திங்கள், 6 ஆகஸ்ட், 2018

பூமியின் புதிய யுகத்தில் நாம்!


பூமியின் கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியல் நிபுணர்கள்.
Welcome to the 'Meghalayan Age', A New Phase in Earth's History
அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நாகரிகங்கள் அழிந்துபோன இந்தக் காலகட்டத்துக்கு ‘மேகாலயன் யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் வளரும் புற்றுப்பாறைகளின் அடிப்படையில் இந்த யுகத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காலவரிசை அடிப்படையிலான சர்வதேச பாறைப்படிவியல் விளக்கப்படமும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் புவியியல் வரலாற்றை காலவரிசைப்படி அந்தப் புகழ்பெற்ற விளக்கப்படம் பட்டியலிடுகிறது.

ஆனால் இந்த யுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வுக் கட்டுரையில் ‘மேகாலயன் யுகம்’ பற்றி விவரிக்கப்பட்டிருந்தாலும், இதுகுறித்து போதிய விவாதங்கள் நடத்தப்படவில்லை என்பது சில அறிவியலாளர்களின் கருத்து.

சுமார் 4.6 கோடி ஆண்டுகள் நீளும் பூமியின் வரலாற்றை காலத் தொகுதிகளாக விஞ்ஞானிகள் பகுத்துள்ளனர். ஒவ்வொரு பகுப்பும், கண்டங்கள் பிரிந்தது, காலநிலையில் பெரும் மாற்றங்கள் உண்டானது, புதிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்கள் உருவானது என ஒவ்வொரு முக்கிய அறிவியல் நிகழ்வுடன் தொடர்பு உடையது.

நாம் தற்போது இருப்பது ஹோலோசீன் சகாப்தத்தில். ‘பனி யுகம்’ முடிந்து வெப்பம் பரவத் தொடங்கிய கடைசி 11,700 ஆண்டுகளின் புவியியல் வரலாற்றை உள்ளடக்கியது இந்த யுகம். இந்த ஹோலோசீன் சகாப்தத்தையும் பல கட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது புவியியல் அடிப்படையிலான காலங்களை வரையறுக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான சர்வதேச பாறைப்படிவியல் ஆணையம். ஹோலோசீன் சகாப்தத்தையும் ஆரம்ப, மத்திய மற்றும் இறுதிக் காலகட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது இந்த அமைப்பு. இந்தக் காலகட்டங்கள் முக்கிய பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. இவற்றில் மிகவும் சமீபத்தியதான மேகாலயன் யுகம் தற்போதுள்ள காலத்துக்கு 4,200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. அப்போது சுமார் 200 ஆண்டுகள் நீடித்த மிகவும் மோசமான வறட்சி எகிப்து, கிரேக்கம், சிரியா, பாலஸ்தீனம், மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் யாங்சி நதிப் பள்ளத்தாக்கு நாகரிகம் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.

பெருங்கடல் நீரோட்டத்தின் திசை மற்றும் வளிமண்டலத்தின் காற்று வீசும் திசையில் உண்டான மாற்றங்களால் இந்த வறட்சி உண்டாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதை ஒட்டி பண்பாட்டு வழக்கங்கள் உண்டான காலகட்டத்துடன் ஒத்திசைந்து இருப்பதால் மேகாலயன் யுகத்துக்கு என்று ஒரு தனித்துவம் இருப்பதாக லாங் பீச் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டான்லி பின்னி கூறுகிறார். சர்வதேச புவிசார் அறிவியல் அமைப்பின் பொதுச்செயலாளராக அவர் உள்ளார்.
ஹோலோசீன் சகாப்தத்தின் மத்தியப் பகுதியான ‘நார்த்கிரிப்பியன் யுகம்’, மேகாலயன் யுகம் தொடங்குவதற்கு முந்தைய 8,300 ஆண்டுகளை உள்ளடக்கியது. உருகிய பனியால் கடல் மட்டம் அதிகரித்து, பெருங்கடலின் நீரோட்டத்தின் திசை இந்தக் காலகட்டத்தில் மாற்றங்களைச் சந்தித்தது.

ஹோலோசீன் சகாப்தத்தின் மிகவும் பழைய காலகட்டமான ‘கிரீன்லேண்டியன் யுகம்’ பனியுகம் முடிவுக்கு வந்தபின் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை விஞ்ஞானிகள் தனி யுகமாகக் கருத வேண்டுமென்றால் அக்காலகட்டத்தில் பூமி முழுவதற்கும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் பாறை அல்லது வண்டல் மண்ணுடன் தொடர்பு உடையதாக இருக்க வேண்டும்.
6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரிட்டேசிய காலத்திலிருந்து பேலியோஜீன் காலத்துக்கு மாற்றம் நிகழ்ந்தபோது இரிடியம் படிமங்கள் பூமி முழுதும் பரவி இருந்தன. டைனோசர்கள் இந்தப் பூமியில் இருந்து அழியக் காரணமான விண்கல் மோதலால், அதிலிருந்த இரிடியம் பூமி முழுதும் பரவியது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள மாம்லு குகையில் வளர்ந்துள்ள புற்றுப்பாறைகளில் உள்ள ஆக்சிஜன் அணுக்கள் அல்லது அதன் ஐசோடோப்புகளில் கண்டறியப்பட்டுள்ள குவியலில் இந்த மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்த மாற்றம் நிகழ்ந்த சமயத்தில் மழைப் பொழிவு குறைந்துள்ளது. அந்த மாற்றம் நிகழ்ந்தபோது பருவ மழை பொழிவது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது என வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக் வாக்கர் கூறுகிறார்.

‘‘மிகவும் முக்கியமான இரண்டு புவிசார் மாற்றங்கள் 4100 மற்றும் 4300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தன. எனவே இரண்டுக்கும் சராசரியாக 4200 ஆண்டுகளுக்கு முன்பு மேகாலய யுகத்தின் தொடக்கத்தை நிர்ணயித்தோம்’’ என்கிறார் அவர். இந்தக் காலகட்டத்தை தனி யுகமாக்க முன்மொழிந்த ஹோலோசீன் அறிவியலாளர்கள் குழுவுக்கு மைக் வாக்கர் தலைமை வகித்தார்.
யுகம் யுகமாய் பூமி எவ்வளவு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது!