வியாழன், 12 மார்ச், 2020

சிக்மண்ட் ஃபிராய்ட் : சிறகுகள் விரிக்கும் கனவுகளின் ஆதிமூலத்தை அகழ்ந்தெடுத்தவர்!

சிக்மண்ட் ஃப்ராய்ட் என சுருக்குமாக அழைக்கப்படும் ‘சிக்சிமண்ட் ஸ்க்ளோமோ ஃப்ராய்ட்’, 1856ம் ஆண்டு இதேநாளில் அதாவது மே 6ஆம் தேதி ஆஸ்திரியாவின் ஃப்ரைபெர்க் எனும் ஊரில் பிறந்தார். உளவியல் பகுப்பாய்வு என்னும் கோட்பாட்டை முதன்முதலில் கொண்டுவந்த பெருமை ப்ராய்ட்டையே சேரும். 

நரம்பியல், உளவியல் மருத்துவம் மற்றும் உளவியல் பகுப்பாய்வு போன்ற துறைகளிலும் தனது ஆராய்ச்சிகள் மூலமாகவும், ஆய்வுகள் வழியாகவும் தனக்கென தனியிடத்தை சிக்மண்ட் ஃப்ராய்ட் உருவாக்கிக் கொண்டார்.

உளவியல் சிக்கலுக்குள்ளானவர்களை தனித்து பார்த்த அன்றைய மருத்துவ முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஃபிராய்ட், உளவியல் சிக்கலுக்கு உள்ளானோருடன் கலந்துரையாடல் மூலம் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து சிகிச்சை அளிக்கும் உளவியல் பகுப்பாய்வு முறையை உருவாக்கி ஃப்ராய்ட் புகழ் பெற்றார். உளவியல் துறையில் தனது பங்களிப்பிற்காய் 1930ஆம் ஆண்டிற்கான கோதே பரிசை பெற்றார்

1881ஆம் ஆண்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்ற ஃப்ராய்ட், 1885ஆம் ஆண்டு நரம்பு நோயியல் பிரிவில் சிறப்பு பட்டம் பெற்று 1902ஆம் ஆண்டு இணை பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 

கட்டற்ற தொடர்பு மற்றும் இடமாற்றீடு போன்ற கோட்பாடுகளை கொண்டுவந்து உளவியல் மருத்துவத்தில் புதிய கண்ணோட்டத்தை உருவாக்கினார் ஃபிராய்ட். இடிபஸ் மனப்பான்மை போன்ற பாலின உணர்வு ரீதியான உணர்ச்சிகளை ஆராய்ந்து பாலின பாகுபாடு குறித்த பார்வையை மறுவரையறை செய்தார்.

ஆழ்மனதில் அமுக்கப்பட்ட எண்ணங்களே வண்ணம் பெற்று கனவுகளாக வருகிறது என கூறினார் ஃப்ராய்ட். “லிபிடோ” என்னும் உணர்வுதான் எதிர்பாலின கவர்ச்சி, திரும்பத் திரும்ப ஒரு செயலை செய்யத் தூண்டும் எண்ணம், வெறுப்பு, ஆவேசம் மற்றும் ஒரு வகையான குற்ற உணர்வுக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறுகிறார். 

ஃப்ராய்ட் உருவாக்கிய இந்த முறைகளின் மருத்துவ நம்பகத்தன்மை, விஞ்ஞான முக்கியத்துவம் மற்றும் சமூகவியல் ரீதியில் இந்த கருத்துக்கள் பெண்ணியத்திற்கு சார்பானவையா அல்லது எதிரானவையா என்பன போன்றவை ஃப்ராய்டியம் குறித்து பெரிதும் விவாதிக்க கூடிய தலைப்புகளாக அமைகிறது. ஆடன் என்னும் கவிஞர் ஃப்ராய்டுக்காக எழுதிய கவிதையில், மக்களின் மனஓட்டத்தை காலநிலையைப் போல விளக்குபவர் ஃப்ராய்டு என புகழாரம் சூட்டியுள்ளார்.


செரிப்ரல் பால்சி என்னப்படும் நோயைப் பற்றியும் அதிகமாக ஆராய்ச்சி செய்தார் ஃப்ராய்ட். குழந்தை பிறக்கும் போது ஏற்படும் பிராணவாயு குறைபாடால் தான் இந்த நோய் வருகிறது என்ற தவறான நம்பிக்கையை உடைத்து, அந்த நோய் இருப்பதற்கான அறிகுறியாகவே குழந்தைப் பிறப்பின் போது உள்ள சிக்கலை பார்த்தார். 

1890 ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் இளவயதில் ஏற்பட்ட பாலியல் பிரச்சினைகளை பற்றி கூறியதால் அது குறித்த ஆய்வில் ஈடுபடும் போது இடிபஸ் மனப்பான்மையை முக்கியத்தன்மையை கண்டறிந்தார். கொகைன் மன மற்றும் உடல் ரீதியான பல உபாதைகளுக்கும் தீர்வாக அமையும் என நம்பிய ஃப்ராய்ட், 1884ஆம் ஆண்டு “On Coco" என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். 

இதே போல 1883 முதல் 1887 ஆம் ஆண்டு வரை எழுதிய கட்டுரைகளில் கொகைன் ஒரு மன அழுத்தத்தை ஒழிக்கும் நிவாரணி என கூறினார். கொகைன், மார்ஃபைன் என்னும் போதை பழக்கத்தை மாற்ற வல்லதாக இருக்கும் என்ற நோக்கில் ஃப்ராய்ட் செய்த சோதனை தோல்வியில் முடிந்த காரணத்தால், அறிவியல் பூர்வமாக அவரின் கொகைன் தொடர்பான கூற்றை நிரூபிக்க முடியவில்லை. 

நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களை நாம் மறந்தாலும், ஆழ்மனதில் தங்கியுள்ள அது கனவுகளாக வருவதாகவும், சுயநினைவுகளில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் வழியாக வெளிப்படும் எனவும் ஃப்ராய்ட் கூறினார். செயற்கையாக அந்த எண்ணங்களை வெளிக்கொண்டுவர மனோவசியம் (hypnosis) பயன்படுகிறது. இதை குறித்து ஃப்ராய்ட் "The Interpretation of Dreams" மற்றும் "Jokes and their Relation to the Unconscious" என்னும் நூலில் விளக்கமாக கூறியுள்ளார்.

பாலுணர்வு தொடர்பான அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் இடிபஸ் மனப்பான்மை அடித்தளமாக அமைந்துள்ளது. “Eros"என்னும் உணர்வு வாழ்வதற்கான உத்வேகத்தை தருவதாகவும்  "Thanatos" என்னும் உணர்வு நம் பிரச்சினையை முழுமையாக குறைக்க வேண்டும் என்னும் எண்ணத்தையும் தருவதாக கூறுகிறார். 

1917ஆம் ஆண்டு "Mourning and Melancholia" என்னும் கட்டுரையில் கவலைப்படுவதின் வகைகளைக் குறித்து கூறியுள்ளார். இவர் கூறிய சில கருத்துக்கள் ஆணாதிக்கம் மிகுந்ததாக கூறி பெண்ணியவாதிகள் எதிர்த்தனர். மனிதர்கள் கடவுளை பின்பற்றுவது, அவர் மீது உள்ள நம்பிக்கையினால் என கூறுவதை விட தன்னை சுற்றியுள்ள உலகத்தின் மீதான பயத்தினால் தான் என்பதே கடவுள் மீதான ஃப்ராய்டின் கருத்து.

1938ஆம் ஆண்டு நாசிப்படைகளிடம் இருந்து தப்பிக்க ஆஸ்திரியாவை விட்டு வெளியேறிய அவர், 1939ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். உளவியல் துறையில் தான் ஏற்படுத்திய மாபெரும் தாக்கத்திற்காக இன்றளவும் சிக்மண்ட் ஃபிராய்ட் நினைவுக் கூறப்படுகிறார்