திங்கள், 16 மார்ச், 2020

20 ஆண்டுகளுக்கு பிறகு 37,000 கி.மீ. பயணம் செய்து தனது இருப்பிடத்தை கண்டறிந்த ஆமை.! 

யாஷி எனப் பெயரிடப்பட்ட கடல் ஆமை ஒன்று 37,000 கிலோ மீட்டர் தூரம் கடலில் பயணம் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த நிகழ்வு இயற்கை ஆர்வலர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவிவருகிறது.

Loggerhead turtle's journey tracked 37,000km from Cape Town in South Africa to Australia

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை சேர்ந்த மீன் பிடிக்கும் படகில் இருந்தவர்கள் முதுகு ஓடு உடைந்த ஆமை ஒன்றை கடலில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் அந்த ஆமையை சிகிச்சைக்காக தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் மாகாணத்தில் உள்ள கடல் உயிரினங்களை பரமாரிக்கும் பண்ணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த ஆமைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. யாஷி முழுமையாக குணமடைந்த பின்பு, அதனை கடலில் நீந்துவதற்கு பழக்கப்படுத்தியுள்ளனர். தொடக்கத்தில் நீந்துவதற்கு சிரமப்பட்ட ஆமை, ஆண்டுகள் செல்ல செல்ல நன்கு நீந்துவதற்கு ஆரம்பித்துள்ளது. 


ஆமை முழுமையாக குணமடைந்துவிட்டதை உணர்ந்த அதன் கண்காணிப்பாளர்கள் மற்றும் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் யாஷியை நிரந்தரமாக கடலில் விடுவதற்கு முடிவு செய்தனர். மேலும் யாஷியை தொடர்ந்து கண்காணிக்கவும் முடிவு செய்து அதனுடைய உடலில் செயற்கைகோள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவியையும் பொருத்தினர். மேலும் அதனை கடலுக்குள் விடுவிப்பதற்கு முன்பு தேவையான அனைத்து மருத்துவ சோதனைகளையும் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் விடப்பட்ட யாஷி என்ற பெண் ஆமை அதனுடைய இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்கியது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்த ஆமை 37,000 கிலோ மீட்டர்கள் கடந்து இறுதியாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் முட்டையிட்ட இடத்தை கண்டுபிடித்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை ஆமை தேடி கண்டுபிடித்திருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைதளத்தில் இது குறித்து வெளியான செய்தியைப் பார்த்து இணையதளவாசிகள், யாஷியையும் அதன் விடா முயற்சியையும் பாராட்டி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக யாஷி பயணம் செய்த அனைத்து வழித்தடங்களும் ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.