செவ்வாய், 4 ஜூன், 2019

இந்தியாவில் உருவாகிறது உலகின் மிக உயரமான சிவன் சிலை...!

Statue of Belief என்று அழைக்கப்படும் 351 உயர சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டப்பட்டுவருகிறது.

182 மீட்டர் உயரத்திலும், சுமார் 3000 கோடி செலவிலும் குஜராத்தில் கட்டப்பட்ட வல்லபாய் பட்டேல் சிலை, உலகின் மிக உயரமான சிலை என கருதப்படுகிறது. பெரும் பொருட்செலவுடன் கட்டப்பட்ட இச்சிலையைக் காண தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் நத்ட்வாரா (Nathdwara) என்ற பகுதியில் 351 அடி உயர சிவன் சிலை ஒன்று கட்டப்பட்டுவருகிறது. 2,500 டன் ஸ்டீல்-ஐ வைத்து கட்டப்பட்டுள்ள இந்த சிலையின் கட்டுமானப்பணி, வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.


20 அடி, 110 அடி, 270 அடி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, சுற்றுலாப்பயணிகள் பார்ப்பதற்காக Lift வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், Statue of Unity, Spring Temple Buddha போன்ற சிலைகளை தொடர்ந்து உலகின் நான்காவது பெரிய சிலையாக இந்த சிவன் சிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Mirage Constructions குழுமத்தினரால் கட்டப்பட்டு வரும் இந்த சிலையின் கட்டுமானப்பணி, 2013ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி தொடங்கப்பட்டது. 750 பணியாளர்கள் இந்த சிலையின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவன் சிலைக்கு முன்னர், 25 அடி உயர நந்தி சிலையும் கட்டப்பட்டுள்ளது என Mirage குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.