செவ்வாய், 4 டிசம்பர், 2018

உலக மண் தினம்! டிசம்பர் 5


உலகளாவிய ரீதியில் மண்ணின் மகத்துவத்தினை அறியும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியான உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
World Soil Day: 5 December 2018

பாறைகள் சிதைவடைவதன் விளைவால் உருவாகின்ற நுண்ணிய துகள்கள் மண் எனப்படுகின்றது. மண் உருவாக்கத்தில் பிரதானமாக இரு படி முறைகள் காணப்படுகின்றன. மூலப்பாறைகள் வானிலையால் அழிதல் காரணமாக உடைவடைந்து துகள்களாக மாற்றமடைகின்றன. மேலும் நீர் வாயுக்கள், உயிர்வாழ் அங்கிகள், சிதைவடைந்த சேதன பொருட்களின் சேர்வைகள் இவ்வாறான பல காரணிகளின் செயன்முறையினால் மண் உருவாக்கப்பட்டு விருத்தியடைகிறது.

ஒரு பிரதேசத்தின் மண்ணின் அமைப்பு தன்மை முதலியவற்றைக் கொண்டே தான் அப்பிரதேச விவசாய நடவடிக்கைகள் இடம்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு விவசாயம் முதுகெலும்பு. அந்த விவசாயத்துக்கு முதுகெலும்பாக திகழ்வது மண். உலகில் ஜீவ ராசிகளின் வாழ்க்கைக்குப் புகலிடமாகவும் இருக்கிறது. மண்ணை உயிரற்ற பொருள் என கருது கிறோம். அது தவறு என்கின்றனர் விவசாய வல்லுநர்கள்.

“மண்ணுக்கும் உயிர் உள்ளது. சுவை, நிறம், மணம் உள்ளது. மழை பெய்தால் மணம் வீசும், கையில் எடுத்தால் மற்றொரு மணம் வீசும். நிறத்தின் அடிப்படையில் செம்மண், கரிசல், வண்டல் என மண்ணில் பலவகைகள் உள்ளன. பூமியில் 2.5 செமீ அளவு மண்ணை உருவாக்க இயற்கை 10 ஆயிரம் ஆண்டுகள் நெடிய போராட்டம் நடத்த வேண்டும்” என்கின்றனர். இவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும் மண்ணை, மனிதன் எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும். இந்த மண் வளத்தைப் பாதுகாக்கவும், உறுதி செய்யவும் இதனை விவசாயிகள், மக்களுக்கு நினைவுப்படுத்தவும் ஆண்டு தோறும் டிசம்பர் 5-ம் தேதி உலக மண்வள தினமாக கடைபிடிக்கப் படுகிறது.

மண்ணினால் மனிதர்களுக்கு ஏற்பட்டு வரும் நன்மைகளும் சாதகங்களும் எண்ணற்றவை, ஆனால் மனிதனது சில செயற்பாடுகளால் மண் இன்னமும் அழிவடைந்து செல்கின்றமை இடம்பெற்ற வண்ணமேயுள்ளது என்பது உண்மையான கருத்தாகவே காணப்படுகிறது.


இயற்கையான மண்ணில் பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற கனிம சத்துக்கள் உள்ளன. இன்றைய நிலையில் பெரும்பாலான நிலங்கள் சத்துக்களை இழந்து, நச்சுகளால் விவசாயம் முடங்கியுள்ளது. வேளாண் அதிகாரிகள், இழந்த சத்துக்களை மீண்டும் மண்ணில் சேர்க்க பல்வேறு வழி முறைகளை சொல்லிவருகின்றனர். மண்ணில் இருக்கும் வளத்தை அதிகரித்து, பாதுகாக்க வேண்டும் என்பதையே மண்வள தினம் உணர்த்துகிறது. மண்ணில் சத்துக்கள் குறைந்துவிட்டதால், மழை நீர் நேரடியாக மண்ணுக்குள் இறங்காமல் வழிந்தோடுகிறது.இதனால், மண்ணின் அனைத்து சத்துகளும் பறிபோய், மலட்டுத்தன்மையை பெற்று வருகிறது. இந்நிலை வராமல் இருக்க விவசாயிகள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். மண்ணில் உள்ள நுண்ணுாட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக மண்ணில், 16 வகை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. இவற்றை பாதுகாப்பதே மண் தினம் கொண்டாடுவதன் நோக்கம்.

‘மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம்தான் உணர மறுக்கிறது’ என்ற பாடல் நம்மை தாங்கி நிற்கும் மண்ணின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தின் ஆதாரமாக விளங்கும் மண்ணின் முக்கியத்துவம், அதன் வளம், மனிதனின் வாழ்வில் மண்ணின் பங்கு, மண் இன்றி மனிதன் இல்லை ஆகியவை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

மண்ணில் 25 சதவீதம் காற்று, 25 சதவீதம் நீர், 45 சதவீதம் உலோகப் பொருட்கள், 5 சதவீத அங்ககப் பொருள்கள் அடங்கியுள்ளன. மேல் பரப்பில் சுமார் 2.5 செ.மீ. ஆழத்தில் காணப்படும் டாப் சாயில் உருவாக சுமார் ஆயிரம் ஆண்டுகளாகும். மேல்மண் மிகவும் வளம் வாய்ந்தது. விவசாயம் செழிப்படையச் செய்கிறது.

மேல் மண்ணின் தன்மையைப் பொறுத்தே பயிர் விளைச்சல் அமைகிறது. சுமார் ஒரு கிராம் மேல்மண்ணில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான்கள், பல லட்சம் ஆக்டினோமைசீட்ஸ் நுண்ணுயிரிகள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் பெரும்பாலும் நமக்கு நன்மை புரிகின்றன.

மண்ணின் தன்மை அறிந்து பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போது மண் ணின் முக்கியத்துவம் உணராமல் பாழ்படுத்துவதில் முனைப்பு காட் டப்படுகிறது. மண்ணுக்கும், மனிதனுக்கும் இடையே சில வேறுபாடுகள்தான் உள்ளது.

மண்ணுக்கும் உயிர் உண்டு. மனித உடலில் நடைபெறும் பல்வேறு வகையான வினை சார்ந்த செயல்களான செரிமானம், சுவாசம், வெப்பநிலை வேறுபாடு போன்றவை மண்ணிலும் நடைபெறுகின்றன. எண்ணிலடங்கா உயிரினங்களின் ஆத்மாக்களின் கலவைதான் மண். பெற்றோரின் குணாதிசயங்களை மனிதன் பிரதிபலிப்பது போல, பாறையின் குணாதிசயத்தை மண் பிரதிபலிக்கிறது.

மனித உடலில் உள்ள செரிமான சக்தியைப் போல், மண்ணில் பிளாஸ்டிக் தவிர்த்து அனைத்து பொருட்களும் செரிமானம் அடைந்து உருமாற்றம் பெறுகிறது. மனிதன் காற்றை சுவாசித்து கார்பன்-டை- ஆக்சைடை வெளியிடுவது போல மண்ணிலும் நடைபெறுகிறது. மனிதன் உடல் பெரும்பாலான பகுதி நீரால் நிரப்பப்பட்டது. மண்ணில் நான்கில் ஒரு பங்கு நீர் உள்ளது.

மண் சிந்தனை ஏதுமின்றி தன்னாலான பங்களிப்பை உலகுக்கு வழங்கி வருகிறது. மனிதர்களால் பல்வேறு இடையூறுகளை சந்தித்த போதிலும், எந்தவித வேறுபாடும் காட்டாமல் மனிதனை தாங்கி நிற்கிறது மண். மண் நிரந்தரமானது. நாட்டின் முன்னேற்றத்துக்கு, மேம்பாட்டுக்கு மரங்கள் மட்டுமின்றி மண் வளமும் இன்றியமையாதது.

இதை உணர்ந்தே நமது மூதாதையர்கள் மரங்களோடு இணைந்து, மண் வளம் நிரம்பிய நிலங்களில் பயிர் சாகுபடி, அங்கிருந்து பெற்ற தரமான உணவுகளை உட்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தினர். அந்த மகிழ்வான வாழ்வு மீண்டும் வர வேண்டும். மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

இந்த மண்ணில் பிறந்து, மண்ணில் விளையாடி மண்ணில் வீடுகட்டி, மண்ணில் விளைந்த உணவை உண்டு வளர்ந்து, கடைசியாக இறந்த பின்னும் இந்த மண்ணிலே மக்கிப் போகக் கூடிய நாம் தற்போது மண்ணைப் பற்றி, சிந்திக்க வேண்டிய கடமையை ஐக்கிய நாடுகள் சபை நமக்கு அளித்திருக்கிறது. எனவே மனிதனின் பேராசை மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மண் தொடர்ந்து தனது வளத்தை இழந்து வருகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல் மனிதனை தாங்கி நிற்கும் மண்: இன்று உலக மண் தினம் எனவே மண் வளத்தை பாதுகாக்க நாமும் முற்படுவோம்