புதன், 11 மார்ச், 2020

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் எதிரொலி: உலக பொருளாதாரத்துக்கு ரூ.148 லட்சம் கோடி இழப்பு - ஐ.நா. கணிப்பு

நியூயார்க், 

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது.
இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் வலுத்து வருகிறது.

உலக அளவில் இந்த வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருவதில், இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் இப்படி ஆதிக்கம் செலுத்தி வருவது உலக பொருளாதாரத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உற்பத்தி துறை மந்தமாகி உள்ளது. சுற்றுலாத்துறை முடங்கி உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி பாதித்துள்ளது. உலகளாவிய வர்த்தகம் மந்த நிலையை அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் அது உலக பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.148 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கணித்துள்ளது.

இதையொட்டி, ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், மனித இழப்புகளைத் தவிர அதைத் தாண்டிய பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால் 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.74 லட்சம் கோடி) இந்த ஆண்டில் இழப்பு ஏற்படும்.

முதல் கட்ட மந்த நிலையை பார்க்கிறபோது, அது உலக பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.148 லட்சம் கோடி) அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமே 220 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16 லட்சத்து 28 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும். இதில் சீனா சேர்க்கப்படவில்லை.

தற்போதைய நிலையில் மிக மோசமான பொருளாதார சூழலை சந்திக்கிற நாடுகள் என்று பார்த்தால், அவை கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிற நாடுகள்தான்.

மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிற நாடுகளும் 1-க்கு மேற்பட்ட சதவீத வளர்ச்சியை இழக்க நேரிடும்.

கனடா, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 0.7 சதவீதம் முதல் 0.9 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு கூறி உள்ளது.

கடந்த வாரம், ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், இந்தியாவில் 348 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2575 கோடி) அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் என கணித்து கூறியது.

சீனாவில் உற்பத்தி துறை பாதித்துள்ளதால், அது உலக வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியது.