குறைந்தது தெரியவந்தது. இதனால், பேய் படம் பார்ப்பதன் மூலம் நம் உடலில் உள்ள கலோரிகள் குறைகின்றது என ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

2. நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது:

பேய் படம் பார்ப்பது, சிறிது நேரத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பயமான காட்சிகளை பார்க்கும்பொழுது ரத்த ஓட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது. இதனால், அந்த குறிப்பிட்ட சமயத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

3. மனநிலையை தீர்மானிக்கிறது:

பேய் படங்களை பார்த்த பின்னர், மகிழ்ச்சியாகவும், நிம்மதியுடனும் இருக்கமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்தும், பேய் படம் பார்க்கும்பொழுது பயப்படுபவர்களுக்கு மட்டுமே நிகழும். அதனால், பேய் படம் பார்ப்பது மட்டுமல்லாமல், அந்த பேய் படத்தை பார்த்து பயப்பட வேண்டும்.

ஸ்காட்லாந்து நாட்டின் டோமிச் நகரில் 350க்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவர்ஸ் நாய்கள் ஒரே இடத்தில் கூடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

நாய் இனங்களில் பலவகை உண்டு. இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, பக் போன வகை நாய்கள் நமக்குத் தெரிந்தவை. நமக்குத் தெரியாத இன்னும் பல வகை நாய் இனங்கள் உலகம் முழுக்க உள்ளன. இதில் கோல்டன் ரெட்ரீவர்ஸ் என்ற நாய் இனம், 19ம் நூற்றாண்டில் உருவானது. 

அந்த நாய் இனம் உருவாகி தற்போது 150 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே இந்த 150வது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில், கோல்டன் ரெட்ரீவர்ஸ் எனும் இந்த வகை நாய்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டன. கோல்டன் ரெட்ரீவர்ஸ் கிளப் மூலம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதைப் பார்த்து அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் குதூகலமடைந்தனர்

புதன், 18 ஜூலை, 2018

முதுமைக் காதல்

மெருகூட்டும் உன் கன்னங்கள்
மருவற்ற முகத்திற்கு
அழகு சேர்க்க!!
 
மொழிபேசும் உன் இதழை
மெய்மறந்து நான் பார்த்திருக்க
வளையோசை கேட்டுக்கொண்டே
மடிமீது தலை சாய்க்க!!
 
அசைந்தாடும் கூந்தல்; அதில்
அலைபாயும் காற்று
இசையாவும் உந்தன் கால்கொலுசில்
விளையாடும் அழகே!!
 
கதைபேசும் கவிதையே
கைகோர்க்கும் தாரகையே
விலைபேசும் உன் கண்ணோடு
உரையாடல் நான் தொடங்க!
 
வார்த்தைகள் தடுமாறி
குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின!
எதைச் சொல்லி மறைப்பேன் – நான்
உன் சிரிப்பொலியில் வீழ்ந்ததை!
 
வயதானது கூட தெரியவில்லை
வருடங்கள நாட்களாய்ப் போனதடி!
தடுமாறி நான் எழுகையில்
கைத்தடியாய் உன் கரங்களடி!!

யூத சியோணிட்டுகளின் இரகசிய அறிக்கை (The Protocols Of The Elders Of Zion.pdf)  இலுமினாட்டி

ப்ரொடோகால்ஸ் (The Protocols of the Elders of Zion)

ரஷ்ய மொழியில் 1905லும் ஆங்கிலத்தில் 1920களிலும் வெளிவந்த இப்புத்தகம் தமிழில் நூறாண்டுகள் கழித்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரீமேஸன்கள் எனப்படும் இரகசிய சமூகத்தைப் பற்றி தமிழில் அரிதாக வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தில், யூதர்கள் "பிறப்பின் அடிப்படையில் உலகை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளது" எனும் மமதையால் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்த போதிலும் உலகை வெல்ல அவர்கள் தொலை நோக்கோடு போட்ட நீண்ட கால திட்டங்களை இப்புத்தகம் விவரிக்கிறது.

யூத சியோனிஸ்டுகளின் இரகசிய அறிக்கை எனும் இப்புத்தகத்தை ரஷ்ய மொழியில் வெளியிட்ட பாதிரியார் செர்கி நிலஸ்ஸும் ஆங்கிலத்தில் வெளியிட்ட விக்டரும் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டதும் பின் அக்கைதின் போது ஏற்பட்ட சித்ரவதைகளின் காரணத்தாலேயே இறப்புற்றதும் இப்புத்தகம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டதும் இப்புத்தகம் அணு குண்டைவிட வீரியமான விஷயங்களைத் தன்னகத்தே வைத்துள்ளது என்பதற்குச் சான்றுகள்.

இப்புத்தகம் முழுக்க இலுமினாட்டிகளின் இரகசிய கூட்டத்தில் பேசப்பட்ட தீர்மானங்களின் சாரமாக இருப்பதால் புரிவது சற்று கடினமாக இருந்தாலும் இதை மொழி பெயர்த்துள்ள ஆளூர் சலீம் தன்னால் முடிந்தவரை எளிமைப்படுத்தி தந்துள்ளார். இப்புத்தகத்தின் தொடக்கமே இலுமினாட்டிகள் உலகை யூதர்கள், யூதர்கள் அல்லாதவர்கள் என இரண்டாக பிரித்து பார்க்கும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கிறது.

தாங்கள் கனவு காணும் யூத அரசை உடனே நிறைவேற்றும் மனித வளம் இல்லாததால் அவ்விலக்கை நோக்கிய பயணத்தில் அவர்கள் தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. குறிப்பாக "கட்டற்ற சுதந்திரம்" எனும் பெயரில் மக்களைக் கட்டுப்பாடற்றவர்களாக உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி குறித்து பேசுகிறது. பொருளாதார நோக்கங்களுக்காகத்தான் போர்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையையும் வெட்ட வெளிச்சமாக்கப்படும் இப்புத்தகத்தில் உறுதியான அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஏற்படுத்தும் கம்யூனிசத்தை ஆதரிக்க வேண்டியது குறித்து பேசும் போது, "தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் கம்யூனிஸம்" என்று இதுகாறும் நினைத்திருந்தது பொய்யோ என்ற எண்ணம் எழுந்து அதிர வைக்கிறது.

மேலும் தற்போதுள்ள ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து சித்தாந்தங்களையும் உருவாக்கியதன் பின்னணியில் இலுமினாட்டிகள் இருப்பதைச் சுட்டிக் காட்டும் இப்புத்தகம், இவை உடைந்து நொறுங்கும்போது பலவீனப்படும் உள்ளங்களைச் சர்வதிகார ஆட்சிக்குத் தயார்படுத்தி இலக்கை அடைய முயற்சிக்கும் சதித்திட்டம் விவரிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறை கல்வி அமைப்பையும் ஊடகத்தையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வருதல் என்று கூறும் இப்புத்தகம், பிஞ்சு உள்ளங்களின் மனத்தில் வன்மத்தையும் சேர்த்து மனனம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மட்டுமே குழந்தைகளை உருவாக்கி, புதிய தலைமுறையின் சிந்தனை திறனை மழுங்கடிக்கும் நவீன கல்வி திட்டத்தின் அவலத்தைக் கண்களில் விவரித்து காட்டுகிறது.

தங்களுடைய அரசை அமைக்க வசதியாக தமக்கு எதிரான நாடுகளில் பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்துதல், பொம்மை அரசுகளை ஏற்படுத்துதல், அறிவியலின் பெயரால் மதத்தின்மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துதல், ஒழுக்க வீழ்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்தல், வளர்ச்சியின் பெயரால் நாட்டைச் சுரண்டுதல், தீவிரவாத பிரமையின் மூலமாக மக்களைப் பீதிக்குள்ளாக்குதல் என்று நாம் தற்சமயம் எதிர்கொள்ளும் விசயங்கள் அனைத்தும் நூற்றாண்டுகளுக்கு முன்னரே வெளியான இப்புத்தகத்தில் அட்சரம் பிசகாமல் வெளிவந்துள்ளது உலகை ஆட்கொள்ள மறைமுகமாக இயங்கிவரும் இலுமினாட்டிகளின் சக்தி எத்தகையது என்ற பீதியை அடிவயிற்றில் கிளப்புகிறது.

மேலும் இப்புத்தகம் இறுதியாக, யூதர்களின் சாம்ராஜ்யத்தை அமைத்தபின் மக்களை அடக்கியாள்வது குறித்தும் யூத அரசர் தேர்ந்தெடுக்கப்படும் விதம் குறித்தும் அவர் எத்தகையவராக இருக்க வேண்டும் என்று அவருக்காக வரையறுக்கப்படும் தகுதிகளும் ஒப்பீட்டளவில்  கொண்டுவருகிறது.
தற்போது தமிழில் வெளிவந்துள்ள இப்புத்தகத்தை மொழிபெயர்த்த ஆளூர் சலீம் மற்றும் வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தார் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள். இது தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல, இதில் சொல்லப்பட்டுள்ள சூழச்சிகளை முறியடிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியத்தையும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்பதில் இரு வேறு கருத்தில்லை.

செவ்வாய், 17 ஜூலை, 2018

"கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச்சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி” ரா.கிருஷ்ணமூர்த்தியாவார். அதுமட்டுமா? இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற மதக் கலவரங்களின் தீவிரத்தை நாம் பிறர் சொல்லக் கேட்டிருக்கலாமே தவிர பார்த்ததில்லை அல்லவா? “அலை ஓசை” எனும் நாவலைப் படித்தால் நாம் அதை அப்படியே உணரலாம். அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”, “பார்த்திபன் கனவு”, “அலை ஓசை”, இன்ன பிற நூல்கள் ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய சாகா வரம் பெற்ற அமர காவியங்களாகும். இவற்றையெல்லாம் படைத்த இந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும்கூட. இவரது அந்த முகத்தைச் சற்று இங்கே பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் மாயவரத்தை அடுத்த புத்தமங்கலம் எனும் கிராமத்தில் 1899இல் பிறந்தார் கிருஷ்ணமூர்த்தி. மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கச் சென்றார். 1920இல் நடந்த நாகபுரி காங்கிரஸ் தீர்மானத்தின்படி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும், கிருஷ்ணமூர்த்தியும் கல்லூரியை விட்டு வெளியேறினார். இவருக்கு மகாத்மா காந்தி, ராஜாஜி, டாக்டர் ராஜன் ஆகியோர் ஆதர்ச தலைவர்களாக விளங்கினர். 1922இல் முதன்முதல் ராஜத்துவேஷப் பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். வயதில் குறைந்தவர் என்பதற்காக இவரை எச்சரித்து விட்டுவிட நினைத்த நீதிபதியிடமே, இவர் தான் தெரிந்தே ராஜ துவேஷப் பேச்சு பேசுவதாக இவர் தெரிவித்ததும், ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.
திருச்சியில் அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைமையகம் இருந்தது, விடுதலையானதும் கிருஷ்ணமூர்த்தி அங்கு வேலையில் சேர்ந்தார். 1921இல் மகாத்மா காந்தி தமிழகம் வந்தபோது இவர் டாக்டர் ராஜனுடன் சேர்ந்து வரவேற்பு, கூட்டம் ஆகிய ஏற்பாடுகளில் ஈடுபட்டு, மகாத்மாவால் ‘அச்சா தேஷ் சேவக்” என்று பாராட்டப் பெற்றார். கரூரில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டத்தில் பேசிய பேச்சிற்காக கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் இருந்தபோது மதுரையைச் சேர்ந்த இளைஞர் சதாசிவம் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நட்பு வாழ்நாளெல்லாம் தொடர்ந்தது. “கல்கி” பத்திரிகை தோன்றவும் காரணமாக இருந்தது. இவரது முதல் நாவல் வ.ரா. ஆசிரியராக இருந்த நடத்திய “சுதந்திரன்” எனும் பத்திரிகையில் வெளிவந்தது.
பள்ளிக்கூடத்தில் படித்த நாட்களிலேயே ராஜாஜியைப் பற்றி தெரிந்து கொண்டு அவரிடம் பக்தி கொண்டார். திருச்சி காங்கிரஸ் அலுவலக வேலையைத் தொடர்ந்து, இவர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். டாக்டர் ராஜனின் வேண்டுகோளின்படி இவர் திரு வி.க.வைச் சந்தித்தார். அவர் நடத்தி வந்த “நவசக்தி” இதழில் வேலை செய்தார். மகாத்மா காந்தி “யங் இந்தியா”வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து “நவசக்தி”யில் வெளியிட்டார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான “விமோசனம்” எனும் மதுவிலக்குப் பிரச்சார இதழிலும் எழுதி வந்தார். 1930இல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவரது ஆரோக்கியம் கருதியும், ஏற்கனவே ஓராண்டு சிறையில் தவமிருந்ததாலும் ராஜாஜி இவரைத் தன் படையில் சேர்ந்துக் கொள்ளவில்லை. உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் கலந்து கொண்டு சிறை செல்லவில்லையாயினும், இவரது எழுத்துக்கள் ஆயிரமாயிரம் தொண்டர்களை உசுப்பி இந்தப் போரில் கலந்து கொள்ளத் தூண்டுதலாயிருந்தது என்பது உண்மை. இவர் எழுதி வெளியிட்ட துண்டு பிரசுரங்களுக்காக இவருக்கு மறுபடியும் ஒரு ஆறுமாத சிறை தண்டனை கிடைத்தது.
விடுதலையான பிறகு “ஆனந்த விகடனில்” தொடர்ந்து எழுதிவரலானார். அதில் இவர் எழுதிய “தியாக பூமி” நாவல் தமிழ்நாட்டை மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஓர் புதிய எழுச்சியையும், தேச பக்தியையும் தூண்டியது. அந்த காலகட்டத்தில் அந்த நாவலில் வந்த ‘சரோஜா’ எனும் குழந்தையின் பெயரைப் பலர் தங்கள் குழந்தைகளுக்கும் வைத்தனர் என்பது ஒரு சுவையான செய்தி. “ஆனந்த விகடனில்” ஒன்பது ஆண்டுகள் வேலை பார்த்த பின் “கல்கி” எனும் பெயரில், இவரும் சதாசிவமும் இணைந்து ஒரு புதிய பத்திரிகையை வெளியிட்டனர். அதில் வெளியான இவரது வரலாற்றுப் புதினங்கள், கட்டுரைகள், இசை விமரிசனங்கள், தலையங்கங்கள் ஆகியவை வரலாற்றுப் புகழ் மிக்கன. அவையெல்லாம் மீண்டும் நூல் வடிவம் பெற்று இப்போது விற்பனையாகின்றன. இப்போதும்கூட அவை படிப்பதர்கு சுவையும், சூடும் நிறைந்திருப்பதைக் காண முடியும்.
மகாகவி பாரதியாரின் பால் மிகவும் ஈடுபாடு கொண்டு, அவர் நினைவாக எட்டயபுரத்தில் ஓர் மணிமண்டபம் கட்டுவதர்கு முன்முயற்சி எடுத்து, கட்டி முடித்து அதனை கவர்னர் ஜெனரல் ராஜாஜியினால் திறந்து வைத்த சேவையைத் தமிழகம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும். இவருக்கு நாட்டு நன்மை என்பதுதான் தாரக மந்திரம் இதை அவர் பாணியில் கூறுவதென்றால், அவருக்கு இருந்த மூன்று நோக்கங்கள் முதலாவது தேச நன்மை, இரண்டாவது தேச நன்மை, மூன்றாவது தேச நன்மை.
இந்த வரலாற்று ஆசிரியர், சுவாரசியமான எழுத்தாளர், இசை ரசிகர், பாரதி அன்பர், தேச பக்தர், தமிழ் நாவல்களைப் படிக்கத் தூண்டிய அபூர்வமான கதாசிரியர் 1954ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார். தமிழ் நாட்டில் ஓர் சகாப்தம் நிறைவடைந்தது. வாழ்க கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி புகழ்!