வெள்ளி, 16 ஜூன், 2017

மர்மம் நிறைந்த குள்ளர்கள் - நெல்லிஸ் குயா

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு மலைகளும், காடுகளும், எரிமலைகளும், மர்மங்களும் நிறைந்த அதிசய தீவு. புளோரஸ் தீவில் அழகுடன், அறிவியல் அதிசயங்களும் மறைந்துள்ளன. இங்குள்ள பழங்குடியின சந்ததியினர் 'நெல்லிஸ் குயா' என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர்களின் பட்டியலில் புளோரஸ் தீவின் 'நெல்லிஸ் குயா' மக்களும் இடம் பிடித்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சிகளுக்காக, உலக ஆராய்ச்சி யாளர்கள் புளோரஸ் தீவில் முகாமிடுவது வழக்கம். அப்படி செல்லும் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்குள்ள பழங்குடியின மக்கள், விசித்திர குள்ள மனிதர்களின் கதைகளையும் கூறுகின்றனர்.

'புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும், உடல் முழுவதும் ரோமம் மூடியும் காணப்படும். 

மற்றவர்களுக்கு புரியாத மொழியும் பேசுவார்கள். குள்ளர்கள் பழங்குடியின கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருட்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை 'எபுகோகோ' என்று மூதாதையர்கள் அழைப்பார்கள்' என்று விசித்திர குள்ளர்களின் கதை நீள்கிறது.

இதுபோன்ற கதை புளோரஸ் தீவில் மட்டுமல்லாமல், இந்தோனேஷியாவின் ஏராளமான கிராமங்களிலும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் 'பழங்குடியின மக்களின் கற்பனை' என்று புறந்தள்ளப்பட்ட இந்த குள்ளர்களின் கதை, தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராமத்தில் இருந்து சுமார் 75 மைல் தொலைவில் ஒரு குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை சேர்ந்த தொல் பொருள் ஆய்வுக் குழுவினர், டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தலைமையில் அந்தக் குகையை ஆராய்ந்தனர். அப்போது 19 அடி ஆழத்தில் சிறிய உருவத்திலான எலும்பு கூடுகளுடன், பல மிருகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதினர். ஏனெனில் இதன் மொத்த உயரமே மூன்று அடிதான். குழந்தையின் எலும்புக்கூடு என்ற கோணத்திலே ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களுக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.

பழங்குடியின மக்கள் கூறிய கதைகளை ஒப்பிட்டு பார்த்த ஆராய்ச்சியாளர்கள், சிறிய அளவிலான எலும்புகூட்டை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் இதுவரை யாரும் அறியாத புதிய மானிட இனத்தின் எலும்பு கூடுகள் அவை என்பதை உணர்ந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயது பெண்ணுடையது.

விரிவான ஆராய்ச்சியில், இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோ மட்டுமே. மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும், சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்களை போன்றே குள்ளர்களும் வேட்டையாடுதல், வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம், ஒளிந்திருந்து தாக்குதல், பதுங்குதல் போன்றவற்றையும் சிக்கலான சிறிய அளவு மூளைகளை கொண்டே நிகழ்த்தி உள்ளனர். கண்டெடுக்கப்பட்ட 3 அடி உயர பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது பற்றி டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் கூறும் பொழுது, 'மனித வரலாற்றில் 18 ஆயிரம் ஆண்டுகள் என்பது நெருக்கமான ஒன்று தான். இந்த குள்ள மனிதர்கள் இன்றும் கூட, அடர்த்தியான காடுகளில் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இந்தப் புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம். புளோரஸ் தீவு நாலாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது. முக்கியமாக இதன் அருகில் உள்ள பாலி தீவில் இருந்து லம்போக் தீவு, முப்பது கீலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த இரண்டு தீவுகளுக்கும் இடையே “சேப்” என்று அழைக்கப்படும் ஆபத்தான கடல் நீரோட்டமும் ஓடுகிறது. எனவே பாய்மரக் கப்பல் அல்லது இயந்திரப் படகு மூலமாகவே இக்கடல் பகுதியைக் கடக்க முடியும். எனவே கற்கால மனிதர்கள் எப்படி இந்த ஆபத்தான கடல் பகுதியைக் கடந்து புளோரஸ், திமோர் ஆகிய தீவுகளுக்கும், ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் சென்றிருக்க முடியும் என்பது என்னை போன்ற ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் குழப்பமாகவே உள்ளது. இதற்கு இந்தியா-இலங்கை நாடுகளை உதாரணமாக கொள்ளலாம்.

மண்டை ஓடை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்ட பெண்ணின் உருவம்


இந்தியா-இலங்கை நாடுகளிலும் கற்கால மனிதர்களின் எலும்புகளும், கற்கால கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரு நாடுகளுக்கும் இடையே அறுநூறு அடி ஆழமுள்ள கடல் உள்ளது. ஆனால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்சென்று பார்த்தால், கடல் நீர் மட்டத்தின் அளவுகள் ஆட்டம் காண்கின்றன. ஏற்றமும் இறக்கமுமாக இருக்கின்றன. நீர்மட்டத்தின் வீழ்ச்சியையும், அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கொண்டு கண்டங்களை தாண்டி இருக்கலாம். அதன் பிறகு பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்ததால், இடம்பெயர்ந்த கற்கால மனிதர்கள் அந்தந்த தீவுகளை தங்களுக்கான இருப்பிடமாக கொண்டு வாழ்ந்துள்ளனர். இதுவே குள்ளர்களின் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டும். கடல் நீர் மட்டம் குறைந்த போது, இந்தோனேஷியாவை சுற்றியிருந்த குட்டி தீவுகளுக்கு சென்றிருக்கலாம். வேட்டையாட தெரிந்தவர் களுக்கு கடல் தாண்ட தெரியாதா?.

மேலும் சுனாமி பேரலைகளால் தீவில் ஒதுங்கிய பெரிய மரங்களை கொண்டு படகு மாதிரியிலான ஒன்றையும் உருவாக்கி இருக்கலாம். இதன் மூலமாக கூட கடல் தாண்டிஇருக்கலாம். அப்படி தான் புளோரஸ், திமோர், பாலி ஆகிய தீவு பகுதிகளுக்கு சென்றிருப்பார்கள். ஏன் இன்று நம்மால் காண இயலாத சிறு தீவுகளிலும் கூட குள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். கைவிடப்பட்ட தீவில் சராசரி மனிதர்கள் நின்றாலே நமக்கு தெரியாத பட்சத்தில், குள்ளர்கள் மட்டும் எப்படி தெரிய வாய்ப்பிருக்கிறது' என்று ஆதாரங்களை திட்டவட்டமாக அறிவித்தார்.

இவரின் கூற்றுகளை ஏற்றுக்கொண்டிருக்கும் உலக ஆராய்ச்சியாளர்கள், குள்ள மனிதர்களை தேடும் ஆய்வில் இறங்கியுள்ளனர். குள்ள மனிதர்களின் வரலாற்றை நன்கறிந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தோனேஷியாவின் வரலாற்றை திருப்பி பார்த்து, அதன் நில அமைப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கத்தில் ஆசிய கண்டத்தில் இருந்து பிரிந்த கண்டங்களை வகைப் படுத்தி, அதன் மூலம் குள்ள இனத்தவரை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

'ஆசியக் கண்டத்திற்கும், ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கும். அதன் வழியாகவே கற்கால மனிதர்கள் ஆசியக் கண்டத்திலிருந்து, ஆஸ்திரேலியக் கண்டத்திற்கு நடந்தே தான் சென்றிருப்பார்கள். அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்திருக்கும்.

அதே நேரத்தில் நிலப் பகுதியும் ஆங்காங்கே உயர்ந்ததால், தொடர்ச்சியாக இருந்த நிலப் பகுதி பல துண்டுகளாக உடைந்ததுடன், கடல் மட்டமும் உயர்ந்ததால் பல தீவுகளாக உருவானது. அதனால் கற்கால மனிதர்களால் தீவை விட்டு வெளியேற இயலாமல் தீவுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இறந்து போயிருப்பார்கள்' என்று குள்ள மனிதர்கள் குறித்து யூகமாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கதைக்கான முழுவடிவம் இன்னும் ஆராய்ச்சிக்குள்தான் இருக்கிறது. குள்ள மனிதர்களுக்கான விடை கிடைக்குமா? என்ற கேள்வியுடன் கண்டங்களையும், தீவுகளையும் உலக ஆராய்ச்சியாளர்கள் புரட்டிப் போட்டு வருகின்றனர்.