செவ்வாய், 31 மார்ச், 2020

அமெரிக்காவில் இரு வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப்பலியும் உச்சத்துக்கு செல்லும் - அதிர வைத்த டிரம்ப்

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப் பலியும் 2 வாரத்தில் உச்சத்துக்கு செல்லும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதியான டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன், 

வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இப்போது கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, அங்கு இந்த வைரஸ் பிடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 2,475.

நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்த வைரஸ் 18 ஆயிரம் பேருக்கு தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 255 அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க் நகரத்தில் மட்டும், 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 960 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நியூஜெர்சி மாகாணத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. அங்கு இதுவரை 13 ஆயிரம் பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 161 பேர் பலியாகியும் உள்ளனர்.

மேலும் 20 மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

24 மாகாணங்களில் ஊரடங்கு, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னதாக தேசிய நெருக்கடி நிலையையும் ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே அறிவித்து அதுவும் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்கள் மத்தியில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளை மாளிகையின் பொது சுகாதார ஆலோசகர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினர்களான டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி ஆகியோர் ஆலோசனைப்படி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருவதற்கான கால வரையறை ஏப்ரல் 30-ந்தேதி நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தணிப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள், புதிதாக கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்கும், பலி எண்ணிக்கையையும் குறைக்கும் என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி எடுத்துக்காட்டி உள்ளனர்.

தங்களது தன்னலமற்ற எழுச்சியூட்டும், துணிச்சலான முயற்சிகள் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள்.

புதிய சமூக வழிகாட்டுதல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1-ந் தேதி அறிவிக்கப்படும். ஜூன் 1-ந் தேதி வாக்கில் நாம் மீண்டு வருவதற்கான பாதையில் நன்றாக இருப்போம் என்று நம்புகிறேன்.

கொரோனா வைரசால் நாம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் உயிர்ப்பலி 22 லட்சம் அளவுக்கு போகக்கூடும் என எனக்கு சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலியை 1 லட்சம் என்ற அளவுக்கு கட்டுப்படுத்தி விட்டாலே நாம் நன்றாக செயல்பட்டிருக்கிறோம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்டர் பண்டிகைக்குள் (ஏப்ரல் 12-ந்தேதி) இயல்பு நிலைக்கு அமெரிக்கா திரும்பி விடும் என எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார்.

இப்போது அவரே ஜூன் 1-ந் தேதி வாக்கில் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இருப்போம் என கூறி இருப்பது, அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

இதற்கு இடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை கடைப்பிடிக்காமல் பொதுவெளியில் சுற்றித்திரிகிறவர்கள் மீது மாகாண அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கத்தொடங்கி உள்ளன.

சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் நியூயார்க்கிலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு 200 டாலர் முதல் 400 டாலர்வரை (சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில்) அபராதம் விதிக்கத்தொடங்கி இருக்கிறார்கள்.

நியூயார்க் நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைக்க போதுமான அளவுக்கு பிணவறை வசதி இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அந்த நகர ஆஸ்பத்திரிகளில் உடல்களை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட லாரிகளை நிறுத்தி இருப்பதை பார்ப்பதாக டிரம்ப் கூறி உள்ளார்.

ஏற்கனவே தாக்கியுள்ள மற்ற வைரஸ்களின் புள்ளி விவரத்தின்படி பார்த்தால், இப்போதைக்கு கொரோனா வைரஸ் பரவலை தணிக்காவிட்டால், அதனால் 16 லட்சம் முதல் 22 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ் எச்சரித்துள்ளார்.

டாக்டர் பிரிக்ஸ் கணிப்பு அடிப்படையில் பார்த்தால், 2 வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் உச்சம் தொடும், பலியும் அதேபோல அதிகரிக்கும் என்று டாக்டர் அந்தோணி பாசி கூறி உள்ளார்.

இப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான கால வரம்பை ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து, டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உயிர்ப்பலி 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் வரையில் இருக்கும் என்று டாக்டர் டெபோரா பிர்க்ஸ் கணித்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Coronavirus: Trump says US in good shape to meet 'peak'

திங்கள், 30 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார்.

லாஸ்ஏஞ்சல்ஸ்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் உகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில்  கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் 

 சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை  உலகிற்கு அளித்துள்ளது.

ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், மைக்கேல் லெவிட்  துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.

சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட்  மதிப்பிட்டு இருந்தார் அதுபோலவே நடந்து உள்ளது.சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸினால் அத்துடன், சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து மைக்கேல் கருத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

‘We’re going to be fine’ — Nobel winner Michael Levitt says COVID-19 pandemic will end soon



வியாழன், 26 மார்ச், 2020

கிருமிகள் உலகில் மனிதர்கள்

கொரோனா .. .. .. "கிருமிகள் உலகில் மனிதர்கள்"

தற்கால சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்களை உள்ளடக்கியது இந்த புத்தகம். கிடைத்திருப்பது வரப்பிரசாதமே. நேரம் ஒதுக்கி படியுங்கள் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. சுய ஊரடங்கு உங்களை வாசிப்பின் தாற்பரியத்தை மேம்படுத்தும். அதற்கேற்றால் போல் நுண்ணங்கிகளையும் உலகின் அசைவையும் ஓரளவு புரிந்து வைக்க இந்த நூல் உதவும் என நம்புகிறேன்.

- எல்றோய் அமலதாஸ்

நாடெங்கும் ஏன் பாரெங்கும் ஒரு பாதையில் விரைந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான பாதையில் இயல்பாகவே ஒரு மாற்றுக் குறைவு ஏற்பட்டு விடுகிறது. என்றாலும் அதில் இருக்கும் நியாயங்கள் மறைக்கப்பட்டாக வேண்டுமா? விவாதிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.

நுண்ணுயிர் தேற்றம் (Germ theory) அதன் தொடக்க காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டிருக்கின்றன.

அலோபதி மருத்துவத்தின் போதாமையும், அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரில் நடக்கும் ஒற்றைப் பார்வை ஆய்வுகளும் கண்டிப்பாக மக்களின் ஆரோக்கியத்தை காக்கப் போவதில்லை. என்றால் மக்களை நேசிப்பவர்களின் அடுத்த அசைவு எதை நோக்கியதாக இருக்க வேண்டும்?

கிருமிகள் உலகில் மனிதர்கள் எனும் அக்கு ஹீலர் உமர் ஃபாரூக் எழுதிய இந்த நூலை படித்துப் பாருங்கள். நுண்ணுயிர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பார்வையை எளிமையாகவும், வலிமையாகவும் மறுத்து விளக்கங்களையும் தரவுகளையும் முன் வைக்கிறார்.

மருத்துவ மாணவர்களே, மருத்துவர்களே, மருத்துவ வல்லுனர்களே, இதை விவாதிக்க நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான மக்களின் ஒருமையையும், ஓர்மையையும் குலைப்பது இதன் நோக்கம் இல்லை. சரியானதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் முனைப்பு தான்.

வாருங்கள் விவாதிப்போம்.



நூலை பதிவிறக்க
https://drive.google.com/file/d/13Et9_ThqgJ3vWOuErXyZU724zYJSJwjt/view

புதன், 25 மார்ச், 2020

256 தவிர்க்க முடியாத இலக்கம்..!

பரிசோதனைகளின் உண்மைத்தன்மையை பொறுத்து இலக்கம் ஏறத்தாழ என கொள்ளப்பட்டாலும் இராவண தேச நுண்ணிய காவுகள் கதை கொண்டுபேசும்...! #256

திங்கள், 23 மார்ச், 2020

பொறுப்புடன் அறிக்கையிடுங்கள். நம்பகத்தன்மையற்றவற்றை பிரசுரிக்க வேண்டாம்.

கடவுளே...!😪
ஊடக தொழில் என்பது அனுபவத்துக்கும் அப்பாற்பட்ட அறிவும், நெறிமுறையும் கொண்டது என்று தயவு செய்து உணருங்கள் தோழர்களே.. 

பிரேசில் தலைவர் யார்..? 
இத்தாலி தலைவர் யார்..?
என்ற வேறுபாடு கூட தெரியாதவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு பிரதான ஊடகமாக போற்றப்படும் பத்திரிக்கைதுறையை கேவலப்படுத்தாதீர்கள்..
Mainstream mediaவையும் சில இணைய/சமூக வலைதள ஆய்வற்ற ஊடகமாக மாற்றிய பெருமையை இனி காலம் கடந்தும் பேசப்படும்..

👉பொறுப்புடன் அறிக்கையிடுங்கள். நம்பகத்தன்மையற்றவற்றை பிரசுரிக்க வேண்டாம். 

ஊடகப்பணி
இது வெறுமனே வேலை வாய்ப்பல்ல.. சுய பிரபலத்துக்கான ஆர்வக்கோளாறுகளின் களமும் அல்ல..

மக்களின் அவநம்பிக்கைகளை பெற்றுவிட்டால் துறைசார்ந்த இயங்குநிலை கேள்விக்குறிதான். இனி ஊடக பாடப்புத்தகங்களிலும் உங்கள் லட்சணம் மேற்கோள் கொண்டு உத்தறியப்படுவது தவிர்க்க முடியாதது.

நன்றி 
எல்றோய் அமலதாஸ்

#Fakenews⚠️
#FactCheck🚫
(Image Of Brazilian President Breaking Down Falsely Linked To Coronavirus-Hit Italy)👆

ஞாயிறு, 22 மார்ச், 2020

பல நாடுகளும் கைவிரித்த நிலையில், மனிதநேயத்துடன் அடைக்கலம் தந்த கியூபா!

நடுக்கடலில் சிக்கித்வித்த கொரோனா தாக்கிய வெளிநாட்டு பயணிகளுக்கு கியூபா அரசு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. 

அச்சறுத்தும் கொரோனாவால், ஒவ்வொரு நாடும் உலக நாடுகளில் இருந்து தங்களை தனிமைபடுத்தி கொண்டே வருகிறது.  வைரஸ் தொற்று அறிகுறியுள்ள வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அனைத்து நாடுகளும் தடை விதித்துள்ளது. சில நாடுகளில், கொரோனா பாதித்த சொந்த நாட்டு மக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கியூபா மட்டும் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு தஞ்சமளித்துள்ளது. 

Photo

பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற சொகுசு கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் நிர்வாகத்தினர் அனுமதி கோரினர். ஆனால், அனைத்து நாடுகளும் கைவிரித்து விட்டன. இதனால், நடுக்கடலில், நடுங்கிக்கொண்டிருந்த சொகுசு கப்பலுக்கு, கியூபா அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வைரஸ் தாக்கிய பயணிகளுக்கு தாங்களே சிகிச்சை அளிக்க கியூபா அரசு முன் வந்துள்ளது. 

Photo

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதித்த மக்களை ஏற்க முன்வராத போது, கியூபா மட்டும் ஏற்றுக்கொண்டது ஏன்? கியூபாவின் மருத்து கட்டமைப்பு அவ்வளவு வலுவானதா என்பதை அறிய வேண்டியுள்ளது. 

1959ம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த படிஸ்டாவின் சுறண்டல் ஆட்சியை பிடல் கேஸ்ட்ரோவும், சேகுவேராவும் புரட்சி முலம் வீழ்த்தினர். பின்னர், கியூபாவின் அதிபரான ஃபிடல் கேஸ்ட்ரோ, மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பை நிறுவ விரும்பினார். மருத்துவ சேவை இல்லாத பகுதிகளில் மருத்துவ சேவை வழங்குவது கேஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கேஸ்ட்ரோவின் இந்த கனவை நனவாக்க, மருத்துவரான, அவரது சக போராளி சேகுவேரா பல திட்டங்களை கொண்டுவந்தார். அதன் ஒருபகுதியாக, கியூபாவில் இருந்த மருத்துவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு மருத்துவர்கள், கியூபாவில் தங்கியிருந்து மருத்துவச் சேவையைச் செய்ய வேண்டும். அதேநேரம் தேவைப்படும்போது, மற்ற நாடுகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின்போது, தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்பட வேண்டும். இந்த மருத்துவப் பிரிவு  மருத்துவப் புரட்சி படை என்று அழைக்கப்பட்டது. 

Photo

மருந்துகளின் விலை குறைப்பு, இலவச மருத்துவ சேவை, மருத்துவ கல்வியை பரவலாக்கியது என பல திட்டங்களை முன்னெடுத்தார் ஃபிடல் கேஸ்ட்ரோ. இதனால், மற்ற நாடுகளை விட மருத்துவ சேவையை விசாலமான சிந்தனைகொண்டு கியூப அரசால் செயல்பட முடிகிறது. அதன் வெளிப்பாடே, கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க கியூபா முன் வந்துள்ளது.

Photo

முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள பல வல்லரசு நாடுகள், கொரோனாவை தாக்குபிடிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், கம்யூனிச சிந்தனையால் ஆட்சி செய்யப்பட்டு வரும் கியூபாவில், இதுவரை கொரோனாவால் 4 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணிகளுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முன்வந்துள்ளது. 
 

கொரோனா வைரஸ் குறித்து 2015ம் ஆண்டே எச்சரித்த பில் கேட்ஸ்.! 

கொரோனா வைரஸ் குறித்து 2015ம் ஆண்டே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

கடந்த 2015ம் ஆண்டு டெட் டாக் (Ted Talk) நிகழ்ச்சியில் பங்குபெற்று பில்கேட்ஸ் 8 நிமிடங்கள் உரையாற்றினார். அந்த உரையின்போது அடுத்த பத்தாண்டுகளில் உலகிற்கும் மனித இனத்திற்கும் பேராபத்தாக போர் இருக்காது எனவும் அதைவிட பேராபத்தாக வைரஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த வைரஸ் மூலம் 1 கோடி மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அவர் ஆற்றிய உரையில், எபோலா வைரஸ் குறித்து பேசினார். அப்போது எபோலா வைரஸை கட்டுப்பத்த தேவையான திட்டங்களும் வழிவகைகளும் இல்லை என தெரிவித்தார். ஆனாலும் சுகாதாரத்துறையினர் துல்லியமாக செயல்பட்டதாலையே அதனை கட்டுக்குள் வைக்க முடிந்தது எனவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டார். மேலும் எபோலா தொற்று நோயாக இருந்தாலும் அது காற்றின் மூலம் பரவவில்லை என்பதாலே உலக நாடுகளில் மிகப்பெரிய இழப்பு  ஏற்படவில்லை என தெரிவித்தார். ஆனால் அடுத்தமுறையும் இப்படியொரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறமுடியாது என்றார். 

Epidemicவைரஸ் மூலமாக ஏற்படும் தொற்று நோயினால் உலகம் முழுவதும் ஒரு கோடி பேர் வரை உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் அதனை தடுக்க உலக நாடுகள் இணைந்து போராட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கே கோடிக்கணக்கான பணத்தை உலக நாடுகள் செலவிடுவதாக கூறிய பில் கேட்ஸ், தொற்று நோயை தடுக்கும் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் தொற்று நோய் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வல்லுநர்களும் தொற்று நோயியல் நிபுணர்களும் இல்லை எனவும் பில் கேட்ஸ் கூறினார். 

இந்த தொற்று நோயினை போர் கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலே தப்பிக்க முடியும் எனக் கூறிய பில் கேட்ஸ், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் கூறினார். 2015ம் ஆண்டில் பில் கேட்ஸ் கணித்தது தற்போது கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது என சமூக வலைதளத்தில் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிய பில் கேட்ஸ், இனிமேல் மக்கள் நலன் சார்ந்த செயல்களில் (Philanthropy) அதிக கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் ரூ.750 கோடி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வளரும் நாடுகளையும் அதன் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்றும் பில் கேட்ஸ் கணித்துள்ளார். 

Bill Gates

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை (Shut Down) பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். முழு அடைப்பை பின்பற்றினாலே ஓரளவு கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பு மருத்தை செயல்படுத்த இன்னும் 18 மாதங்கள் ஆகலாம் எனவும் ஆனாலும் அதனை உறுதியாக சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

சனி, 21 மார்ச், 2020

கொரோனா வைரஸ்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்

கட்டுக்கதை: வைட்டமின் “சி” மாத்திரைகள் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு வராது

உண்மை : வைட்டமின் “சி” மாத்திரைகள் கோவிட்-19 என்ற கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கட்டுக்கதை: குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்காது.

உண்மை: குழந்தைகளையும் நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்கும். ஆரம்ப அறிக்கைகள் பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளில் குறைவான பாதிப்பே இருந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் சமீபத்திய ஆய்வுகளின்படி குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவுகிறது.

கட்டுக்கதை: கொரோனா வைரசை குணப்படுத்த ஒரு தடுப்பூசி உள்ளது.

உண்மை : தற்போது வரை கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. விஞ்ஞானிகள் ஏற்கனவே தீவிரமாக தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனளிக்கும் ஒரு தடுப்பூசியை உருவாக்க பல மாதங்கள் ஆகும்.

கட்டுக்கதை: நிறைய தண்ணீர் குடிப்பதால் கொரோனா பாதிப்பு வராது. ஒவ்வொரு 15 நிமிடமும் தண்ணீர் குடிப்பதால் உங்கள் தொண்டையில் உள்ள எந்த வைரசும் உங்கள் வயிற்றுக்கு சென்று விடும். அங்குள்ள அமிலம் அதைக் கொல்லும் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பரவுகிறது.


உண்மை : இது தவறு. இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் சாதாரணமாக தண்ணீர் குடிப்பது உடல் நலத்துக்கு நன்மை விளைக்கும்.

கட்டுக்கதை: அதிக வெப்பம் அல்லது வெயிலில் கொரோனா பரவாது.

உண்மை : உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை கிடைத்த சான்றுகளிலிருந்து, கொரோனா வைரஸ் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளது.

கட்டுக்கதை: வயதானவர்களை மட்டுமே கொரோனா தாக்குகிறது.

உண்மை : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எல்லா வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதானவர்கள் மற்றும் முன்பே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

கட்டுக்கதை: வெப்ப அளவுகோல் (தெர்மல் ஸ்கேனர்) வைத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து விடலாம்.

உண்மை : வெப்ப அளவுகோல் (தெர்மல் ஸ்கேனர்) மனிதன் உடலில் உள்ள வெப்பத்தை மட்டுமே அளவிட முடியும். இதன் மூலம் ஒருவருக்கு காய்ச்சல் இருக்கின்றதா என்று கண்டறியப்படும்.

கட்டுக்கதை: வெந்நீரில் குளித்தால் கொரோனா பாதிப்பு வராது.

உண்மை : சூடான குளியல் எடுப்பது கொரோனா பரவுவதை தடுக்காது. ஏனெனில் வெந்நீர் குளியல் அல்லது சாதாரண குளியலின்போது உங்களது உடல் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலேயே இருக்கும். எனவே அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதுதான் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சிறந்த வழி.

கட்டுக்கதை: தபால் மற்றும் கொரியர் மூலம் கொரோனா பரவுகிறது.

உண்மை : சுற்றுப்புற வெப்பநிலையில் நாட்கள் அல்லது வாரங்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் அல்லது கொரியர்கள் ஆகியவற்றிலிருந்து கொரோனா பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு.

திங்கள், 16 மார்ச், 2020

20 ஆண்டுகளுக்கு பிறகு 37,000 கி.மீ. பயணம் செய்து தனது இருப்பிடத்தை கண்டறிந்த ஆமை.! 

யாஷி எனப் பெயரிடப்பட்ட கடல் ஆமை ஒன்று 37,000 கிலோ மீட்டர் தூரம் கடலில் பயணம் செய்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை கண்டுபிடித்த நிகழ்வு இயற்கை ஆர்வலர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவிவருகிறது.

Loggerhead turtle's journey tracked 37,000km from Cape Town in South Africa to Australia

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானை சேர்ந்த மீன் பிடிக்கும் படகில் இருந்தவர்கள் முதுகு ஓடு உடைந்த ஆமை ஒன்றை கடலில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் அந்த ஆமையை சிகிச்சைக்காக தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் மாகாணத்தில் உள்ள கடல் உயிரினங்களை பரமாரிக்கும் பண்ணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த ஆமைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. யாஷி முழுமையாக குணமடைந்த பின்பு, அதனை கடலில் நீந்துவதற்கு பழக்கப்படுத்தியுள்ளனர். தொடக்கத்தில் நீந்துவதற்கு சிரமப்பட்ட ஆமை, ஆண்டுகள் செல்ல செல்ல நன்கு நீந்துவதற்கு ஆரம்பித்துள்ளது. 


ஆமை முழுமையாக குணமடைந்துவிட்டதை உணர்ந்த அதன் கண்காணிப்பாளர்கள் மற்றும் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் யாஷியை நிரந்தரமாக கடலில் விடுவதற்கு முடிவு செய்தனர். மேலும் யாஷியை தொடர்ந்து கண்காணிக்கவும் முடிவு செய்து அதனுடைய உடலில் செயற்கைகோள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவியையும் பொருத்தினர். மேலும் அதனை கடலுக்குள் விடுவிப்பதற்கு முன்பு தேவையான அனைத்து மருத்துவ சோதனைகளையும் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் விடப்பட்ட யாஷி என்ற பெண் ஆமை அதனுடைய இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்கியது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயணம் செய்த ஆமை 37,000 கிலோ மீட்டர்கள் கடந்து இறுதியாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கடற்கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் முட்டையிட்ட இடத்தை கண்டுபிடித்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தனது இருப்பிடத்தை ஆமை தேடி கண்டுபிடித்திருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சமூக வலைதளத்தில் இது குறித்து வெளியான செய்தியைப் பார்த்து இணையதளவாசிகள், யாஷியையும் அதன் விடா முயற்சியையும் பாராட்டி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக யாஷி பயணம் செய்த அனைத்து வழித்தடங்களும் ஆராய்ச்சியாளர்களால் கண்காணிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

சனி, 14 மார்ச், 2020

இந்தியா சென்று வந்ததில் இருந்து கை குலுக்காமல் வணக்கம் தெரிவிக்கிறேன் - டொனால்டு டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார்.

வாஷிங்டன் 

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரு நாட்டு தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அயர்லாந்து பிரதமர்  லியோ வரட்கருடன் கை குலுக்காமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்  வணக்கம் தெரிவித்தார். 

அயர்லாந்து பிரதமர் உடனான சந்திப்பின் போது கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்தது குறித்து  டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.  அதில் 

கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன்.  அண்மையில் தான் இந்தியாவில் இருந்து நான் திரும்பினேன். அங்கே அனைவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். அந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதால். இந்தியாவில் இருந்து வந்ததில் இருந்து கை குலுக்காமல்  வணக்கம்  தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார். 

அமெரிக்க ராணுவம் தான் வுகானுக்கு கொரோனாவை கொண்டு வந்தது - சீனா குற்றச்சாட்டு

பீஜிங்

கொரோனா வைரஸ் நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை கெடுத்துவருகிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம் இந்த நாடுதான் என, மற்றொரு நாட்டை சுட்டிக்காட்டி வருகின்றன. எங்கள் நாட்டில் கொரோனா பரவ ஜெர்மனிதான் காரணம் என  இத்தாலி கூறியது.

அமெரிக்க ராணுவம்தான் தங்கள் நாட்டுக்குள் கொரோனாவைக் கொண்டுவந்தது என சீன செய்தி தொடர்பாளர்  குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஓ பிரைன், சீனா வுகானில் இருந்து பரவிய கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு பதிலாக, அதை மூடி மறைப்பதிலேயே கவனம் செலுத்தியது.

அதனால், கொரோனாவை எதிர்கொள்வதற்கு உலகம் இரண்டு மாதங்களை செலவிடவேண்டியதாயிற்று என்றார். சீனாவிலும் உலகத்திலும் தற்போது நடக்கும் இந்த பயங்கரத்தை, அந்த இரண்டு மாதங்களுக்குள் பெருமளவில் குறைத்திருக்கலாம், கட்டுக்குள் கொண்டுவந்திருக்கலாம் என்றார் ஓ பிரைன் 

சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் ஜாவோ அமெரிக்கா தான் ஒளிவு மறைவில்லாமல் இருந்தது  என அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

லிஜியன் ஜாவோ கூறியதாவது:-

சில மூத்த அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறிய பல்வேறு தவறான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் வைரஸின் மூலத்தைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. இது ஒரு விஞ்ஞான பிரச்சினை என்று சீனா எப்போதும் நம்புகிறது மற்றும் அறிவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனை தேவை.

எப்போது அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எந்த மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்க ராணுவம்தான் வுகானுக்கு கொரோனாவையே கொண்டு வந்திருக்கவேண்டும்.

இதற்கு  விளக்கம் கொடுங்கள் என சுடச்சுட தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிகாரிகள் இப்படி கருத்துச் சொல்லிக்கொண்டிருப்பது எந்த வகையிலும் கொரோனா பரவுவதை தடுக்க உதவாது என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 மார்ச், 2020

சிக்மண்ட் ஃபிராய்ட் : சிறகுகள் விரிக்கும் கனவுகளின் ஆதிமூலத்தை அகழ்ந்தெடுத்தவர்!

சிக்மண்ட் ஃப்ராய்ட் என சுருக்குமாக அழைக்கப்படும் ‘சிக்சிமண்ட் ஸ்க்ளோமோ ஃப்ராய்ட்’, 1856ம் ஆண்டு இதேநாளில் அதாவது மே 6ஆம் தேதி ஆஸ்திரியாவின் ஃப்ரைபெர்க் எனும் ஊரில் பிறந்தார். உளவியல் பகுப்பாய்வு என்னும் கோட்பாட்டை முதன்முதலில் கொண்டுவந்த பெருமை ப்ராய்ட்டையே சேரும். 

நரம்பியல், உளவியல் மருத்துவம் மற்றும் உளவியல் பகுப்பாய்வு போன்ற துறைகளிலும் தனது ஆராய்ச்சிகள் மூலமாகவும், ஆய்வுகள் வழியாகவும் தனக்கென தனியிடத்தை சிக்மண்ட் ஃப்ராய்ட் உருவாக்கிக் கொண்டார்.

உளவியல் சிக்கலுக்குள்ளானவர்களை தனித்து பார்த்த அன்றைய மருத்துவ முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஃபிராய்ட், உளவியல் சிக்கலுக்கு உள்ளானோருடன் கலந்துரையாடல் மூலம் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து சிகிச்சை அளிக்கும் உளவியல் பகுப்பாய்வு முறையை உருவாக்கி ஃப்ராய்ட் புகழ் பெற்றார். உளவியல் துறையில் தனது பங்களிப்பிற்காய் 1930ஆம் ஆண்டிற்கான கோதே பரிசை பெற்றார்

1881ஆம் ஆண்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்ற ஃப்ராய்ட், 1885ஆம் ஆண்டு நரம்பு நோயியல் பிரிவில் சிறப்பு பட்டம் பெற்று 1902ஆம் ஆண்டு இணை பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 

கட்டற்ற தொடர்பு மற்றும் இடமாற்றீடு போன்ற கோட்பாடுகளை கொண்டுவந்து உளவியல் மருத்துவத்தில் புதிய கண்ணோட்டத்தை உருவாக்கினார் ஃபிராய்ட். இடிபஸ் மனப்பான்மை போன்ற பாலின உணர்வு ரீதியான உணர்ச்சிகளை ஆராய்ந்து பாலின பாகுபாடு குறித்த பார்வையை மறுவரையறை செய்தார்.

ஆழ்மனதில் அமுக்கப்பட்ட எண்ணங்களே வண்ணம் பெற்று கனவுகளாக வருகிறது என கூறினார் ஃப்ராய்ட். “லிபிடோ” என்னும் உணர்வுதான் எதிர்பாலின கவர்ச்சி, திரும்பத் திரும்ப ஒரு செயலை செய்யத் தூண்டும் எண்ணம், வெறுப்பு, ஆவேசம் மற்றும் ஒரு வகையான குற்ற உணர்வுக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறுகிறார். 

ஃப்ராய்ட் உருவாக்கிய இந்த முறைகளின் மருத்துவ நம்பகத்தன்மை, விஞ்ஞான முக்கியத்துவம் மற்றும் சமூகவியல் ரீதியில் இந்த கருத்துக்கள் பெண்ணியத்திற்கு சார்பானவையா அல்லது எதிரானவையா என்பன போன்றவை ஃப்ராய்டியம் குறித்து பெரிதும் விவாதிக்க கூடிய தலைப்புகளாக அமைகிறது. ஆடன் என்னும் கவிஞர் ஃப்ராய்டுக்காக எழுதிய கவிதையில், மக்களின் மனஓட்டத்தை காலநிலையைப் போல விளக்குபவர் ஃப்ராய்டு என புகழாரம் சூட்டியுள்ளார்.


செரிப்ரல் பால்சி என்னப்படும் நோயைப் பற்றியும் அதிகமாக ஆராய்ச்சி செய்தார் ஃப்ராய்ட். குழந்தை பிறக்கும் போது ஏற்படும் பிராணவாயு குறைபாடால் தான் இந்த நோய் வருகிறது என்ற தவறான நம்பிக்கையை உடைத்து, அந்த நோய் இருப்பதற்கான அறிகுறியாகவே குழந்தைப் பிறப்பின் போது உள்ள சிக்கலை பார்த்தார். 

1890 ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் இளவயதில் ஏற்பட்ட பாலியல் பிரச்சினைகளை பற்றி கூறியதால் அது குறித்த ஆய்வில் ஈடுபடும் போது இடிபஸ் மனப்பான்மையை முக்கியத்தன்மையை கண்டறிந்தார். கொகைன் மன மற்றும் உடல் ரீதியான பல உபாதைகளுக்கும் தீர்வாக அமையும் என நம்பிய ஃப்ராய்ட், 1884ஆம் ஆண்டு “On Coco" என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். 

இதே போல 1883 முதல் 1887 ஆம் ஆண்டு வரை எழுதிய கட்டுரைகளில் கொகைன் ஒரு மன அழுத்தத்தை ஒழிக்கும் நிவாரணி என கூறினார். கொகைன், மார்ஃபைன் என்னும் போதை பழக்கத்தை மாற்ற வல்லதாக இருக்கும் என்ற நோக்கில் ஃப்ராய்ட் செய்த சோதனை தோல்வியில் முடிந்த காரணத்தால், அறிவியல் பூர்வமாக அவரின் கொகைன் தொடர்பான கூற்றை நிரூபிக்க முடியவில்லை. 

நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களை நாம் மறந்தாலும், ஆழ்மனதில் தங்கியுள்ள அது கனவுகளாக வருவதாகவும், சுயநினைவுகளில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் வழியாக வெளிப்படும் எனவும் ஃப்ராய்ட் கூறினார். செயற்கையாக அந்த எண்ணங்களை வெளிக்கொண்டுவர மனோவசியம் (hypnosis) பயன்படுகிறது. இதை குறித்து ஃப்ராய்ட் "The Interpretation of Dreams" மற்றும் "Jokes and their Relation to the Unconscious" என்னும் நூலில் விளக்கமாக கூறியுள்ளார்.

பாலுணர்வு தொடர்பான அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் இடிபஸ் மனப்பான்மை அடித்தளமாக அமைந்துள்ளது. “Eros"என்னும் உணர்வு வாழ்வதற்கான உத்வேகத்தை தருவதாகவும்  "Thanatos" என்னும் உணர்வு நம் பிரச்சினையை முழுமையாக குறைக்க வேண்டும் என்னும் எண்ணத்தையும் தருவதாக கூறுகிறார். 

1917ஆம் ஆண்டு "Mourning and Melancholia" என்னும் கட்டுரையில் கவலைப்படுவதின் வகைகளைக் குறித்து கூறியுள்ளார். இவர் கூறிய சில கருத்துக்கள் ஆணாதிக்கம் மிகுந்ததாக கூறி பெண்ணியவாதிகள் எதிர்த்தனர். மனிதர்கள் கடவுளை பின்பற்றுவது, அவர் மீது உள்ள நம்பிக்கையினால் என கூறுவதை விட தன்னை சுற்றியுள்ள உலகத்தின் மீதான பயத்தினால் தான் என்பதே கடவுள் மீதான ஃப்ராய்டின் கருத்து.

1938ஆம் ஆண்டு நாசிப்படைகளிடம் இருந்து தப்பிக்க ஆஸ்திரியாவை விட்டு வெளியேறிய அவர், 1939ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். உளவியல் துறையில் தான் ஏற்படுத்திய மாபெரும் தாக்கத்திற்காக இன்றளவும் சிக்மண்ட் ஃபிராய்ட் நினைவுக் கூறப்படுகிறார்

புதன், 11 மார்ச், 2020

பேச்சுவார்த்தைக்காக ரஷியா வந்த துருக்கி அதிபரை அவமதித்தாரா புதின்?

மாஸ்கோ, 
சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடிக்கிறது. இதில் சிரியா அரசு படைக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது.

இது தொடர்பாக ரஷியாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் இத்லிப் மாகாணத்தில் நடத்திவரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென ரஷியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இதையடுத்து, கடந்த 5-ந்தேதி ரஷியா சென்ற தயீப் எர்டோகன் அந்த நாட்டு அதிபர் புதினை நேரில் சந்தித்து சிரியா விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

அதன் முடிவில் இத்லிப் மாகாணத்தில் உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன் அடிப்படையில் இத்லிப் மாகாணத்தில் தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், சிரியா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த துருக்கி அதிபர் எர்டோகனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் புதின் அவரை காக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகைக்கு வந்த துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் அந்த நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளை புதின் இருந்த அறைக்குள் உடனடியாக அனுமதிக்காமல் கதவுக்கு அருகே நிற்கவைத்தனர். சுமார் 1½ நிமிடம் அப்படியே நின்று கொண்டிருந்த எர்டோகன் பின்னர் அங்கு கிடந்த நாற்காலியில் அமர்ந்தார். சரியாக 2 நிமிட காத்திருப்புக்கு பிறகு அவர் அந்த அறைக்குள் அனுமதிக்கப்பட்டார்.

எர்டோகன் அதிகாரிகளுடன் அறைக்கு வெளியே காத்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் எதிரொலி: உலக பொருளாதாரத்துக்கு ரூ.148 லட்சம் கோடி இழப்பு - ஐ.நா. கணிப்பு

நியூயார்க், 

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது.
இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் வலுத்து வருகிறது.

உலக அளவில் இந்த வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருவதில், இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் இப்படி ஆதிக்கம் செலுத்தி வருவது உலக பொருளாதாரத்தில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உற்பத்தி துறை மந்தமாகி உள்ளது. சுற்றுலாத்துறை முடங்கி உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி பாதித்துள்ளது. உலகளாவிய வர்த்தகம் மந்த நிலையை அடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் அது உலக பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.148 லட்சம் கோடி) இழப்பை ஏற்படுத்தும் என்று ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கணித்துள்ளது.

இதையொட்டி, ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், மனித இழப்புகளைத் தவிர அதைத் தாண்டிய பொருளாதார நிச்சயமற்ற நிலைமையால் 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.74 லட்சம் கோடி) இந்த ஆண்டில் இழப்பு ஏற்படும்.

முதல் கட்ட மந்த நிலையை பார்க்கிறபோது, அது உலக பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.148 லட்சம் கோடி) அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் வளர்ந்து வரும் நாடுகளில் மட்டுமே 220 பில்லியன் டாலர் (சுமார் ரூ.16 லட்சத்து 28 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும். இதில் சீனா சேர்க்கப்படவில்லை.

தற்போதைய நிலையில் மிக மோசமான பொருளாதார சூழலை சந்திக்கிற நாடுகள் என்று பார்த்தால், அவை கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிற நாடுகள்தான்.

மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்கிற நாடுகளும் 1-க்கு மேற்பட்ட சதவீத வளர்ச்சியை இழக்க நேரிடும்.

கனடா, மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 0.7 சதவீதம் முதல் 0.9 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு கூறி உள்ளது.

கடந்த வாரம், ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம், கொரோனா வைரஸ் பாதித்துள்ள நிலையில், இந்தியாவில் 348 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2575 கோடி) அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் என கணித்து கூறியது.

சீனாவில் உற்பத்தி துறை பாதித்துள்ளதால், அது உலக வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் 15 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியது.