வியாழன், 25 ஏப்ரல், 2019

வழிபாடும், அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்!

சகிப்புதன்மைகளை வளர்த்து இயல்பு வாழ்க்கையை மீட்போம்..!

மதத்தளங்களை குறிவைத்துத் தாக்குவது கோழைத்தனமானது. கொடூரமானது. சமீபத்திய சம்பவங்களில் இருந்து  இலங்கை  தேசத்து மக்கள் மட்டுமல்ல. உலக தேசங்களும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை 

இன்றும் தன் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள் ஏற்படுத்திய அனர்த்தங்களினால் பல இஸ்லாமிய சமூகத்தவர்களுடைய  உள்ளங்களும் அதிகமாக காயப்பட்டிருக்கின்றது. மீளமுடியாத துன்பியல் சம்பவத்தின் குற்றவாளிகளா? என்ற கேள்விகளையும் மனிதம் நிறைந்தவர்கள் தாங்கி நிற்கின்றார்கள்.

'வன்மம் நிறைந்த கொடூரமான மனிதர்களுக்காக அந்த சமூகத்தினருடைய நம்பிக்கைகளையும், வழிபாடுகளும் தண்டனைகளுக்கு இலக்காகி விடக்கூடாது.'

இறந்த அப்பாவி ஆன்மாக்களின் சாந்திக்காகவும், மனித அவலங்களை கடந்த இயல்பு வாழ்க்கைக்காகவும் நாளை வெள்ளிக்கிழமை அவர்களுடைய தொழுகையும் பிராத்தனைகளாய் நிச்சயம் பள்ளிவாயல்களில் எதிரொலிக்கும். அவர்கள் அச்சுறுத்தல்கள் எதிர்கொள்ளா வண்ணம் அவர்களுடைய சூழலையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். இது புரிந்துணர்வுகளையும், நம்பிக்கைகளையும் கட்டியெழுப்பும் காலம்.

பிற மதங்களையும், மனிதங்களை நேசிப்பவர்களும் பாதுகாப்புத்துறையுடன் இணைந்து ஆரோக்கியமான வழிபாட்டு சுதந்திரங்களை அனைத்து மதத்தவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். கிரகத்தில் வாழ தகுதியில்லாத நபர்களுடைய எதிர்வினைகளை அப்பாவிகள் மீதும், இயல்பான சமூக வாழ்வியல் மீதும் காயம் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்வோம். சகிப்புத்தன்மைகளை வளர்த்து மனிதம் காப்போம்

இறந்த அப்பாவிகளுக்காகவும், அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்காக பிராத்திக்கின்றேன். 'அந்த சிறு குழந்தைகள்' இறைவனின் தோட்டத்தில் பட்டாம்பூச்சிகளாய் சிறகடிப்பார்கள். விரைந்து தேசம் மீட்சி கொள்ள அமைதிக்காகவும், இயல்பு வாழ்க்கைக்காகவும் பிராத்திப்போம்.


கனத்த இதயத்துடன்....!
அமலதாஸ் எல்றோய்