World Soil Day: 5 December 2018
செவ்வாய், 4 டிசம்பர், 2018
உலக மண் தினம்! டிசம்பர் 5
World Soil Day: 5 December 2018
வியாழன், 15 நவம்பர், 2018
வகாபி அடிப்படைவாதம் என்ற அமெரிக்க கள்ளக் குழந்தை!
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். |
1998-ம் ஆண்டு ப்ரெசென்ஸ்கி அளித்த பேட்டி ஒன்றில் ஆப்கானில் நிலை கொண்டிருந்த சோவியத் படைகளுக்கு எதிராக முஜாஹித்தீன்கள் போரிட அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களில் ஒன்றுதான் வகாபி அடிப்படைவாதக் கோட்பாடு என்பதைக் குறிப்பிட்டிருந்தார். சொல்லப் போனால் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்து அமெரிக்காவுடன் பனிப்போரில் ஈடுபட்டிருந்த சோவியத் யூனியனை ஆப்கான் விவகாரத்தில் கால் வைக்க தூண்டில் போட்டதும், அதன்படி ஆப்கானில் நுழைந்த சோவியத் படைகளுக்கு எதிராக முஜாஹிதீன்களை தயாரிக்கும் திட்டமும் அமெரிக்காவால் மிக கவனமாக தீட்டப்பட்டதை ப்ரெசென்ஸ்கி ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அன்றைய பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக்குடன் இணைந்து சோவியத் எதிர்ப்புப் போராளிகளை இசுலாமியமயமாக்கும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தியது. இதற்காக முஜாஹிதீன் போராளிகளுக்கு பாகிஸ்தான் மதரஸாக்களில் மதக் கல்வி அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் திட்டம் வெற்றியடைந்தாலும், அதன் பின்விளைவாக ஆப்கான் என்கிற நாடே சீர்குலைந்து போனது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட வகாபி தத்துவங்களின் அடிப்படையில் அந்த நாட்டின் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்ட முஜாஹிதீன்கள், ஷரியா சட்டங்களை அமல்படுத்தி பெண்களின் உரிமைகளை நசுக்கி அழித்தனர்.
என்னதான் அமெரிக்காவின் கள்ளக் குழந்தையாகத் தோன்றியிருந்தாலும், தான் வளர்ந்த பிற்போக்கான நிலவுடைமைக் கலாச்சார சூழல் மற்றும் அதன் சித்தாந்தக் கண்ணோட்டம் வகாபியத்தை தன் போக்கில் வளர்த்துச் செல்லத் துவங்கியது. ஒரு கட்டத்தில் – அதாவது சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் – வகாபியத்தை அதற்கு மேலும் வழிநடத்த வேண்டிய தேவையில் இருந்து கை கழுவிக் கொண்டது அமெரிக்கா. தொடர்ந்த பத்தாண்டுகளில் சுயேச்சையாக வளர்ந்த வகாபியம் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள மேற்கத்திய லிபரல் கலாச்சாரத்திற்கு எதிரானக் கூறுகளை வரித்துக் கொண்டது. இதன் போக்கில், மேற்குலகை எதிர்க்கும் அரசியலுக்கு வந்து சேர்ந்தது. இதன் தொடர் விளைவு இரட்டை கோபுரத் தகர்ப்பாக அமெரிக்காவின் தலைமீதே விடிந்தது.
இரட்டை கோபுரத் தகர்ப்பை தனது உலக வல்லாதிக்கத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. செப்டெம்பர் 11 நிகழ்வைத் தொடர்ந்து எண்ணை வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள தானே உருவாக்கிய – தனக்கே எதிராக கிளம்பிய – அதே வகாபி பயங்கரவாதப் பூச்சாண்டியைப் பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ஈராக் ஆக்கிரமிப்பு, ஆப்கான் ஆக்கிரமிப்பு துவங்கி தற்போது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் வரை “இசுலாமிய பயங்கரவாதமே” அமெரிக்காவின் ஆதிக்கப் போர்களின் திரைக்கதையில் மிக முக்கிய பாத்திரமாற்றி வருகின்றது.
இந்தச் சூழல் மற்றும் பின்னணியில்தான் சவுதி இளவரசரின் பேட்டியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பக்கம் தனது தந்தையும், தற்போதைய மன்னருமான சல்மானை விட தன்னை லிபரலாக காட்டிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறார் இளவரசர் முகமது. அதே சமயம், சவுதியின் வெளியுறவுக் கொள்கையை கடந்த நான்கு பத்தாண்டுகளாக தீர்மானித்துக் கொண்டிருக்கும் வகாபி அடிப்படைவாதம் என்கிற வேண்டாத சுமையையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் லிபரலாக தன்னைக் காட்டிக் கொண்டாலும், இவர் அப்பனுக்குத் தப்பாத சர்வாதிகாரி என்பதை கஸோகி கொலை விவகாரம் அம்பலப்படுத்திக் காட்டியது.
எனவே லிபரல் சர்வாதிகாரியாக உருவாகி வரும் முகமது பின் சல்மான், வகாபி பாவத்தில் தங்களுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் பங்கு இருப்பதைக் குறித்து பேசுவதன் மூலம் மேற்குலகிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதாவது, கசோகி கொலை உள்ளிட்ட தனது சர்வாதிகார நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டால், ”நாகரீக” மேற்குலகின் அழுக்குகளும் வெளியாகாமல் இருக்கும் என்பதே அது.
புதன், 14 நவம்பர், 2018
அரசு, அரசியல், அரசாங்கம், நீதிமன்றம், உரிமைகளற்ற மக்கள்!
ஆனால் தற்போதைய உலக ஒழுங்குமுறையின் நலன்சார் அரசியலும், மாற்றங்களையும் கொஞ்சம் உய்த்தறிய வேண்டும். பத்து வருடங்களாக என் வலைதளத்தில் பதியப்பட்ட கட்டுரைகளும், பகிர்வுகளும் மாற்றுச்சிந்தனைகான பார்வைகளையும், பாதைகளையுமே வலியுறுத்துகின்றது!
முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இலங்கையின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது. வாருங்கள், இணைந்து செயல்படுவோம்!
சாராம்சமாக சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம். மேல்நிலை வல்லரசுகளின் வெளிப்படையான தலையீடுகள் ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே, இலங்கை அரசும் அதன் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களும் மாற்றப்பட்டுள்ளன.
மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளிலும் சர்வதேச நிதிமூலதன கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசை, கட்டுப்படுத்துகின்றன, ஆட்டுவிக்கின்றன.
மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டு தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல்தான் நம் நாட்டிலும். இவைகளின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.
அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இலங்கையில் நிலவுகின்ற அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டி குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக சுயேச்சையாக தனியார்மய தாராளமய கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாய உரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய தேச வரலாற்றை பின்னோக்கினால் இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும் பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கிய திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் வருடங்களுக்குள் மீண்டும் கட்சி தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.
மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்படிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மய சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் என்பது, ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப்பருவத்தில் அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களை பொறுக்கித் தின்னவும் சலுகைகள் கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக மேல்நிலை வல்லரசுகள் அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாக கையாண்டு வரும் நிலைமையில் ஜனநாயகமும் தேர்தலும் வெட்டி சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில் இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.
‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள் நாடாளுமன்ற அராகஜம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் ‘நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி விட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர் நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும், கிரிக்கெட் திரைப்படம்செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை இலட்சியங்களோ அற்ற நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் பகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின்மீதே அருவெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்து விட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலைபேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.
“நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது?” என்று நொந்து கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.
செவ்வாய், 13 நவம்பர், 2018
யார் அந்த ஏழு பேர் ? நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.
மனிதத்தின் எல்லையை
ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வலிமையை
எளியவர்களின் அரசியல் புரிதலை
“தீ மூட்டிக் கொண்டு சொன்ன வரலாறு”
அடுத்தவர்க்காய் கண்ணீர் சிந்துதல் அறம்
அடுத்தவர்க்காய் உயிர் மாய்த்தல் ..பேரறம்…
அவள் வாழ்ந்திருக்க வேண்டும்…
ஆனால் தேதி குறிக்கப்பட்ட ஏழு தமிழரின் சாவு தடுக்க வழியறியாதவளாய்…
அப்பாவி தமிழர்களின் தாயாக மாறி
அவர்களுக்காய் தீ மூட்டிக் கொண்டாள்..
இருபது வயதில் செங்கொடி அம்பேத்கரைப் படித்திருந்தாள்
பெரியாரைப் படித்திருந்தாள்
மார்க்ஸை படித்திருந்தாள்
சே வை படித்திருந்தாள்
பிரபாகரனை படித்திருந்தாள்
அவள் அரசியல் படுத்தப்பட்டிருந்தாள்…எந்த ஏழு பேர் என்று கேட்ட உனது கேள்வி..
அவளின் தியாகத்தை கொச்சைப்படுத்தவில்லை.. உனது அரசியல் போதாமையை
அரைவேக்காட்டுத் தனத்தை அம்பலப்படுத்தி விட்டது… நேரமிருந்தால் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்திற்கு வந்து விட்டு போ ரஜினி..உன்னை விட பல மடங்கு அரசியல் தெளிவும் முதிர்ச்சியும் பெற்ற எனது தங்கை அங்கே உறங்கிக் கொண்டிருக்கிறாள்..
வா அவளின் நினைவிடம் வந்து நின்று விட்டு போ…தெளிவு பெறுவாய்…..
தமிழர்களின் வாழ்வும், உணர்வும், விடுதலையும் தெரியாத உங்களை தமிழர்கள் நாங்கள்; “யார் நீ” என்றே மீண்டும் மீண்டும் கேட்போம்.
தமிழகத்தை ரட்சிக்க வந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.
ஏழு பேரின் விடுதலை பற்றிக்கேட்டால் ”எந்த ஏழு பேர்?’’ என்று கேட்கிறார் ரஜினி காந்த். அதில் இருக்கும் அலட்சியமும் அறியாமையும் மலிவானது. பரிதாபத்திற்குரியது. இந்த அறியாமைமிக்க அகம்பாவம்தான் தூத்துக்குடி துப்பாகிச் சூடு பற்றிய பேச்சிலும் இருந்தது இப்படிக் கேட்பதில் ரஜினிக்கு எந்தக் கூச்சமும் இல்லை. 25 வருடங்களாக இடையறாது ஒட்டு மொத்த தமிழகமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை என்ன பிரச்சினை என வேற்றுக்கிரக வாசிபோல ரஜினி கேட்கிறார்.
ரஜினியின் முதலமைச்சர் போட்டியாளரான கமல் போன வருடம் நீட் பிரச்சினையில் தமிழகம் பற்றி எரிந்தபோது “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு நீட்”டின் கொடுமை புரியவில்லை’’ என்று கூலாக கூறினார்.
இவர்களுக்கெல்லாம் முன்னோடி விஜய காந்த். 2014-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜய காந்த் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பியபோது “தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா… என்னமாதிரியான பிரச்சினைகளை பேசுவீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் சொன்ன விஜயகாந்த், ’’நான் இப்போதுதான் சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன்… இங்கே என்ன பிரச்சினை நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக நான் தமிழ் பேப்பர் படிக்கவில்லை. தமிழ் டிவி சேனல்களும் பார்க்கவில்லை. வீட்டிற்கு போய் டிவி பார்த்துவிட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன் ’’ என்றார்.
இவர்களுக்கெல்லாம் மூத்த நடிகரான அரசியல் தலைவர் ஒருவர் இருந்தார். எம்.ஜி.ஆர். அவரது அரசியல் உரைகளை யாராவது தேடி எடுத்து படித்துப்பாருங்கள். தலை சுற்றும். அவரது அண்ணாயிஸத்தை கட்டுடைக்க முடியாமல் தமிழ்கூறும் நல்லுலகே திகைத்து நின்றது. நல்லவேளை அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை.. இருந்தால் முதன்மையான மீம்ஸ் கதாநாயகனாக எம்.ஜி.ஆரே இருந்திருப்பார்
இந்த அலைவரிசையில்தான் விஜய்யின் சர்காரில் வெளிப்பட்ட இலவசங்களுக்கு எதிரான பேத்தல்கள். நடிகர்கள் நாடாள வந்தால், வர விரும்பினால் என்ன நடக்கும் என்பதற்கு இதெல்லாம் ரத்தம் கக்கவைக்கும் உதாரணங்கள்.
தூக்குமர நிழலில் நின்றவர்களை மீட்டு சிறையில் நிழலில் நிற்க வைத்தது வரை ஒரு சமூகத்தின் பயணம் இதில் இருக்கிறது.
அற்புதம்மாள் என்ற பெண்ணின் உழைப்பும் அலைச்சலுமே, இந்தியாவில் மரண தண்டனை தொடர்பான விவாதத்தை கூர்மையாக்கியது. சதா நேரமும் தண்டனைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் ஒரு தண்டனையின் தீவரத்தை, வன்மத்தை, அதன் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக குலைத்துப் போட்டவர் அற்புதம்மாள்.
அது இந்தியாவில் பல நூறு மரணதண்டனை கைதிகளின் விடுதலைக்கு வழி வகுத்தது. எங்கள் சூப்பர் ஸ்டார் அற்புதம்மாள்தான். காரணம் கோடிகளில் பணம் பெறாமல் தனியொரு மனுஷியாக தமிழ் சமூகத்தில் நின்று சாதித்துக் காட்டியவர் அவர்.
உங்களுக்கு தெரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை ரஜினி. இதே குணத்தோடு இப்போதேனும் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் அவ்வளவே!
————-
காந்தியைச் சுட்ட நாலாவது குண்டு யாருடையது?
நாலாவது குண்டு யாருடையது?
மகாத்மா காந்தியை கோட்சேவைத் தவிர வேறு யாரும் சுடவில்லை என்று நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரன் விளக்கம் அளித்துள்ளார்.
தேசப்பிதா காந்திஜி கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்குக் கடந்த 1949 நவ.15ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றச்சாட்டு நிரூபணமாகாததால் சந்தேகத்தின் அடிப்படையில் சாவர்கர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் , காந்தியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் 3 குண்டுகள் கோட்சோவால் சுடப்பட்டது என்றும், 4வது குண்டு யாருடையது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நான்காவது குண்டுதான் காந்தி உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. இதில் வெளிநாட்டுச் சதி அடங்கியுள்ளது. இது குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் படித்து இந்த மனு மீதான விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் அம்ரேந்தர் ஷரனை நியமித்தது.
அவர் ஆவணங்கள் முழுவதையும் படித்து, இன்று (ஜனவரி 8) உச்ச நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில், மர்ம நபர் சுட்ட 4வது குண்டுதான் காந்தியின் உயிரைப் பறிக்கக் காரணம் என்று வீர் சாவர்கரின் தொண்டர் என்று தன்னைத் தானேக் கூறிக் கொள்பவரும், அபினவ் பாரத் நிறுவனருமான பங்கஜ் பட்னிஸ் கூறுவது போல, காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்தது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.
1948ம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சுமார் நான்கு ஆயிரம் பக்கங்களையும் ஆய்வு செய்த அம்ரேந்தர் ஷரன் தலைமையிலான குழுவினர், இந்தக் கொலையில் வெளிநாட்டுத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் அக்குழு உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.
பேரழிவை உண்டாக்க காத்திருக்கும் Disease X
Disease X இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தான் இதை பற்றி உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இவை இதுவரை கண்டுபிடிக்க படாத ஒன்று ஆனால் தாக்குவதற்கான அபாயம் அதிகம் உள்ள ஒரு பரவும் நோயாகும். இதுவரை உலகில் பல உயிர் சேதங்களை உண்டாக்கிய நோய்கள் அனைத்தும் விலங்குகளிடம் இருந்து தான் மனிதனுக்கு பரவியது. முன்பெல்லாம் இவை இயற்கையாக உருவாகின என்று தான் அனைவரும் நம்பினோம். ஆனால் வியாபாரமாகிப்போன மருத்துவமே இதற்கு காரணமாக இருக்குமோ என்று நம்மை நினைக்க வைக்கிறது. இன்னும் சொல்ல போனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை காட்டிலும் தங்களின் பொருட்களை விற்க நோயாளிகளை உருவாக்குகின்றனர். இது மறுக்க முடியாத உண்மை. அனைத்தும் வியாபாரமாகிப்போன இந்த காலகட்டத்தில் நோய்களையும் நோயாளிகளையும் உருவாக்குவதன் மூலம் மேலும் சம்பாரிக்க இயலும். இது தான் கசப்பான உண்மை. இங்கு நோய்கள் தானாக உருவாகவில்லை. அவை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. சரி வாருங்கள் இந்த Disease X பற்றி என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். இந்த Disease X பெரிய அளவில் பரவும் நோய் மேலும் அதிக அளவு உயிர்சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது. Spanish flu போன்று எளிதில் பரவும் தன்மை கொண்டது. மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இதை பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரமாக உள்ளன. இந்த ஆராய்ச்சிகளில் புதிய வைரஸ் Myanmarese வௌவ்வால்களில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இவை corona வைரஸ் குடும்பத்தை சார்ந்தவை. இந்த குடும்பத்தை சேர்ந்த வைரஸ்கள் தான் ஏற்கனவே பெரும் உயிர்சேதத்தை உண்டு செய்தது. ஒன்று சார்ஸ் வைரஸ் இது எளிதில் பரவும் தன்மை கொண்டது. இன்னொன்று மெர்ஸ் வைரஸ். 35% உயிர் சேதத்தை உண்டு பண்ணும் திறன் கொண்டது.
Disease X - மனித குலத்தின் மாபெரும் அச்சுறுத்தல்
28,000 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட சிலை ( கல்ப விக்ரஹம் )
கல்ப விக்ரஹமும் மர்மங்களும் |
புதன், 31 அக்டோபர், 2018
கப்பல் படையும் தமிழர்களும்
காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும், கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும், அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.
தமிழா் - மியான்மர்.
சபா சந்தகன் - மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கர ை,ஒட்டன்கரை, ஊரு - ஆஸ்திரேலியா
கடாலன் - ஸ்பெயின்
நான்மாடல் குமரி - பசிபிக் கடல்
சோழா,தமிழி - மெக்ஸிகோ
திங்வெளிர் - ஐஸ்லாந்து
கோமுட்டி - ஆப்பிரிக்கா.
வெள்ளி, 26 அக்டோபர், 2018
போரா, சமாதானமா—உங்களை எப்படி பாதிக்கிறது
சனி, 22 செப்டம்பர், 2018
ஆஸ்கார் போட்டிக்கு “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்” சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு
வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் என்ற அசாம் திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்காரில் போட்டியிடும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தரமான படங்களை தயாரிப்பதில் இந்திய சினிமா எப்போதும் தவறியதில்லை. அப்படி ரிமா தாஸ் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். அசாமில் உள்ள கிராமத்தில் இருக்கும் சிறுமி தனது ஏழ்மையிலும் எலக்ட்ரிக் கிட்டார் வாங்க வேண்டும் என்ற கனவினை எட்டிய கதையை மிகவும் எளிமையாக கூறியிருப்பார். இந்த படம் அனைவரையும் கவர்ந்திருந்ததோடு கடந்த ஆண்டுக்கான சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றிருந்தது.
2019 ஆஸ்காரில் “சிறந்த வெளிநாட்டு படம்” பிரிவில் போட்டியிட ஒரு இந்திய படத்தினை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களான ஆலியா பட் நடித்த ரசி, தீபிகா படுகோன் நடிப்பில் சக்கைப்போடு போட்ட பத்மாவதி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி போன்ற படங்கள் இந்த ஒரு இடத்திற்காக போட்டி போட்டன.
இந்நிலையில் இன்று காலை பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ரிமா தாஸின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை இந்தியாவின் சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்படும் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தின் இயக்குனர் ரிமா தாஸ், இந்த திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானது தன்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. அளவுகடந்த ஆனந்தத்தோடும் . பெருமையோடும் இந்த செய்தியை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வானதை தொடர்ந்து திரைப்பட பிரபலங்களும் , இந்திய சினிமா ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர். இது ஆஸ்கார் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் அஸ்ஸாமீஸ் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் நிச்சயம் ஆஸ்காரில் விருதை கைப்பற்றும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ரிமா தாஸ் உருவாக்கிய திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என அனைத்துமே இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கார் விருதைப் பெறவில்லை என்பது நினைவுக்கூறத்தக்கது.
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது |
மதுரையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தென்னந்தோப்புகள் சூழ்ந்த கிராமம்தான் கீழடி. அந்தத் தென்னந்தோப்புகளுக்கு நடுவில், சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் புதைந்து கிடக்கிறது தமிழினத்தின் தொன்மையை அழுத்தமாகச் சொல்லும் வரலாற்றுக் கருவூலம். அதில் ஒரு சிறிது மட்டுமே தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு ஏக்கர் நிலப்பகுதியைத் தோண்டியதிலேயே.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் அள்ளி எடுக்கப்பட்டுள்ளன. அவை அத்தனையும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்றைக் காட்டும் சான்றுகளாக இருக்கின்றன.சங்க இலக்கியங்களில் நாம் படித்துச் சுவைத்த, மனக்கண்ணில் ஓடவிட்டுப் பெருமிதப்பட்ட காட்சிகளை எல்லாம் கீழடி நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பட்டினப்பாலை சொன்ன ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற வரிக்கு. கீழடியில் தோண்டிஎடுக்கப்பட்ட உறை கிணறு உயிர் கொடுத்திருக்கிறது. இப்பூமிப்பந்தின் பல பகுதிகளிலும், மக்கள் இலைதழைகளையும், விலங்குகளின் தோல்களையும் உடலுக்குச் சுற்றித் திரிந்தபோது, இங்கே தமிழர்கள், நெசவுத் தொழிலை அறிந்தவர்களாக, நெய்த ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றத் தெரிந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? கீழடியில் கிடைத்துள்ள ‘தக்ளி’ என்னும் கருவியும், இன்ன பிற பொருள்களும், கட்டிடங்களின் அமைப்புகளும், நம்பித்தான் தீர வேண்டும் என்கின்றன.
சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், கருப்பு சிவப்பு என இரு வண்ணங்களால் ஆன மண்பாண்டங்கள், சூது பவளங்கள் என ஆயிரக்கணக்கில் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இதற்கு முன்பும் இவை போன்ற பல புதைபொருள்கள், ஆதிச்சநல்லூர், கொடுமணல், அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. என்றாலும் கீழடிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. முதன் முதலாகத் தமிழர்களின் சங்ககால நகரம் ஒன்று இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்தது, இனக்குழு நாகரிகம்தான் என்ற கருத்துத் திணிக்கப்பட்டு வரும் நிலையில், இல்லை, இல்லை. தமிழினம் தனித்துவம் மிக்கதொரு தேசிய இனம் என்பதை, வரலாற்றுப் புரட்டர்களின் செவிப்பறையில் அறைந்து சொல்கிறது கீழடி. அதனால்தான் அகண்ட பாரதக் கனவில் இருக்கும், பா.ஜ.க. அரசு கீழடியைக்கண்டு அஞ்சுகிறது. ஆய்வைத் தொடரத் தயங்குகிறது.
இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேதக் கலாச்சாரமே இந்தியாவின் கலாச்சாரம் என்றும் கட்டியமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,கூட்டத்தின் அடிமடியிலேயே கை வைப்பதாக இருக்கிறது கீழடி அகழ்வாய்வு சொல்லும் மற்றொரு செய்தி. இதுவரை கீழடியில் கிடைத்துள்ள பொருள்களை ஆய்வு செய்து பார்த்த வகையில், மதம் தொடர்பான சிறு அடையாளம் கூட காணப்படவில்லை. தமிழர்களின் வரலாறு. முன்னோர் வழிபாட்டையும், நடுகல் வழிபாட்டையும் மரபாகக் கொண்டதே தவிர, பெருந்தெய்வ வழிபாடு அதற்குத் தொடர்பில்லாதது என்பதைக் காட்டும் கீழடி, மத அரசியலையும், மாட்டு அரசியலையும் மட்டுமே நம்பியிருக்கும் கூட்டத்திற்குப் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இதேபோல் இன்னொன்றையும் கீழடி உணர்த்தி நிற்கிறது.
மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரு தேசிய இனத்தின் மொழி மட்டும் சார்புடையதாகவா இருக்கும்? தமிழ் ஒரு சமயச் சார்பற்ற மொழி என மொழியியல் அறிஞர் கால்டுவெல் எடுத்துரைத்ததை மெய்ப்பிக்கின்றன கீழடி ஆய்வுகள். செத்த மொழியான சமஸ்கிருதமே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தோற்றுவாய் என சற்றும் கூசாமல் சொல்லி, மொழி வரலாற்றையும் திரித்துக் கூறுவோரின் உச்சத்தலையில் குட்டி, தேவபாஷையான சமஸ்கிருதத்திற்கும், சமயச் சார்பற்ற தமிழினத்தின் தாய்மொழிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறது கீழடி.
2015, 2016ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற கீழடி ஆய்வை, இடைக்கால அறிக்கை தயாரிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு உதவாத காரணத்தைச் சொல்லி, பாதியிலேயே நிறுத்தியது பா.ஜ.க., அரசு. தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்கள் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தொல்லியில் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.கீழடியிலேயே அவற்றைப் பாதுகாத்து ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, வரலாற்று அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால் என்ன கொடுமை தெரியுமா? தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அமைச்சர்களோ, மாவட்ட ஆட்சித் தலைவரோ வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
குஜராத்திலும் பத்து ஆண்டுகளாகத் தொல் பொருள் ஆய்வு நடந்து வருகிறது.அங்கு புதிய சான்றுகள் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. இருந்தும் அங்கு ஆய்வுகளைத் தொடர இந்த ஆண்டும் நிதி ஒதுக்கியதோடு, பா.ஜ.க.,வின் பாரதப் பிரதமர் மோடி நேரில் சென்று அதைத் தொடங்கியும் வைத்துள்ளார். அதேநேரம் புது வரலாறு படைக்கத்தக்க சான்றுகளை அள்ளித் தருகின்ற கீழடி புறக்கணிக்கப்படுவதை ஏன் என்று கேட்க வக்கற்ற அரசாக, அதிமுக அரசு இருப்பதால், தமிழர்களின் வரலாற்றுக் கருவூலத்தை மண்ணைப் போட்டு மூடத் துணிந்திருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு.
பிள்ளையாருக்கு யானைத் தலைமை ஒட்ட வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை என அறிவியல் அறிஞர்கள் குழுமியிருந்த அவையில், சற்றும் கூச்சமின்றி சொன்னவர்தான், பாரதப்பிரதமர் மோடி. என்ன செய்வது அவர்களின் வரலாற்று எல்லை அவ்வளவுதான். புராணங்களோடு நின்று போனவை. ஆனால் தமிழர்கள்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவியலோடு இயைந்த நாகரிக வாழ்க்கையைக் கொண்டவர்கள்.
வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் அதற்கு முன் தெற்கு வாழ்ந்திருக்கிறது.மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறது. என்பதை உலகிற்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லும் தொல்பொருள் ஆய்விடம் கீழடி. ‘தங்கள் இனத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் தமிழக மக்களுக்கு, கீழடி ஆய்வை மத்திய அரசு பாதியில் நிறுத்தியது ஏமாற்றத்தையும், வேதனையையும் தருவதாக உள்ளது என ஒட்டுமொத்த தமிழகத்தின் உள்ளக்கிடக்கையை, மத்தியக் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்குக் கடிதத்தின் வழி வெளிப்படுத்தினார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இப்போது கீழடியில் ஆய்வைத் தொடர்வதற்கான நிதியை ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அறிவிப்பு வந்திருக்கிறதே ஒழிய இன்னும் ஆய்வுகள் தொடங்கப்படவில்லை..இதுவரை ஆய்வினை முன்னின்று நடத்திய அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமித்து, தன் ‘ராஜதந்திரத்தைக் காட்டியிருக்கிறது பா.ஜ.க. அரசு.
சிந்துவெளியில் கிடைத்த, காளைமாட்டின் குறியீட்டையே குதிரையாக்கி, சிந்து வெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லி, இல்லாத சரஸ்வதி ஆற்றைத் தேட 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள ஆரிய மாயையின் ஆட்டம், கீழடியில் நடக்காது. நடக்கவும் விட மாட்டோம் என்பதில், தமிழக வரலாற்று அறிஞர்கள் உறுதியுடன் உள்ளனர். மீண்டும் கீழடியில் அகழ்வாய்வுகள் உடனடியாகத் தொடங்கப்பட, மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர தொடர் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.