சனி, 17 அக்டோபர், 2015

இயற்கையான தானியங்களையும் காய்கறிகளையும் சமைப்போம்.

பூமியில் உணவுகளை உற்பத்திசெய்வதும் பராமரிப்பதும்தான் நம் உலக குடும்பத்தின் முதன்மை கடமை.

மனிதனுக்கு உடனடி தேவையாக எல்லா காலத்திலும் இருந்துவருவது காற்று, நீர், உணவுதான்.

இந்த மூன்றின் அவசியத்தை கருதி இயற்கையும் தன்னகத்தே உயிரினங்களுக்காக அதிகமாகவே வைத்திருக்கிறது.

காற்றையும் நீரையும் ஆதிகாலத்தில் இருந்து அப்படியே பயன்படுத்திவரும் மனிதன் உணவுகள் விடயத்தில் மட்டும் தன் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாற்றங்களை நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டான்.

அரிசி, கோதுமை, கேழ்வரகு, போன்ற தானிய வகைகளையும் பருப்பு வகைகளையும் காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக பயிரிட்டுக்கொண்டான்.

அவைகளை வேகவைத்து சுவையாக சப்பிடும் வித்தையை பழக்கிக்கொண்டான். வேகவைத்தால் மாமிசமும் தனக்கு உணவு என்பதை தெரிந்துகொண்டான்.

இப்படி உணவு அடிப்படையில் செய்துவந்த மாற்றங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சுவைக்காக உப்பு, புளி, காரம் சேர்த்தான்.

மணத்துக்காக மசாலாவை சேர்த்தான். இப்படி எல்லாம் இயற்கையிலிருந்தே எடுத்து தனது உணவு என்ற ஒரு கட்டமைப்பை பலப்படுத்தினான்.

ஒரு காய்கறியை 10 விதமான முறைகளில் கறிசெய்யும் அளவில் மனிதனின் சிந்தனை சமையற்கலையில் புகுந்து விளையாடியது.

இந்த வளர்ச்சியே ஒரு நிலையில் மக்களை வெறுப்படைய செய்தது. உணவு பார்க்க கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக வண்ணங்கள் சேர்க்கப்பட்ட போதும் துரித உணவுகள் துவங்கிய போதும்.

புதிய உணவு வகைகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எதையாவது பீட்சா, பார்க்கர், என்றும் க்ரீம் சேர்த்து அலங்கார கேக்குகளை உருவாக்குவதும் அதை கவர்ச்சியான விளம்பரங்களால் மக்களிடம் திணிப்பதும், உண்மையை கூட வெளியில் சொல்லமுடியாத வெற்று ஆடம்பர மோகத்தில் மக்களை சிக்க வைத்திருப்பதாலும் இப்போது உள்ள உணவு முறைகள் நல்ல உணவு ஞானம் உள்ள மனிதர்களால் விரும்பப்படாத நிலையிலே உள்ளது.

புதிய உணவுகளில் மக்கள் மதிப்பிட முடியாத வகையில் பொருள்கள், ஆடம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன.

எவ்வளவு விதவிதமான பாத்திரங்கள் வீட்டில் இருந்தாலும் பாலித்தின் தாள்கள்தான் அவசரகால உணவுதளங்களாக மாறுகின்றன.

இதனால், ஒரு நாளைக்கே கோடானகோடி கணக்கில் அவைகள், குவிந்து உலகில் அழிக்க முடியாத செயற்கை குப்பைமேடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

நாகரீக உணவு வகைகள் நம்மிடையே புகுந்ததால், நாம் இழந்த சுவையான ஆரோக்கியமான பழைய இயற்கை உணவு வகைகள் ஏராளம்.

அந்த உணவு வகைகள் தொலைந்து போனதால் வரும் தலைமுறைகளும் ஆரோக்கியமற்று உடல் பருத்து நரை விழுந்து, நடுத்தர வயதிலே மருந்து மாத்திரைகளோடு நோயாளியாக வாழ்கின்றனர்.

அதேசமயம் பழமையான உணவுகளை திரும்பிப் பார்க்கும் கலாச்சாரமும் மக்களிடையே கொஞ்சம் பரவி வருவது ஒரு ஆறுதலான விடயமாக உள்ளது.

சமீபத்தில், நெஸ்ட்லே நூடூல்ஸ் தீங்கானது என்று அரசால் தடை செய்யப்பட்டது. அதுபோல, பல தீங்கான உணவு பொருள்கள் நம்மிடையே இன்னும் உண்டு.

பேக்கிங் செய்யப்படும் உணவு சம்பந்தப்பட்ட பொருள்கள் எல்லாமே வணிகம் ஓங்குவதற்காக, மனிதனுக்கு தீங்குசெய்ய தயங்காத கொள்கை கொண்டதுதான்.

எண்ணெய் வித்துக்களில் பிழிந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கெடுதியல்ல, அதை பலமுறை காய்ச்சி வடித்து ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்தால் கேடுதான்.

சர்க்கரை (சீனி), மைதா, இவற்றின் தயாரிப்பில் வெண்மை நிறத்துக்காக சேர்க்கப்படும் ரசாயனப்பொருள்கள் நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு காரணமாவதை ஆய்வு முடிவுகள் தெரிவித்தும், தவிர்க்க முடியாத பொருளாகவே இன்னும் விளங்குகிறது.

உணவின் அவசியம் கருதி, அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ஆண்டில் ஒரு தினமாக அக்டோபர் 16 ம் திகதியை ஐ.நா. அறிவித்து கொண்டாடி வருகிறது.

இந்த தினத்திலிருந்தாவது, இயற்கையான தானியங்களையும் காய்கறிகளையும், கடல் உணவு வகைகளையும் சமைப்போம்.

அதற்கு சுவை, மணம், நிறம் கொடுக்கவும் தீங்கில்லாத தாவரங்களில் இருந்து பெறப்பட்ட பொருளையே சேர்ப்போம்.

தீங்கான பொருளை நாம் புறக்கணித்தால், நல்ல பொருள்கள் வியாபாரிகளுக்கு தானே தெரியவரும்.