சனி, 31 அக்டோபர், 2015

பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை

கிரிமியா, சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தது தற்செயலானது அல்ல. கடந்த கால ரஸ்யாவின் செயற்பாடுகளும் முன்னோக்கிய நகர்வும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இனி பின்வைக்குமளவு என் கால் இல்லை என்று தெளிவான நகர்வுகளுடன் ரஸ்யா…!!!

கோர்க்காசிய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த ஆயத மோதலைச் சாக்காக வைத்துக் கொண்டு அப்பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க அமெரிக்கா முயற்சித்துவரும் வேளையில், ~நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல| என்பதை நிரூபிப்பது போன்று ரஸ்யா அமெரிக்காவின் கொல்லைப் புறத்திலே இராணுவ ஒத்திகையொன்றைச் செய்ய களத்தில் இறங்கியிருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய அயல் நாடுமான ஜோர்ஜியாவின் பிரிவினை கேட்டுப் போராடிய மாநிலமான தெற்கு ஒஸ்ஸற்றியாவை தனது கட்டுப் பாட்டின் கீழ் பலவந்தமாக ஒன்றிணைக்க ஜோர்ஜியா எடுத்த முயற்சியில் தெற்கு ஒஸ்ஸற்றியா பகுதியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரஸ்யா ஜோர்ஜியாவுடன் யுத்தம் புரிய வேண்டிய நிலை உருவானது.
ஒரு சில நாட்களே நீடித்த இந்த யுத்தத்தின் விளைவாக உருவான அரசியல் சூழலும் மேற்குலகின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையும் தெற்கு ஒஸ்ஸற்றியா மட்டுமன்றி ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காசியாவினதும் தனிநாட்டுக் கோரிக்கையை ரஸ்யா அங்கீகரிக்கும் நிலையை உருவாக்கியது. இந்த இரு தேசங்களும் 1992 இலேயே தம்மை தனிநாடுகளாக பிரகடனப்படுத்திய போதிலும் எந்தவொரு நாடும் அவற்றை அங்கீகரிக்கவில்லை. எனினும் ஆகஸ்டில் இடம்பெற்ற மோதலை அடுத்து உருவான சூழ்நிலைகளால் ரஸ்யா அவற்றை அங்கீகரித்தது.
இந்நிலையில் செப்டம்பர் 6ஆம் திகதி மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவும் இந்த இரு தேசங்களையும் தனிநாடாக அங்கீகரித்துள்ளதுடன் விரைவில் அந்நாடுகளில் தனது தூதுவராலயங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய ரஸ்யாவின் அயல் நாடுமான பெலாரஸ் இம்மாத முடிவிற்குள் இந்த இரண்டு தேசங்களையும் தனிநாடுகளாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தெற்கு ஒஸ்ஸற்றியாவில் ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ரஸ்யா இவ்வளவு தூரம் அதிரடி நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்த்திராத அமெரிக்க நடப்பு விவகாரங்களால் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. கடும்போக்காளர் எனக் கருதப்பட்ட விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து அகன்று பிரதமர் பதவியில் அமர்ந்ததும் அவரது நண்பரான மெட்வடேவ் ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததும் ரஸ்யாவின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்திருந்த அமெரிக்காவுக்கு நடப்பு நிகழ்வுகள் ஏமாற்றத்தையே தந்தன.
ஒஸ்ஸற்றிய விவகாரத்தில் மத்தியஸ்தம் வகித்த ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணில் இருந்து அகல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோது தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா மீது ஜோர்ஜியா மீண்டுமொரு முறை பலாத்காரத்தைப் பிரயோகிக்காது என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட ரஸ்யா ஜோர்ஜியாவிலிருந்து படைகளை வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் படி அக்டோபர் முதலாம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 200 வரையிலான கண்காணிப்பாளர்கள் ஜோர்ஜியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இதனையடுத்து 10 நாட்களுக்குள் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணைவிட்டு முற்றாக அகல வேண்டும்.
இதனை ஏற்றுக் கொண்ட ரஸ்யா தனது பிடியை வலுப்படுத்த புதிய தந்திரமொன்றைக் கையாண்டுள்ளது. 1992 இல் ஜோர்ஜியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா ஆகிய தேசங்களில் சமாதானப் படைகளை ரஸ்யா நிறுத்தியிருந்தது. புதிய ஒப்பந்தத்தின்படி தனது படைகளை விலக்கிக் கொள்ளும் ரஸ்யா, புதிதாக உருவான நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் ஒவ்வொரு நாட்டிலும் 3,800 படையினர் வீதம் நிறுத்த முடிவு செய்துள்ளது. சமாதானப் படையினர் போலல்லாது புதிதாக நிலைகொள்ளும் படையினர் முழுச் சுதந்திரமும் பெற்றவர்களாகவும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமையச் செயற்படக்கூடிய அதிகாரம் மிக்கவர்களாகவும் விளங்குவர். அதாவது இந்த 2 தேசங்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் சந்தர்ப்பத்தில் அதற்குக் காரணமான நாட்டின் மீது ரஸ்யா போர் தொடுப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இதன் மூலம் கிடைத்திருக்கின்றது. இதனை வேறு விதத்தில் சொல்வதானால்
சும்மா இருந்த சங்கை அமெரிக்கா ஊதிக் கெடுத்திருக்கின்றது.
இதேவேளை விடாக்கண்டனான அமெரிக்காவும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற அடிப்படையில் ஜோர்ஜியாவுக்கு தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கின்றது. கருங்கடல் பிராந்தியத்துக்குள் நுழைந்துள்ள அமெரிக்காவின் 6 ஆவது கடற்படைப்பிரிவு அணுவாயுத யுத்தக் கப்பலான மவுண்ட் வைற்னி உட்பட 3 கப்பல்கள் ஜோர்ஜிய துறைமுகமான போற்றி இல் நங்கூரம் இட்டுள்ளன.
இதனால் ரஸ்யா பெரிதும் சீற்றமடைந்துள்ளது. ஜோர்ஜியாவுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காகவே தனது கப்பல்கள் ஜோர்ஜியா சென்றிருப்பதாக அமெரிக்கா கூறினாலும் அதற்கு எதற்காக அணுவாயுத யுத்தக் கப்பல்கள் என்ற கேள்விக்கு அமெரிக்காவிடம் பதிலில்லை.
இதேவேளை நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு யேர்மனி, ஸ்பெயின், போலந்து ஆகியவையும் நமது கப்பல்களை இப்பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. 90 களின் முன்னர் ரஸ்யாவைத் தவிர வேறு யாருமே நுழைய முடியாமல் இருந்த
இப்பிராந்தியத்தில் இன்று யார் யாரோவெல்லாம் நுழைவது ரஸ்யாவுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனது கப்பல்கள் மூன்றை அப்காசியத் துறைமுகங்களுக்கு ரஸ்யா அனுப்பி வைத்திருக்கின்றது. இது தவிர ஜோர்ஜியா மீது இராணுவத் தடை விதிக்குமாறும் ரஸ்யா அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் மூன்றாவது உலக யுத்தம் ஒன்றுக்கு வித்திட்டுவிடுமோ என்ற அச்சமொன்று உருவாகியுள்ள சூழ்நிலையில் தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவுடன் இணைந்து கடற்படை ஒத்திகையொன்றைச் செய்யப் போவதாக ரஸ்யா அறிவித்துள்ளது. நவம்பர் 10 முதல் 14 வரை நடைபெறப் போகும் இந்த ஒத்திகையில் உலகிலே சிறந்த அணுவாயுத நாசகாரி கப்பல்களுள் ஒன்று எனக் கருதப்படும் ரஸ்யக் கப்பலான ~பீற்றர் த கிரேட்| கலந்து கொள்ளவுள்ளது. இதனுடன் மேலும் 3 கடற்படைக் கப்பல்களும் கலந்து கொள்ளும் ஆயிரம் கடற்படை வீரர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுப்பர்.
ஜோர்ஜியாவில் தரித்து நிற்கும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள், போலந்தில் அமெரிக்கா செய்து கொண்டுள்ள ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு ஒப்பந்தம், உக்ரைனை நேட்டோவில் இணைத்தல் என ரஸ்யாவைச் சூழ்வதற்கு அமெரிக்க முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தினூடாக கரீபியன் கடலை ரஸ்யா எட்டுவதென்பது தற்செயல் நிகழ்வாகக் கருதப்பட முடியாதது. 20 வருடங்களின் பின் ரஸ்யா இத்தகையதொரு போர் ஒத்திகையில் அதுவும் மிகவும் பலம்பொருந்திய ஒரு கடற்படைக் கப்பலின் உதவியுடன் ஈடுபடுவது அமெரிக்காவுக்கு பல சேதிகளைச் சொல்லவே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கெடுபிடி யுத்தம் முடிந்து அமெரிக்கா தலைமையிலான ஏக தலைமையின் வழிநடத்தலில் உலகம் பயணிப்பதாக நிலைமைகள் தென்பட்ட போதிலும் அமெரிக்கக் கழுகு ஏகபோக உரிமையை அனுபவிப்பதை ரஸ்யக் கரடி அனுமதிக்கப் போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப் படுகின்றது. உலகின் என்ன தான் மாறினாலும் இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையிலான பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை என்பதுவும் இதன் மூலம் உணர முடிகின்றது.
இந்தக் கடற்படை ஒத்திகைக்கு மற்றுமொரு முக்கியத்துவமும் இருக்கிறது. எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற
இருக்கின்றது. இக்காலப்பகுதியிலேயே இந்த ஒத்திகையும் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதிலும் இது செல்வாக்குச் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
கடந்த யூலையில் ரஸ்யாவுக்கு விஜயம் செய்த வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ், ரஸ்யாவின் அணுவாயுதம் தாங்கிய யுத்த விமானங்களுக்கு தனது நாட்டின் கதவுகள் திறந்திருக்கின்றன என பகிரங்கமாக அறிவிப்புச் செய்திருந்தார்.
சோவியத் ஒன்றியம் உலகில் இருந்த 70 வருடங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக, பக்க பலமாக அமைந்திருந்தது.
இதன்விளைவாக உலகின் போக்கில் பல சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டன.
கடந்த 2 தசாப்தங்களாக விடுபட்டுப் போயிருந்த அப்பணியை ரஸ்யா தொடர்ந்தும் முன்னெடுக்குமானால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் உலக அரங்கில் மீண்டும் ஒலிக்கும் வாய்ப்பு உருவாகலாம். அதனை ரஸ்யா செய்யுமா என்பதே இன்று முற்போக்குச் சக்திகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.