வெள்ளி, 16 ஜூன், 2017

சாகாவரம் தரும் செயற்கை நுண்ணறிவு! - (IARP)

மனிதர்களின் உயிர்காக்கும் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு செயற்கை உடல் உறுப்புகள் உற்பத்தி, மனிதர்களுக்கு நிகரான ரோபாட் வடிவமைப்பு என விஞ்ஞானம் அசத்திக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும், ‘மனிதர்கள் நூறு வருடம் வரை வாழ முடியுமா?’ என்ற சந்தேகம் நிலவத்தான் செய்கிறது. ஏனென்றால், மனிதனின் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடும் பல்வேறு வகையான நோய்கள், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு என பல்வேறு காரணங்களால் உள்ளன. இதனால் மனிதனின் நீண்டகால வாழ்க்கை என்பது ஒரு கனவாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, முதுமை என்பது உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு என்றாலும் கூட, அது ஒரு குணப்படுத்தக் கூடிய நோய் போன்றதுதான் என்றே பெரும்பாலான விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

அதன் காரணமாக, முதுமையைக் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் இதுவரை பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். உதாரணமாக, சிலர் முதுமையைக் குறைக்கவும், பலர் முதுமையை முற்றிலும் தடுக்கவும் முயன்று வருகின்றனர்.

முதுமையை முற்றிலும் தடுத்து, மனித ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அத்தகைய வழிகளுள் ஒன்றுதான், உயிர் ஆதாரமான ஸ்டெம் செல்களில் மரபணு மற்றும் உயிரணு அளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் முதுமையைத் தடுக்கும் தொழில்நுட்பம். இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சில புரதங்களின் இளமையை நீட்டிக்கும் திறன்கள் சமீப காலமாக பரிசோதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், வேறு சில விஞ்ஞானிகள் குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி முதுமையை தடுக்க முடியும் என்கின்றனர்.
இவர்களை எல்லாம் மிஞ்சுவது போல் உள்ளது புதிய ஆய்வு ஒன்று.

சர்வதேச மூப்பு ஆய்வுப் பிரிவு மற்றும் உயிர் முதுமையியல் ஆய்வு நிறுவனம் (Aging Research Portfolio (IARP) and Biogerontology Research Foundation) ஆகியவற்றின் இயக்குனராகவும், உயிர் தகவலியல் நிறுவனமான (மிஸீவீறீவீநீஷீ Medicine) இன்சிலிகோ மெடிசினின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இயங்கிவரும் அலெக்ஸ் சாவோரோங்கோ இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.
அதாவது, ‘செயற்கை நுண்ணறிவைக் கொண்டு முதுமையை வெல்ல முடியும்’ என்கிறார் விஞ்ஞானி சாவோரோங்கோ. வாழ்க்கை நீட்டிப்பு வழக்குரை நிறுவனத்திற்கு (லிவீயீமீ Extension Advocacy Foundation (LEAF) சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில், முதுமை மற்றும் அது தொடர்பான நோய்கள் மீதான இன்சிலிகோவின் சமீபத்திய ஆய்வுகளைப் பற்றிய விளக்கியுள்ளார். அதில், உடல் வளர்ச்சி, முதுமை மற்றும் புற்றுநோய் வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய மூலக்கூறு சமிஞ்ஞைத் தடங்களை ஆய்வு செய்யக்கூடிய ஆன்கோ பைண்டர் எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கியல் வழிமுறைகள் (அல்காரிதம்) போன்றவற்றின் உதவியுடன் மனித செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தவும், முதுமை தொடர்பான நோய்களை குணப்படுத்துவதுமே தங்களுடைய நீண்டகால குறிக்கோள் என்கிறார் சாவோரோங்கோ.

முக்கியமாக, மனித உடலின் ஆரோக்கிய நிலையை ஒரு ஆய்வு மாதிரியாக உருவாக்கி அதனை தொடர்ந்து கண்காணித்து, அதில் ஏற்படக்கூடிய கோளாறுகளை வாழ்க்கை முறை அல்லது மருத்துவச் சிகிச்சைகள் மூலம் சரி செய்யக்கூடிய ஒரு முழுமையான மருத்துவக் கருவி அல்லது அமைப்பை இன்சிலிகோ மூலம் இன்னும் ஐந்தே வருடங்களில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார் சாவோரோங்கோ.
மேலும், ஒரு மனிதனின் வயதை கணித்துச் சொல்லக்கூடிய மற்றும் பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடிய ஆழமான நரம்பியல் வலையமைப்பு ( deep neural networks ) தொழில்நுட்பத்தையும் இந்த ஆய்வில் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், முதுமை மற்றும் அது தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும், முதுமையால் உடலில் ஏற்படும் சிதைவுகளை சரிசெய்யும் அல்லது முதுமையே வராமல் முன்கூட்டியே தடுத்துவிடும் பல்வேறு வகையான மருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் செயற்கை நுண்ணறிவுக்கு உண்டு என்கிறார்.

ஒட்டுமொத்தமாக, மனிதர்களை மரணத்திலிருந்து காக்கும் அசாத்திய திறன் செயற்கை நுண்ணறிவுக்கு நிச்சயமாக உண்டு என்று அடித்துச் சொல்கிறார் அலெக்ஸ் சாவோரோங்கோ.