திங்கள், 22 ஏப்ரல், 2019

இலங்கை காலியாகிவிட்டதா? நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளான அதிபர் ட்ரம்ப்

இலங்கையில் இன்று நடந்த 8 மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகக்கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தவறாக ட்விட் செய்ததால், நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகினார்.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையான இன்று, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கொழும்பு நகரங்களில் உள்ள தேவாலாயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 207 பேர் கொல்லப்பட்டனர், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.
அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்பும், இலங்கை தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தையும் வேதனையையும் பதிவு செய்தார். ஆனால், சற்று அதிகமாக வருத்தப்பட்டு, மக்கள் எண்ணிக்கையை தவறாக பதிவிட்டதால், நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளாகினார். இலங்கை தாக்குதலில் 138 பேர் கொல்லப்பட்டார்கள் என்று பதிவிடுவதற்கு பதிலாக 138 மில்லியன்(13.80 கோடி) மக்கள் என்று தவறாக பதிவிட்டார். இதைத்தான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கூறுகையில், " இலங்கையில் உள்ள தேவாலாயங்கள், ஹோட்டல்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 138 மில்லியன் மக்கள், 600க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்களுக்காக அமெரிக்க மக்கள் சார்பில் நான் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன். உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் " எனத் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்பின் ட்விட்டை கவனித்த நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் கூறுகையில், " அனைத்தையும் மில்லியனில் குறிப்பிடாதீர்கள், உங்கள் எண்ணிக்கையை மாற்றுங்கள். இவ்வாறு தவறான எண்ணிக்கையில் பதிவிட்டால் எப்படி உளப்பூர்வமாக ஆறுதல் தெரிவித்து இருப்பீர்கள்" எனத் தெரிவித்தார்.
மற்றொருவர் " 138 மில்லியனா, அப்படியென்றால், தாக்குதல் அதிகரிப்புக்காக காத்திருக்க வேண்டுமா" எனக் கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், " இலங்கையி்ல இருப்பதே 2 கோடி மக்கள்தான், 13.80 கோடி மக்களுக்கு எங்கு செல்லவது வாய்ப்பே இல்லை. உங்களின் தப்பான அனுதாபங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அது தேவையில்லை" என்று இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் " 138 மில்லியனா,... இலங்கை மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் கணக்கின்படி எங்கள் நாடு இப்போது காலியாகிவிட்டதா" எனத் கிண்டலடித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் தவறாக ட்வீட் செய்வது முதல்முறை அல்ல, இதற்கு முன் அமேசான் அதிபர் ஜெப் பிஜோஸ் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஜெப் போஜோ என்று குறிப்பிட்டார்.
ஆப்பிள் அதிபர் டிம் குக் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக டிம் ஆப்பிள் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.