திங்கள், 24 ஜூன், 2019

செல்போனால் தலையில் கொம்பு முளைக்கும்...! விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்!

செல்போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டு, தலையில் கொம்பு முளைப்பதாக, விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

Horns Are Growing on Human Skulls Because of Phone Use—Here's How that Happens

ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துபவர்களின் மண்டை ஓட்டின் பின்புறம் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

மேலும், அதிக நேரம் குனிந்தபடியே செல்போனை பயன்படுத்துவதால் தலையின் மொத்த எடையும், முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாற்றப்படுகிறது. இதன் காரணமாக தசை நார்கள் வளர்ந்து, மண்டை ஓட்டின் பின்புறம் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்திவரும் தற்போதைய காலகட்டத்தில், செல்போன் பயன்படுத்தினால் தலையில் கொம்பு முளைக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

சனி, 22 ஜூன், 2019

60 சதவீதம் பாலைவனம் மட்டுமே கொண்ட நாடு, நீர்மேலாண்மையில் சிறந்து விளங்குவது எப்படி?

இஸ்ரேலில் இருப்பதுபோன்ற தண்ணீர் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு யோசனை சொல்லிருக்கிறார் ஸ்டாலின்.... நீர்மேலாண்மைக்கு உலகளவில் பெயர் பெற்ற இஸ்ரேல் எப்படி இந்த நிலையை அடைந்தது? 

இஸ்ரேல் ஒன்றும் தமிழ்நாட்டைபோல பசுமையான வளங்கள் மிகுந்த பகுதி கிடையாது. நாட்டில் 60 சதவீதம் பாலைவனம் மட்டும்தான், சுட்டெரிக்கும் வெயில், வடக்கு பகுதிக்கு மட்டுமே பொழியும் மழை... இன்று தமிழகம் சந்திக்கும் தண்ணீர் பஞ்சத்தைவிட 1000 மடங்கு அதிகமான பஞ்சம்.. அப்படிப்பட்ட நாடு இன்று தண்ணீரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளக்கு வளர்ந்திருக்கிறது? இது எப்படி சாத்தியமானது? 

1959 ஆம் ஆண்டிலேயே, நீர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி நீர்வளங்களை பொதுச் சொத்தாக மாற்றியது இஸ்ரேல்.  விவசாயத்திற்கு போதுமான நீர் விநியோகம் செய்வது, குடிப்பதற்கு மற்றும் மக்கள் உபயோகப்படுத்த தேவையான தண்ணீரை தங்கு தடையில்லாமல் விநியோகிப்பது, இவைதான் இந்த சட்டத்தின் முக்கியமான நோக்கம்... இந்த சட்டம் மூலமாக நீர்வளங்கள் சுரண்டவது தடுக்கப்பட்டதோடு, தண்ணீர் ஒதுக்கீடும்  ஒழுங்குபடுத்தப்பட்டது.

2010 ம் ஆண்டு இஸ்ரேலின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவை, 24 லட்சத்து 80ஆயிரம் கோடி லிட்டர். ஆனால்,  2020ம் ஆண்டில் 26  லட்சத்து 80 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதை முன்னரே கணித்து பல திட்டங்களை வகுத்து நீர் தேவை பூர்த்திசெய்யவிருக்கிறது.

இஸ்ரேல் கொண்டுவந்த சிறந்த திட்டங்களில் முதன்மையானது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். உலகிற்கே இந்த திட்டத்தில் இஸ்ரேல் முன்னோடியாக திகழ்கிறது.  மொத்த குடிநீர் விநியோகத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் 50 சதவீதமும், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் 40 சதவீதமும், நீர்நிலைகளில் இருந்து 10 சதவீதமும் பெறப்படுகிறது. இதன்மூலமாக நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 97 சதவீத மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது இஸ்ரேல்.

வேளாண்மையில் சொட்டு நீர் பாசன முறையை உருவாக்கி, அதை வெற்றிகரமாக பயன்படுத்திய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இஸ்ரேல். குடிநீர் குழாய்களில் ஏற்படும் சிறு துளைகள் மற்றும் உடைப்புகளை உடனடியாக கண்டறிந்து, அதை ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ரோபாக்களின் உதவியுடன் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுகிறது. இதன்மூலம் தண்ணீர்  வீணாவது 25%-75%  தடுக்கப்படுகிறது. 

இதோடு மட்டுமில்லாமல், இஸ்ரேல் முழுவதிலும் மொத்தம் 120 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 90 சதவீத கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. பாலைவனத்தில் செயற்கை ஏரியை உருவாக்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சேமித்து வேளாண் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த திட்டங்களால்  தண்ணீர் பிரச்சனைகள் தீர்ந்ததோடு மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது...  நீர் மேலாண்மைக்கான உபகரணங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்வதில் மட்டும் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடப்பதாக தெரிவிக்கின்றன புள்ளிவிபரங்கள்... 
 
இதெல்லாம் சாத்தியப்பட இஸ்ரேலுக்கு சுமார் 70 ஆண்டுகள் ஆகிருக்கிறது. இந்த திட்டங்களை தமிழ்நாடு இப்போது உடனே செயல்படுத்தினால் இன்னும் 70 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சமே வராது என்று கணிக்கின்றனர் நீர்மேலாண்மை வல்லுநர்கள்... 

திங்கள், 10 ஜூன், 2019

அதிக அளவில் உருகும் ஆர்டிக் பனிப்பாறைகள்... மனித சமூகத்துக்கு அச்சுறுத்தலா? 

ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகுவது, உலகிற்கு விடுக்கப்பட்ட அபாயம் என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

பருவநிலை மாறுபாடுகள் காரணமாக, ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருவது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிக் பகுதியில் கடந்த 1990 ஆண்டுகளில் காணப்பட்ட பனிப்பாறைகள் வெப்பமாதல் காரணமாக தற்போது மூன்று மடங்கு அளவிற்கு உருகியுள்ளதாகவும், இதனால், கடல் மட்டம்  மிக வேகமாக உயர்ந்து வருவதையும் அறிவியல் வல்லுநர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். தற்போது ஆர்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப நிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது. 

இது குறித்து சுற்றுச்சூழல் அறிஞர்கள் மேற்கொண்ட சோதனையில், உலக வெப்பமாதல் காரணமாக காற்றுப்பரப்பு வெப்படைந்து பனிக்கட்டி உருகி  கார்பன்டை ஆக்சைடு,  ஆக்ஜினாகவும் வெளிப்படுவதும், நீரில் வளரும் சிறிய மீன் வகைகளை பெரிய வகை மீன்களும்,  போலார் கரடிகளும்  உணவாக உட்கொள்ளும் வாழ்க்கை சுழற்சி முறையிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்துள்ளதை கண்டறிந்துள்ளர்.  பருவ நிலை மாறுபாடுகளால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை தடுத்திடும் நடவடிக்கைகளை, இனியும் காலம் தாழ்த்தாமல்  உலக நாடுகள் முன் எடுத்து செல்ல  வேண்டிய அவசியத்தை  இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 

சமீப காலமாக இப்பகுதியில் வசிக்கும் போலார் கரடிகளின், வாழ்வியல் நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.  உணவிற்காக இடம்பெயர்ந்திடும் அவலமும், அவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தும் வருகிறது.  இப்பகுதி வாழ்வியல் விலங்குகளின்  உணவு சங்கிலி பாதிப்பு,  இனி வருங்காலங்களில் உலகில் உள்ள மற்ற உயிரினங்களிடமும் பிரதிபலிக்கும் என்ற அறிவியல் வல்லுஞர்களின் கூற்றையும் மறத்து ஒதுக்கி விட இயலாது. 

வெப்பநிலை உயர்வின் காரணமாக  ஆர்டிக் துருவப்பகுதியில் அதிகளவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, ஆசியாவின் வங்க தேசத்தையும், அமெரிக்காவின்  ஃப்ளோரிடா உள்ளிட்ட நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கடுத்துவிடும் என்ற அபாயகரமான கணிப்புகளும் வெளியாகியுள்ளது. இது தொடர்ந்து இறுதியில், உலகம் முழுவதும் உள்ள 80 முதல்  90 சதவிகித மக்களும் பலியாவார்கள் என்பதும்,  ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும்  என்ற அதிர்ச்சி அறிக்கையும் வெளியாகியுள்ளது. உலகம் எதிர்கொள்ளும் இந்த அபாயத்தை, உலக மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். 
 

வெள்ளி, 7 ஜூன், 2019

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை.

இந்திய மத்திய அரசாங்கத்தின் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில், தமிழகத்தில் இரண்டு மாணவிகள் தற்கொலை.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக புள்ளிகளில் சித்தியடைந்த திறமைசாலிகள் நீட் தேர்வு மூலமாக வருடாவருடம் உயிரிழப்பது வேதனைக்குரியது.

* இது இலங்கையில் சுதந்திரத்திற்கு பிற்பாடான ஈழ தமிழ் மாணவர்கள் மீது இழைக்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடும், அநீதியும், அதன் பிற்பாடான புரட்சி வரலாற்றையுமே நினைவு படுத்துகின்றது.

#இந்தியா #நீட் #தமிழகம்

இனவெறியை ஒழிக்க யூடியூப் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை -அமலுக்கு வந்தது

இனவெறியை தூண்டும் வீடியோக்களை தடை செய்வதாக யூடியூப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

வாஷிங்டன்:

சமூக வலைத்தளங்களில் ஒரு இனம் உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்பது போன்ற இனவெறி மிகுந்த வீடியோக்கள் அதிகம் வலம் வருகின்றன. இந்த வீடியோக்களுக்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

யூடியூப் நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையை கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும் ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் வீடியோக்களை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உடனடியாக அமலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமலுக்கு வந்துவிடும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து மசூதிகளில் நடைபெற்ற தாக்குதல் நேரலையாக யூடியூபில் ஒளிபரப்பானதையடுத்து, உலக தலைவர்கள் சமூக வளைத்தளங்கள் மூலம் பரவும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து பல்வேறு சமூக வலைத்தளங்கள் தாமாக முன்வந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடிய ஆண் நர்ஸ்

ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர் 100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடியுள்ளார்.

தமிழ் படமொன்றில் நடிகர் வடிவேலுவிடம், வாங்க.  செத்து செத்து விளையாடலாம் என நடிகர் முத்துக்காளை கூறுவது போன்று காட்சிகள் இருக்கும்.  ஆனால் ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையில் நோயாளிகள் 100 பேரை சாகடித்து விளையாடியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் ஆண் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நீல்ஸ் ஹீகெல் (வயது 42).  கடந்த 2000 மற்றும் 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் கிளினிக் மற்றும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபொழுது, 100 நோயாளிகளை கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இவர், நோயாளிகளை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடுவார்.  எப்படி எனில், மாரடைப்பு ஏற்படுத்தும் வகையிலான மருந்துகளை கொண்டு ஊசி போட்டு விடுவார்.  இதற்காக அஜ்மலைன் என்ற மருந்தினை பயன்படுத்தி உள்ளார்.  இது தெரியாமல் சிறிது நேரத்திற்கு பின் நோயாளி துடிக்க ஆரம்பித்து விடுவார்.  பின்னர் அவரை மரணத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் நீல்ஸ் ஈடுபடுவார்.

சீருடை அணிந்து, ஒவ்வொரு அறையாக சென்று, யாருக்கும் தெரியாமல் இந்த பணிகளை செய்த நீல்ஸ் தொடர் கொலைகாரராக இருந்துள்ளார்.  

இவரால் காப்பாற்றப்படும் சிலருக்கு இவர் கடவுளாக இருந்துள்ளார்.  ஆனால் இந்த முயற்சியில் பெருமளவிலான நோயாளிகளின் உயிரை நீல்சால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.  கடந்த 2005ம் ஆண்டு வரை இவரது இந்த சேவை தொடர்ந்துள்ளது.  இதன்பின்பே சக பணியாளர்கள் இவரை பற்றி அறிந்து அதிர்ந்துள்ளனர்.

இதுபற்றிய வழக்கு விசாரணையில் இதுவரை 97 பேரை நீல்ஸ் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.  மற்ற 3 வழக்குகளில் போதிய சான்றுகள் இல்லை.  இவர்களில் 55 பேரை கொலை செய்தது பற்றி விசாரணையில் நீல்ஸ் ஒப்பு கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர் கூறும்பொழுது, கடந்த காலங்களில் நான் செய்ததற்காக நோயாளி ஒவ்வொருவரிடமும் உண்மையில் மன்னிப்பு கோரி கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.  

இதற்கு முன் நடந்த விசாரணை ஒன்றில், நர்ஸ் பணியில் அலுப்பு தட்டியது.  வழக்கல்போல் பணியாற்றுவதில் சவால் எதுவும் இல்லை.  அதனால் பரவசம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள முயன்றேன் என நீல்ஸ் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விசாரணை முடிவில், நீங்கள் மட்டுமே வெற்றி பெறும் மற்றும் அனைத்து நபர்களும் தோல்வி மட்டுமே அடைய கூடிய விளையாட்டு ஒன்றில் நோயாளிகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என நீதிபதி பர்மன் கூறியுள்ளார்.

அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்தினால் நினைவாற்றல் பாதிப்பு : ஆய்வில் தகவல்

அதிக அளவு இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் நினைவாற்றல் பாதிப்பு அடையும் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.

அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்துபவர்களின்  நினைவாற்றல் அதிக அளவு பாதிக்கப்படும்  என  கண்டறிந்து உள்ளனர்.

 அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்டவர்களின்  நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.  இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள்  உலக மனநல பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை  பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.

"இன்டர்நெட்டிலிலுள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் உங்களின்  கவனத்தை தொடர்ந்து  திசைதிருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது. வேறு ஒரு பணியில்  கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும்" என ஜோசப் பிர்த் கூறி உள்ளார்.

தேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நமது மூளையில் சேர்த்து வைக்கவேண்டிய தேவை இல்லை. கூகுள் தேடலிலும் , விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன் அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என கூறினார்.

எவரஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்களை அகற்றிய நேபாள அரசு!

எவரஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்களை நேபாள அரசு அகற்றியுள்ளது.

எவரஸ்ட் சிகரத்தில் உள்ள கழிவு பொருட்களை அகற்றும் நோக்கில் நேபாள ராணுவத்தினர் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து அங்கு முகாமிட்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சுத்தம் செய்யும் பணியில் மலையேறும் பயணிகள் தூக்கி எரிந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள், உணவு கழிவுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இங்கு அகற்றப்பட்ட சில கழிவு பொருட்கள் மறு சுழற்சிக்காக  ஐநா அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. இந்த பணியில் 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்கள் அகற்றப்பட்டது குறிப்பிடதக்கது

செவ்வாய், 4 ஜூன், 2019

இந்தியாவில் உருவாகிறது உலகின் மிக உயரமான சிவன் சிலை...!

Statue of Belief என்று அழைக்கப்படும் 351 உயர சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டப்பட்டுவருகிறது.

182 மீட்டர் உயரத்திலும், சுமார் 3000 கோடி செலவிலும் குஜராத்தில் கட்டப்பட்ட வல்லபாய் பட்டேல் சிலை, உலகின் மிக உயரமான சிலை என கருதப்படுகிறது. பெரும் பொருட்செலவுடன் கட்டப்பட்ட இச்சிலையைக் காண தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இந்நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலம் நத்ட்வாரா (Nathdwara) என்ற பகுதியில் 351 அடி உயர சிவன் சிலை ஒன்று கட்டப்பட்டுவருகிறது. 2,500 டன் ஸ்டீல்-ஐ வைத்து கட்டப்பட்டுள்ள இந்த சிலையின் கட்டுமானப்பணி, வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.


20 அடி, 110 அடி, 270 அடி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, சுற்றுலாப்பயணிகள் பார்ப்பதற்காக Lift வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், Statue of Unity, Spring Temple Buddha போன்ற சிலைகளை தொடர்ந்து உலகின் நான்காவது பெரிய சிலையாக இந்த சிவன் சிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Mirage Constructions குழுமத்தினரால் கட்டப்பட்டு வரும் இந்த சிலையின் கட்டுமானப்பணி, 2013ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி தொடங்கப்பட்டது. 750 பணியாளர்கள் இந்த சிலையின் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவன் சிலைக்கு முன்னர், 25 அடி உயர நந்தி சிலையும் கட்டப்பட்டுள்ளது என Mirage குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.